உள்ளூர் செய்திகள்

ரகசியம்!

அரண்மனையில் வைக்க தத்ரூபமான சேவல் ஓவியம் வாங்க நினைத்தார் மன்னர் மகிழன். அந்த தகவல் காட்டுத் தீ போல் பரவியது. ஓவியர்கள் அங்கு கூடினர். அவர்கள் வரைந்த ஓவியத்தை பார்த்தார் மன்னர். எதுவும் திருப்தி ஏற்படுத்தவில்லை.நட்புறவில் இருக்கும் நாட்டு ஓவியர்களுக்கும், சேவல் ஓவியம் வேண்டி அறிவிப்பாக ஓலை அனுப்பினார் மன்னர். குறிப்பிட்ட நாளன்று, வரைந்த ஓவியங்களை மன்னர் பார்வைக்கு வைத்தனர் அங்குள்ள ஓவியர்கள்.அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார் மன்னர். அதற்காக சிறு வயதில், தனக்கு ஓவியம் கற்பித்த ஆசிரியரை, நீதிபதியாக நியமித்து அறிவித்தார் மன்னர். அனைத்து ஓவியங்களையும் பார்த்தார் ஓவிய ஆசிரியர்.அவரிடம், 'சிறந்த ஓவியத்தை தேர்வு செய்து விட்டீரா...' என கேட்டார் மன்னர்.'எதுவும் தகுதியானது இல்லை. வேண்டுமென்றால், இந்த அறையில், சேவல்களை விடுவோம். தன் இனத்தை பார்த்ததும், அவற்றுக்கு சண்டைப் போட தோன்றும். எந்த ஓவியத்தை பார்த்து, சண்டையிடுகிறதோ அதுவே மிகச் சிறந்தது என முடிவு செய்யலாம்...'ஓவியர் கூறிய ஆலோசனையை ஏற்றார் மன்னர். ஓவிய அறையில் நிறைய சேவல்களை விட ஏற்பாடு செய்யப்பட்டது. ஓவியங்களைப் பார்த்து, சண்டைப் போடாமல், எந்த உணர்வையும் காட்டாமல் ஒவ்வொன்றாய் வெளியேறின சேவல்கள்.'குருவே... சண்டைப் போட துாண்டும் சேவல் ஓவியத்தை நீங்கள் ஏன் வரைய கூடாது...'ஓவிய ஆசிரியரிடம் கேட்டார் மன்னர்.'உங்கள் சித்தம். எனக்கு, ஆறு மாத கால அவகாசம் தேவை மன்னா...'வேண்டுகோளை ஏற்று சம்மதம் தெரிவித்தார் மன்னர்.ஆறு மாதத்திற்கு பின் -அதே அறையில், அனைத்து ஓவியர்களும் கூடினர். ஓவிய ஆசிரியர் கையில் ஓவியம் இல்லாததை பார்த்து, அதிர்ச்சி அடைந்த மன்னரிடம், 'சிறிது நேரம் பொறுத்திருக்க வேண்டுகிறேன். அரண்மனையிலே அரை மணி நேரத்தில், நீங்கள் விரும்பிய ஓவியத்தை வரைகிறேன்; அதற்கு உபகரணங்கள் தேவை...' என்றார் ஓவிய ஆசிரியர்.உபகரணங்கள் வழங்கப்பட்டன. மற்ற ஓவியங்களுடன், தான் வரைந்ததையும் வைத்தார் ஓவிய ஆசிரியர். மீண்டும் அறைக்குள் சேவல்கள் அனுப்பப்பட்டன. ஓவிய ஆசிரியர் வரைந்த ஓவியத்தை கண்டதும் தடுமாறியபடி சண்டைக்கு சென்றது ஒரு சேவல். போட்டியில் வெற்றி அடைந்தார் ஓவிய ஆசிரியர்.'குருவே... தாங்கள், ஆறு மாதமாக ஓவியம் வரையாமல், கடைசி தருணத்தில் அரை மணி நேரத்தில் வரைந்தது ஏன்...' என்றார் மன்னர்.'நீங்கள் வழங்கிய கால அவகாசத்தில், சேவல்கள் எப்படி நடக்கிறதோ, துாங்குகிறதோ, உணவு உண்கிறதோ அது போன்றே நானும் செயல்பட்டேன். இடைப்பட்ட காலத்தில் அவற்றுடன் ஒன்றிப்போய் விட்டேன். பின், நிதானமாக சேவல் ஓவியத்தை வரைந்தேன்...' என்றார் ஓவிய ஆசிரியர். எந்த செயலிலும், முழு ஈடுபாடு அவசியம் என்பதை உணர்ந்தார் மன்னர்.பட்டூஸ்... எந்த செயலையும் விரும்பி அர்ப்பணிப்புடன் செய்வது தான் வெற்றியை தரும்!அசோக்ராஜா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !