வேழமலைக்கோட்டை! (13)
முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில், இளவரசர் மாயமானார். அப்போது, நாட்டின் எல்லை காட்டில் நடமாடிய எதிரிகளை முறியடிக்க மாறுவேடத்தில் சென்ற வீரர்களை, காட்டுக்குளவிகள் பயங்கரமாக தாக்கின. நிலைகுலைந்த வீரர்கள் நாட்டுக்கு திரும்பினர். எதிரிகளின் வியூகம் பற்றி அறியமுடியால் திணறிய அரண்மனை முக்கியஸ்தர்கள், மன்னரை சந்தித்தனர். இனி - மன்னரை சந்தித்து நடந்த விஷயங்களை தொகுத்து கூறினார் ராஜகுரு.கவலை தோய்ந்த முகத்துடன் அதை கவனமாய் கேட்ட மன்னர், 'அதனால் தான் முன்னரே சொல்லி கொண்டிருக்கிறேன். இளவரசரை விடுவித்து களத்துக்கு அனுப்புங்கள்...' என்றார்.'இளவரசர் தான் இந்த நாட்டிற்கு ஒரே சொத்து. சிறுவனான அவரைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. என்ன நடந்தாலும், அவரை இதில் தொடர்புபடுத்தாமல், சமாளிக்க வேண்டும்...' உறுதியான குரலில் கூறினார் ராஜகுரு.'எனக்கு மட்டும் இளவரசரைக் களப்பலி கொடுக்க வேண்டும் என்று ஆசையா என்ன... நாடு இருக்கும் சூழ்நிலையில் தான் அப்படி சொன்னேன்...''அதை தவிர்த்து, நீங்கள் தான், ஒரு நல்ல ஆலோசனை கூற வேண்டும் மன்னா...'மன்னரின் முகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடின.'இதற்கு ஒரு வழி இருக்கிறது...' என்று மெல்ல மன்னர் ஆரம்பித்தார். மற்றவர்கள் ஆர்வமுடன் தலை நிமிர்ந்தனர்.'அண்டை நாட்டு மன்னர்கள் அனைவருக்கும் ஓலை அனுப்ப வேண்டும்...''என்னவென்று மன்னா...''வாள், அம்பு போன்ற ஆயுதங்களை, விலைக்கு வாங்க விரும்புகிறோம். உங்களால் எவ்வளவு தர முடியும் என்று விபரம் கேட்க வேண்டும். அவர்கள் தரும் பதில் ஓலையிலிருந்து, இங்கே காட்டுக்குள் களம் இறங்கியிருப்பது யார் என்பதை புரிந்து கொள்ளலாம்...''மிகச் சிறப்பான யோசனை மன்னா...' பாராட்டினார் அமைச்சர்.'ஓலையின் ஷரத்துக்களை ராஜகுரு தயாரிக்கட்டும். அமைச்சர், துாதுவர்களை தேர்ந்தெடுக்கட்டும். தளபதி பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யட்டும்; இது, என் உத்தரவு...' என்றார் மன்னர்.வேங்கை நாடு, பொதிகை நாடு, மருத நாடு மற்றும் களநில குறுமன்னர்கள் உள்ளிட்ட, அனைத்து மன்னர்களுக்கும், துாதுவர்கள் வழியாக ஓலை அனுப்பப்பட்டது. ஆயுதம் கேட்டு ஓலை எடுத்து சென்ற துாதுவர்கள், பதிலுடன் திரும்ப ஆரம்பித்தனர். ஆலோசனை கூடத்தில் இருந்த கூட்டாளிகளுடன் தகவலை பகிர்ந்தார் தளபதி.'தொலைதுாரம் உள்ள நாடுகளுக்கு சென்ற வீரர்களை எதிர்பார்த்து இருக்கிறேன்...''நாம் அனுப்பிய, துாதுவர்களில் எத்தனை பேர் திரும்பி இருக்கின்றனர்...''அமைச்சரே... ஆறு பேர் திரும்பி விட்டனர்; இதோ அவர்கள் எடுத்து வந்த பதில் ஓலை...'குழலில் போடப்பட்டு முத்திரை இடப்பட்ட ஓலைச்சுவடிகளை அமைச்சரிடம் தந்தார் தளபதி. வாங்கி ஒவ்வொன்றாக பிரித்து பார்த்து ராஜகுருவிடம் கொடுத்தார்.'ஆக இந்த ஆறு பேரில், நால்வர் அம்புகளை தருவதற்கும், மீதமுள்ள இருவர், வாள்களை தயாரித்து தருவதற்கும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அப்படியானால், இந்த ஆறு மன்னர்களில், எவரும் இங்கு களம் இறங்கவில்லை என்று தெரிகிறது...' அமைச்சர் கூறியதை மெல்ல தலையை அசைத்து ஆமோதித்தார் ராஜகுரு.'இன்னும் வரவேண்டியது மூவர் மட்டுமே...''வேங்கை நாட்டுக்கு சென்ற துாதுவன் வந்து விட்டானா...''அவன் அங்கிருந்து புறப்பட்டு விட்டதாக ஒற்றனிடமிருந்து செய்தி வந்துள்ளது அமைச்சரே...''எனக்கு என்னவோ வேங்கை நாட்டின் மீது தான் சந்தேகம் உள்ளது...''எதுவாக இருந்தாலும், இன்னும் சில நாளில் தீர்ந்து விட போகிறது...'குறுக்கிட்டு கூறினார் ராஜகுரு.பொதிகை நாட்டு மன்னருக்கு ஓலை எடுத்து சென்ற துாதுவன் வந்து விட்ட செய்தியை கூறினான் அரண்மனை சேவகன்.'வரச் சொல்லுங்கள்...' ராஜகுரு சொல்ல அவன் வந்தான்.'பதில் ஓலையை கொடு...'அவசரப்பட்ட அமைச்சரிடம் ஓலையை நீட்டியவன், 'அதை விட முக்கிய செய்தி ஒன்று உள்ளது...' என்று பரபரப்புடன் சொல்ல, ஓலையை வாங்காமல் நிமிர்ந்தார் ராஜகுரு. மற்றவர்களும் என்ன என்பது போல பார்த்தனர்.'நான் வரும் வழியில் காட்டில், மானோடைக்கரையில், நான்கு பேரைப் பார்த்தேன். அவர்கள் நம் நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அங்கே ஒரு கூடாரம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்...''மானோடை என்றால் இங்கிருந்து பக்கம் தானே...' கேட்டார் தளபதி.'ஆமாம்... இரண்டு காத துாரம் கூட இருக்காது தளபதி...''அவர்கள் உன்னை பார்த்தனரா...''இல்லை... அவர்கள் இருக்கும் இடத்தில் அசைவை பார்த்ததும், என்னை மறைத்து, அங்கு நடப்பதை கவனித்தேன். பின், அவர்கள் கண்ணில் படாமல் அவசரமாக வந்து விட்டேன்...'ராஜகுருவும், அமைச்சரும் தளபதியிடம் திரும்பினர்.'நான், உடனே வீரர்களை அழைத்து சென்று, அவர்களை சிறைபிடித்து வருகிறேன்...''ஒவ்வொரு முறை நம் வீரர்கள் அவர்களை தாக்க செல்லும் போதும், ஏதாவது இழப்பு ஏற்பட்டபடியே இருக்கிறது. அதனால், கவனமுடன் செயல்பட வேண்டும்...' எச்சரித்தார் ராஜகுரு.'சரியாக வியூகம் அமைத்து, நானே நேரில் சென்று, அவர்களை சிறைப்பிடித்து வருகிறேன்...' என்றார் தளபதி.'அந்த நான்கு பேரை மட்டும் சிறைப்பிடித்து விட்டால் போதும். வந்திருப்பது எந்த நாட்டை சேர்ந்தவர்கள், எவ்வளவு பேர் வந்திருக்கின்றனர், அவர்கள் திட்டம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்...' என்றார் அமைச்சர்.'நீங்கள் சொல்வது சரி தான் அமைச்சரே...' என்றார் ராஜகுரு.'இந்த தாக்குதலை எப்படி திட்டமிட போகிறீர்...''நான், 50 வீரர்களுடன் செல்லலாம் என்று நினைக்கிறேன் ராஜகுருவே... இங்கிருந்து காட்டின் ஆரம்பம் வரை, குதிரையில் செல்ல வேண்டும். பின், குதிரைகளை அங்கே விட்டு, ஆயுதங்களுடன் சத்தம் எழுப்பாமல் அவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கி நாலா புறமும் வியூகம் அமைத்து, சூழ்ந்து சிறைப்பிடித்து வர வேண்டியது தான்...''திட்டம் சிறப்பாக தான் இருக்கிறது. துல்லியமாக செயல்படுத்துங்கள்...' என்றார் அமைச்சர்.ஆனால், அங்கே அவர்களுக்கு வேறு பிரச்னை காத்திருந்தது.- தொடரும்...ஜே.டி.ஆர்.