இளஸ் மனஸ்! (255)
அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...என் வயது, 17; அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி. எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கணும்னு சொல்றாங்களே... மகிழ்ச்சி என்றால் என்ன... அது எப்படி உருவாகிறது; அதன் விளைவுகள் என்ன... பிறரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி... தெளிவாக விளக்குங்கள்.இப்படிக்கு,அழ.சுபத்ரா தேவி.அன்பு மகளே...நல்வாழ்வும், மனநிறைவும் உடைய நிலையே மகிழ்ச்சி என அழைக்கப்படுகிறது. மகிழ்ச்சி என்பது அகத்தை உறுதி செய்யும் முழுமையான நினைவு. என்ன நினைக்கிறாயோ... சொல்கிறாயோ... செய்கிறாயோ... இந்த மூன்றையும் இணக்கமாக, ஒரே அலைவரிசையில் செய்ய முடிவது தான் மகிழ்ச்சி.சிறு, சிறு மகிழ்ச்சிகளின் தொகுப்பே வாழ்க்கை. அது வெளியில் இருந்து வருவது அல்ல; உள்ளிருந்து பீரிடுவதாக மகான்கள் போதித்துள்ளனர். எதையும், இயல்பாக பார்க்கும் மனோபாவம் தான் மகிழ்ச்சிக்கான அடிப்படை.மகிழ்ச்சியாக இருக்கும் போது, உடலில் டோபமைன், செரோடோனின், என்டார்பின்ஸ் ஆக்ஸிடோசின், நார்எபிநெப்ரின்ஸ் போன்ற, அட்ரினலின் ஹார்மோன்கள் சுரக்கின்றன. மகிழ்ச்சியான மனிதர்கள் வெற்றியாளர்களாக, குறிக்கோளை அடைபவர்களாக, ஆரோக்கியமாக நீண்ட ஆயுள் உடையவர்களாக, எளிதில் எதையும் கற்று, பிறருக்கு சொல்லி தருவோராக, பிற மனிதர்களை மதிப்பவர்களாக இருக்கின்றனர்.மூன்று வகையான மகிழ்ச்சிகள் உள்ளன.* நேர்மறை உணர்வுகளால் நிரம்பிய இனிமையான வாழ்க்கை* பணிக்கும், பொழுதுபோக்குக்கும் உரிய நேரம் ஒதுக்கி வாழும் சிறப்பு வாழ்க்கை* பிறருக்கு உதவி மகிழும் அர்த்தப்பூர்வ வாழ்க்கை.மகிழ்ச்சியாக இருக்க தேவைப்படும் நேர்மறை உணர்வுகள் பற்றி பார்ப்போம்... குதுாகலம், அற்புதம், பெருமகிழ்ச்சி, விளையாட்டுத்தனம், நன்றி, நகைச்சுவை, உத்வேகம், காதல், இரக்கம், நம்பிக்கை...படைப்புத்திறன், ஆர்வம், உற்சாகம், அமைதி, அனுபவிப்பு, தலைமை பண்பு, பச்சாதாபம், மன உறுதி, திருப்தி, இசை, நுண்கலை, விஞ்ஞானம், கட்டடக்கலை, சமையல், வாசித்தல், எழுதுதல், ஓவியம் வரைதல், இசை கருவிகள் வாசித்தல், விளையாடுதல், பிராணி வளர்ப்பு போன்றவற்றுடன் ஒன்றி செயல்படுதல். இவை எல்லாம் மகிழ்ச்சிக்கான கச்சா பொருட்கள். பலத்தின் அடிப்படையில், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும், அர்த்தபூர்வமாய் நகர்த்தினால் மகிழ்ச்சி நிச்சயம்.பிறரை மகிழ்ச்சிபடுத்தும் வழிமுறைகள்:-* எண்ணம், சொல், செயலால் யாரையும் காயப்படுத்தக் கூடாது* சக மனிதர்களின் இருப்பை அங்கீகரிக்க வேண்டும்* மதத்தால், இனத்தால், மொழியால், நிறத்தால், பணத்தால் பேதம் பார்க்க கூடாது* பசித்திருப்பவருக்கு உணவு அளிக்கலாம்* மகிழ்ச்சியை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பிறரின் துக்கங்களை பகிர்ந்து ஆறுதல் படுத்த வேண்டும். தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் சுருக்கிக் கொள்ளலாம்* உருவக்கேலி இல்லாத நகைச்சுவை பிறரை மகிழ்ச்சிப்படுத்தும்.என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எண்ணமே முழு முதற்காரணம் என்பதை நினைவில் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.