நன்மை நாடகம்!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், மகாத்மா வித்யாலயா பள்ளியில், 2015ல், தற்காலிக ஆசிரியையாக பணியாற்றிய போது நடந்த சம்பவம்...அன்று, என் வகுப்பு மாணவன் ஒருவன் மதிய உணவு எடுத்து வரவில்லை. அவனிடம் விசாரித்த போது, 'அம்மா எடுத்து வருவார்...' என்றான். அந்த நேரத்தில், அனைத்து மாணவர்களும் சாப்பிட சென்றனர்.நீண்ட நேரம் காத்திருந்த பின்னும், அவனுக்கு உணவு வரவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்ததால், என் உணவை சாப்பிட சொன்னேன். மறுத்தவன், 'அம்மா வரும் வரை காத்திருந்து உண்பேன்...' என பிடிவாதம் செய்தான். எவ்வளவு முயற்சித்தும் தவிர்த்து விட்டான்.உணவு நேரம் முடிந்ததால் வேறு வழியின்றி தலைமையாசிரியை ராணி முருகேசனிடம், அழைத்து சென்று நடந்ததை விவரித்தேன். மிகவும் இயல்பாக, 'உன் தாய்க்கு, உடல்நிலை சரியில்லையாமே... சமைக்க முடியாததால் உணவகத்தில் வாங்கி கொடுக்க பணம் தந்து சென்றுள்ளாரே...' என்று அவனிடம் கூறினார். பிடிவாதத்தை தளர்த்தி சாப்பிட ஒப்புக் கொண்டான்.உண்மையில் அவர் கூறியது போல் எதுவும் நடந்திருக்கவில்லை. அந்த நேரத்தை கருத்தில் கொண்டு, நிலைமையை சீராக்க கடைபிடித்த யுக்தி அது என தெரிந்து கொண்டேன். தலைமையாசிரியை தாயுள்ளத்துடன் நடந்து கொண்டது நெகிழ்ச்சி தந்தது.என் வயது, 31; இல்லத்தரசியாக இருக்கிறேன். பள்ளியில் பணியாற்றிய போது நடந்த அந்த சம்பவம் நினைவில் தங்கியுள்ளது. அவ்வப்போது என் குழந்தைகளிடம் கூறி, அந்த தலைமையாசிரியையை பெருமிதப்படுத்தி வருகிறேன்.- கு.தனலட்சுமி, விருதுநகர்.