ஒளிரும் எதிர்காலம்!
ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே, முனிசிபல் உயர்நிலைப்பள்ளியில், 1965ல், 11ம் வகுப்பு படித்தேன்.தமிழாசிரியராக இருந்த புலவர் ஆறுமுகம், பாடம் நடத்தியதோடு, கட்டுரை எழுதவும், மேடையில் பேசவும் முறையாக பயிற்சி தந்தார். அதை மனங்கொண்டு, தீவிரமாக முயன்று, கட்டுரை, பேச்சு, திருக்குறள் ஒப்பித்தல், ஓரங்க நடிப்பு போன்ற போட்டிகளில் பரிசுகளை அள்ளினேன். அனைத்து பள்ளி அளவில் நடந்த பேச்சு போட்டியில் முதல் பரிசு வென்றதும், 'ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது...' என வாழ்த்தினார் தமிழாசிரியர். அதன் தொடர்ச்சியாக, கல்லுாரியில் படித்த போதும், பரிசு வேட்டை தொடர்ந்தது. அந்த சமயத்தில் நல்லாசிரியர் விருது பெற்றிருந்தார், பள்ளி தமிழாசிரியர். நேரில் சென்று வணங்கி பாராட்டினேன். பின், படிப்பு, வேலை என்று காலம் நகர்ந்ததால், அவருடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. தற்போது, என் வயது, 75; பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தமிழில், கட்டுரைகள் எழுதுவதுடன், ஆன்மிக சொற்பொழிவும் நிகழ்த்தி வருகிறேன். அண்மையில், அமெரிக்கா, டெக்சாஸ் நகரில் பேசி நடிக்கும் போட்டியில், இரண்டாம் பரிசு பெற்றேன். இதுபோன்ற நிகழ்வுகளில் பாராட்டி கரவொலி எழுப்பும் போது, நெஞ்சில் உறைந்திருக்கும் அந்த தமிழாசிரியரை வணங்கி மகிழ்கிறேன்!- ஏ.வெங்கடேசன், சென்னை.தொடர்புக்கு: 99947 18944