ஒரு தவறு செய்தால்!
அன்று புயலால் பள்ளிக்கு விடுமுறை.மதிய வேளையில், ரம்யாவும், ராதாவும் வீட்டிற்குள் பந்து விளையாடினர். மூத்தவள் ரம்யா பந்தை உருட்டி விட, இளையவள் ராதா பிடித்து திரும்பவும் உருட்டி விட்டாள்.சிறிது நேரத்தில் அந்த விளையாட்டு சலிப்பு தந்தது. ''அக்கா... பந்தை துாக்கிப் போட்டு பிடிக்கலாம்...'' ''வேண்டாம்... மின் விளக்கு மீது விழுந்தால் உடைந்து விடும். அப்புறம் அம்மாவிடம் அடி வாங்க வேண்டியிருக்கும்...''பயமுறுத்தினாள் ரம்யா.''அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நான் சரியாகப் பிடிச்சுடுவேன்...''தங்கையின் நச்சரிப்பு தாங்காமல், பந்தை லேசாக உயர்த்திப் போட்டாள் ரம்யா.சரியாகப் பிடித்து விட்டாள் ராதா.''சொன்னதை செய்து விட்டேன் பார்த்தாயா...''அக்காவை பார்த்து சிரித்தாள் ராதா.பந்தின் உயரம் மெல்ல மெல்ல அதிகரித்தது. ஒரு கட்டத்தில், 'நீயா, நானா' என்ற அளவுக்கு போட்டி போடத் துவங்கினர். போட்டி முற்றிய போது அக்கா போட்ட பந்தை பிடிக்க முடியாமல் தவற விட்டாள் ராதா. கை கொட்டி சிரித்தாள் ரம்யா.அதனால் ஏற்பட்ட கோபத்தில், மிக உயரத்தில் பந்தை துாக்கிப் போட்டாள் ராதா. அது சுவர் கடிகாரத்தின் மீது விழுந்து அதை கீழே தள்ளியது.'படீர்...' என்ற சத்தத்துடன் விழுந்தது கடிகாரம். அதன் முகப்பு கண்ணாடி உடைந்து, சில்லு சில்லாய் சிதறியது. விபரீத சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து ஓடி வந்தார் அம்மா.சகோதரிகள் இருவரும் பயத்தில் பதுங்கினர்.உடைந்து கிடந்த கடிகாரம் மற்றும் பக்கத்தில் உருண்ட பந்தை பார்த்து, நிகழ்வை ஊகித்தபடி, ''யார் வேலை இது...'' என கோபத்துடன் கேட்டார் அம்மா.''நீ தானே அத்தனை உயரத்துல துாக்கிப் போட்ட...''தங்கையை முறைத்தாள் ரம்யா.''நீ தான் பிடிக்காம தவற விட்ட...''பதிலுக்கு முறைத்தாள் ராதா.''ம்... சொல்லுங்க. யார் உடைச்சது...''அம்மாவின் குரலில் மிரட்டல் அதிகமானது.''நான் தான்... தெரியாம செய்துட்டேன்...'' திணறினாள் ரம்யா. எதுவும் பேசாமல் அவளை அணைத்தார் அம்மா. அடி கிடைக்கும் என, எதிர்பார்த்தவளுக்கு அரவணைப்பு திகைப்பை தந்தது.அது மறையும் முன், ''இப்படித் தான் உண்மையை ஒத்துக்கணும். தெரியாமல் தவறு செய்திருந்தாலும், தைரியத்துடன் கூறணும். செய்த தவறை உணர்ந்தால் மட்டுமே, மறுமுறை அதன் மீது கவனமாக இருப்போம்; தவறு செய்தாலும் மறைக்க கூடாது; புரிஞ்சுதா...''நிதானமாக எடுத்து கூறினார் அம்மா.ஓடிப்போய் முறம் எடுத்து வந்தாள் ராதா. அனைத்தையும், கவனமாக கூட்டி குப்பைக் கூடையில் போட்டார் அம்மா.மகிழ்ச்சியுடன் அன்றைய நாள் கடந்தது.பட்டூஸ்... தவறு செய்து விட்டாலும் அதை மறைக்க கூடாது; ஒப்புக்கொண்டால் திருந்துவதற்கு தக்க வாய்ப்பு கிடைக்கும்!சகா