உள்ளூர் செய்திகள்

வேழமலைக்கோட்டை! (12)

முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில், இளவரசர் மாயமானார். அப்போது, நாட்டின் எல்லை காட்டில் நடமாடிய எதிரிகளை முறியடிக்க அரண்மனை முக்கியஸ்தர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. காட்டில் மாறுவேடத்தில் தேடிய வீரர்கள் பயங்கர அதிர்ச்சி அடைந்தனர். இனி - வீரர்களின் முகம், உடலின் பல பகுதிகள் வீங்கி இருந்தன. மாறு வேடத்தில் சென்ற, ஐந்து வீரர்களின் நிலையையும் பார்த்து அதிர்ந்தனர் ராஜகுருவும், தளபதியும்.கண்கள், வாயில் கடுமையாக வீங்கி இருந்ததால், பேசுவதற்கே சிரமப்பட்டனர். அவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்தார் அரண்மனை வைத்தியர்.'என்ன ஆயிற்று வைத்தியரே...' என்று கேட்டார் ராஜகுரு.'வீரர்களை காட்டில் குளவிகள் கொட்டியுள்ளன. அவற்றின் கொடுக்கை அகற்றி வருகிறோம்; முற்றிலுமாக அகற்றிய பின், பச்சிலை பற்று போடுவோம்; வீக்கம், வலி குறைய, 6 மணி நேரம் ஆகும்...'பதிலளித்தார் வைத்தியர்.'இவர்கள், நம்பிக்கைக்குரிய வீரர்கள். மேலோட்டமாக பார்க்காமல், சிரத்தையுடன் செயல்படுவர் என்பதால், தேர்ந்தெடுத்து காட்டிற்குள் அனுப்பினேன்...'ராஜகுருவிடம் கூறினார் தளபதி.கொடுக்குகள் பிடுங்கி, பச்சிலை அரைத்து, பூசிய சிறிது நேரத்திற்கு பின், முகம் வீக்கம் குறைந்தது. பின், அந்த குழுவுக்கு தலைமை வகித்தவன் பேசினான்.'நாங்கள், கவனத்துடன், நான்கு கூடாரங்களையும் அடைந்தோம். அதன் மீது, இலை, தழைகளை வெட்டி போட்டு, துாரத்தில் பார்த்தால், புதர் வடிவ தோற்றமளிக்கும் வகையில் இருந்தது. இலை, தழைகள் வாடி இருந்ததே தவிர உலரவில்லை; எதிரிகள் அந்த கூடாரங்களை இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் தான், அமைத்திருப்பர் தளபதி...'கண்ட நிகழ்வுகளை வருணித்தான் குழுத்தலைவன்.குளவி கொட்டிய வலியை சமாளிக்க, சற்று முகம் சுளித்து, ஆசுவாசப்படுத்தியபடி தொடர்ந்தான்.'எதிரிகள் அங்கு இல்லாததை உறுதி செய்த பின், முதல் கூடாரத்தில் நுழைந்தோம். அங்கு, வலது மூலையில், பெட்டகம் ஒன்று இருந்தது; அதற்குள், தகவல் எழுதப்பட்ட ஓலைகள் இருக்கலாம் என எண்ணி திறந்தோம். ஆனால், குளவிகளை அடைத்து வைத்திருந்தனர். அவை, வெறிகொண்டு எழுந்து ஒரே நேரத்தில் பறந்து பதம் பார்த்தன. கடுமையான வலியுடன் முகம், கைகள் வீங்க ஆரம்பித்ததால், வேறு வகையில் செயல்பட முடியவில்லை.எனவே, உடனே புறப்பட்டு நாட்டுக்கு வந்தோம்...'தகவலை தெளிவாக தெரிவித்தான் குழுத்தலைவன்.'நல்ல வேளை, அவை, விஷ குளவிகள் இல்லாததால், உடலில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை; சிறு வீக்கம் இருக்க கூடும்; அதுவும், விரைவில் வற்றி விடும்...' என்றார் வைத்தியர்.காட்டில் நிகழ்ந்து வருவது குறித்து தெளிவற்ற சித்திரமே கிடைத்ததால், தளபதியும், ராஜகுருவும் குழம்பினர்.'தளபதி... இது சாதாரண விஷயம் இல்லை. சிக்கல் இருப்பதால் தான், காட்டிற்குள் களமிறங்கிய எதிரிகள், மறைமுகப் போரில் ஈடுபடுகின்றனர். எதிரிகள் நேரடியாக போரை எப்போது தொடுப்பர் என தெரியாது; நாம், தயாராக அவகாசம் அளிப்பரா என்பதும் கேள்வி குறி தான்...'ராஜகுருவின் குரலில் மனக்கவலை தெரிந்தது.'கோட்டை பலமும், பாதுகாப்புடனும் இருப்பதால், எதிரிகள், நம் மீது இதுவரை போர் தொடுத்ததில்லை. அதனால், நம் வீரர்களுக்கு போர்க்கள அனுபவம் அறவே இல்லை. அதனால் தான் திணறுகின்றனர்...' என்றார் அமைச்சர்.'நீங்கள் கூறும் கருத்து ஏற்புடையது தான்...'ஒத்துக் கொண்டார் தளபதி.'அடுத்து என்ன செய்வது...'தீவிரமாக ஆலோசிக்க ஆரம்பித்தனர்.'நடந்த நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து, அதற்கேற்ப வியூகம் அமைத்தால், எதிரிகளை முறியடிக்க இயலும்...' என்றார் ராஜகுரு.'முதலில், ஒற்றனின் செய்தி வந்தது. அதை தொடர்ந்து, கோட்டை கண்காணிப்பில் ஈடுபட்ட சமயம், எதிரி நாட்டு வீரர்கள், காட்டிற்குள் இருப்பதை அறிந்தேன். உடனே, படையை அனுப்பினோம். அதில், இருவரை சிறைப் பிடித்தனர்...'ஒரு வீரன் தப்பி வந்து, எதிரி தரப்பில், 50 வீரர்கள் இருப்பதாக தெரிவித்தான். விரைந்து, படைக் குழுக்களை அனுப்பினோம். நாம் அனுப்பிய மோப்ப நாய்களை கொன்று, காலாட் படையின் எட்டு வீரர்களை சிறை பிடித்து விட்டனர்...'குடிமக்களில் சிலரை காட்டுக்கு அனுப்பி வேவு பார்த்து வர கூறினோம். எதிரிகள், கூடாரம் அமைத்து இருப்பதாய் தெரிவித்தனர். பின், உளவு பார்க்க, ஐந்து பேருடைய குழுவை அனுப்பினோம். அவர்களை, குளவியால் தந்திரமாக தாக்கி முறியடித்துள்ளனர் எதிரிகள்...'சுருக்கமாக விளக்கினார் தளபதி.'எதிரிகள், 50 பேரை, நம் வீரர்கள் கண்டு இருந்தாலும், நுாற்றுக்கணக்கான வீரர்கள், காட்டில் மறைந்துள்ளனர் என்றே தெரிகிறது. இவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை; கூடாரம் அமைத்து தங்கியிருப்பதை பார்த்தால், போருக்கான ஆயத்தம் தான் என்பது உறுதி...'ராஜகுரு, அமைச்சர், தளபதி மற்றும் வைத்தியர் முகத்தில் குழப்பம் தெரிந்தது.'இதில், அமைச்சரின் ஆலோசனை ஏதும் இருக்கிறதா...' என்று கேட்டார் ராஜகுரு.'எதுவுமில்லை. காட்டில் மறைந்துள்ள எதிரிகளை முறியடிக்க தளபதி தான் வழி கூற வேண்டும்...''எதிரிகள் வெளிப்படையாக செயல்பட்டால், நம் வீரர்கள் நிச்சயம் எளிதில் வென்றெடுப்பர். அம்பு, ஈட்டி, வாள் போன்ற ஆயுதங்களை திறம்பட கையாளுவதில் நம் வீரர்கள் வல்லவர்கள். அடர்ந்த காட்டுக்குள், குதிரையில் சென்றும் தாக்குதல் நடத்த இயலும். ஆனால், மறைந்து போர் செய்ய துணிவோர், தங்களை வெளிப்படுத்தவே இல்லையே... அது தான் பிரச்னை...' என்றார் தளபதி.இப்படி உரையாடல் நடந்து கொண்டிருந்த போது குறுக்கிட்டார் வைத்தியர்.'எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது...''கூறுங்கள்...''இளவரசர், எதிரிகளால் சிறைப் பிடிக்கப்பட்டு இருக்கும் செய்தியை மட்டும் தவிர்த்து, மறைந்திருப்போரை எவ்வாறு கையாளுவது என மன்னரிடம் ஆலோசனை கேட்கலாம்...'நால்வரும், மன்னரை சந்தித்த போது, அவரின் கோணம் வேறு விதமாக இருந்தது.- தொடரும்...ஜே.டி.ஆர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !