உள்ளூர் செய்திகள்

அடி உதை!

மயிலாடுதுறை, அரசு நடுநிலைப் பள்ளியில், 1968ல், 6ம் வகுப்பு படித்தேன்.வகுப்பாசிரியர் செல்வராஜ் கண்டிப்பானவர். அன்று ஆங்கில பாடம் படிக்காததால் உள்ளங்கை வீங்கும்படி கடுமையாக அடித்து தண்டித்தார். இதையறிந்து கடும் கோபமுற்ற என் தந்தை மறுநாள், அடியாள் ஏற்பாடு செய்து, அவரை அடித்து துன்புறுத்தினார். இந்த விபரம் அந்த ஆசிரியருக்கு தெரிய வர, அன்று மாலை என் வீட்டிற்கு வந்தார். சற்றும் எதிர்பாராத விதமாக, 'ஆத்திரம் தீரும் வரை, என்னை அடியுங்கள்...' என தந்தையிடம் பிரம்பை கொடுத்தார். மனம் வருந்தி, கண்ணீர் மல்க மன்னிப்பு கோரினார் தந்தை. மன்னித்ததுடன் மாலை நேரத்தில் என்னை வீட்டுக்கு அழைத்து பாடங்கள் கற்றுக் கொடுத்தார். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்தேன்.தொடர்ந்து படித்து, தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். அந்த ஆசிரியரின் அன்பு, கருணை மற்றும் நற்செயல்களை பின்பற்றி வாழ்வில் உயர்ந்தேன்.எனக்கு, 65 வயதாகிறது. பணி ஓய்வு பெற்று அமைதியாக வாழ்கிறேன். நற்குணங்களுடன் விளங்கிய அந்த ஆசிரியரை தெய்வமாக மதித்து வணங்கி போற்றுகிறேன்.- டி.எஸ்.விஸ்வராம், புதுச்சேரி.தொடர்புக்கு: 93602 66439


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !