உள்ளூர் செய்திகள்

அன்பின் ஆழம்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கொள்ளுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், 1967ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... அன்று வகுப்பாசிரியர் லட்சுமணன் ஆங்கில பாடம் நடத்தி கொண்டு இருந்தார். அப்போது, என் தந்தை வகுப்பறைக்கு வந்து, அவசரமாக என்னை அழைத்தார். உடனே வெளியேறி விபரம் கேட்டேன். பரபரப்பு தணியாமல், 'கட்டிப்போட்டிருந்த பசுமாடு மூக்கணாங்கயிறு அறுந்து ஓடி விட்டது; அதை பிடிக்க வேண்டும்...' என அழைத்து சென்றார். தந்தையை அந்த பசுவுக்கு பிடிக்காது. அருகில் சென்றால், எட்டி உதைக்கும். அடங்காமல் குறும்பு செய்யும். அன்புடன் நான் பழகியிருந்ததால் எப்போதும் என் பேச்சுக்கு பணியும். அழைப்புக்கு இணங்கும். நாக்கால் என் காலை நக்கி நெகிழ்வை காட்டும். கட்டவிழ்ந்து துாரத்தில் மேய்ந்த அதன் அருகே சென்று, 'லட்சுமி...' என அழைத்தேன். கனிவு பொங்க என்னை பார்த்தபடி நின்றது. அதன் கழுத்துப் பகுதியை தட்டிக் கொடுத்தேன். நெற்றியில் வருடியபடி தாடையை நீவினேன். மென்மையாக கழுத்தை நீட்டியது. இது தான் சமயம் என கயிறால் கட்டி, தந்தையிடம் ஒப்படைத்தேன். வகுப்பறை திரும்பியதும் விபரம் கேட்டார் ஆசிரியர். நடந்ததை கூறியதும், 'மிரண்டு ஓடிய மாடு, அன்பு செலுத்தியதால் உனக்கு அடங்கியுள்ளது... வாழ்வில் எப்போதும் கனிவை கடைபிடி...' என உற்சாகம் தந்தார். அது மனதில் பதிந்தது. தொடர்ந்து, ஆட்டோ மொபைல் பொறியியல் படித்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். என் வயது, 70; தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். எதிரியையும் நண்பனாக பாவிக்கும் மனப்பான்மையால் பணியில் சிறப்புகள் பெற்றேன். கனிவை கடைபிடித்தால் வாழ்வு மகிழ்ச்சியாகும் என உணர்த்தி, வாழ்த்திய அந்த ஆசிரியர் நினைவு மனதில் பசுமையாக உள்ளது.- பா.பாஸ்கரன், கோவை.தொடர்புக்கு: 94879 95684


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !