உள்ளூர் செய்திகள்

தூண்டுகோல்!

நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் மேல்நிலைப் பள்ளியில், 1984ல், 10ம் வகுப்பு படித்த போது, தமிழ் துணைப்பாட சிறுகதைகளை, உரிய ஏற்ற இறக்கங்களோடு வாசிப்பேன். மிகவும் கவரும் வகையில் தெளிவுடன் படிப்பதாக, அனைவரும் பாராட்டுவர்.புதிதாக வந்திருந்த தமிழாசிரியை சோபியா, என் நிகழ்த்துதலைக் கேட்டதும், 'உச்சரிப்பில் பிழை உள்ளது. அதை திருத்திக் கொண்டால், மிகவும் கம்பீரமான குரலுக்கு சொந்தம் ஆகலாம்...' என நயமாக அறிவுரை தந்தார். அத்துடன், என் தந்தை வைத்திலிங்கத்தை அழைத்து, செய்ய வேண்டிய பயிற்சி முறைகளையும் விளக்கினார். அதன்படி, 'அழகாப்புரி அழகப்பன் வாழைப்பழத்தில் வழுக்கி விழுந்தான்' என்ற வாக்கியத்தை பிசகாமல் பேசி பயிற்சி பெற்றேன். துாக்கத்தில் கூட அதை உளறியதாக குடும்பத்தினர் சொல்லி சிரிப்பர். அயராத உழைப்பால் தமிழ் மொழியின் சிறப்பு எழுத்துக்களான, ல, ள மற்றும் ழ கரத்தை, இலக்கணப்படி உரிய மாத்திரை அளவுகளில் உச்சரித்து என் வசமாக்கினேன். அதுவே, எதிர்காலம் சிறக்க வித்திட்டது.இப்போது என் வயது, 55; புதுமையான தொழிலை தேர்ந்தெடுத்து கடும் உழைப்பை செலுத்தி தொழிலதிபராக உயர்ந்துள்ளேன். எழுதுவதில் தனித்துவத்தை காட்ட பத்திரிகை ஆசிரியராகவும் பொறுப்பு வகிக்கிறேன். மாணவ, மாணவியர் முன்னேற்றத்துக்காக பள்ளி, கல்லுாரி மற்றும் இலக்கிய மேடைகளில் உரையாற்றி வருகிறேன். இதற்கு எல்லாம் துாண்டுகோலாக இருந்தவர் அந்த தமிழ் ஆசிரியை தான். உச்சரிப்பில் ஏற்பட்டிருந்த சிறுகுறையை கவனத்தில் எடுத்து, சீர் செய்ய தக்க பயிற்சி தந்து வழிகாட்டியவரை நன்றியுடன் வணங்கி மகிழ்கிறேன்.- ம.வான்மதி, சென்னை.தொடர்புக்கு: 98417 00087


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !