வேழமலைக்கோட்டை! (18)
முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில், இளவரசர் மாயமானார். அப்போது, நாட்டின் எல்லை காட்டில் நடமாடிய எதிரிகளை பிடிக்க சென்ற படைக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அண்டை நாட்டு மன்னரிடம் உதவி கேட்க சென்ற துாதுவன், அன்று மாலையே பணி முடிக்காமல் திரும்பி வந்தான். அவனிடம் விசாரித்து புதிய வழிமுறையில் எதிரியை தாக்க திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி சென்ற வீரர்களில் சிலர் நிலை குலைந்து திரும்பினர். இனி - 'வீரர்களே... என்ன ஆயிற்று... ஏன் இப்படி நிலை குலைந்தபடி வருகிறீர்...''எதிரிகள் அங்கு தான் இருக்கின்றனர். உடனே, நம் வீரர்களுடன் சென்று தாக்குவோம்...'பதற்றத்துடன் கூறினான் வீரர்களில் ஒருவன்.'வீரர்கள் மீது, தாக்குதல் நடத்தினர் எதிரிகள். அவர்களை எதிர்த்து, பதில் தாக்குதலில் ஈடுப்படுகின்றனர் நம் வீரர்கள்...''அவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்...''தெரியவில்லை. சிறு படை தான்; ஆனால், நேரடி மோதலாக இல்லாமல் மிகவும் ஆக்ரோஷமாக பல முனையிலிருந்தும் தாக்குகின்றனர்; அவர்களை சமாளிக்க இன்னும் படை வீரர்கள் தேவை...''பல முனையில் இருந்தும் தாக்குகின்றனரா... அப்படி என்றால்...''நம் வீரர்களுடன், எதிரிகள் நேருக்கு நேர் நின்று களமாடவில்லை; மாறாக, குறுவாள், கட்டாரி போன்றவற்றை வைத்து, வெவ்வேறு திசையில் இருந்தும், தாக்குதல் நடத்துகின்றனர் தளபதி...''நம் வீரர்கள் எதிர் தாக்குதல் செய்யவில்லையா...''செய்யாமல் இல்லை. ஆனால், தாக்கும் எதிரிகள், ஒரு திசையில் இருந்து வந்து தாக்கி விட்டு, எதிர்புறம் பாய்ந்து விடுகின்றனர்; அதேசமயம், இன்னொரு திசையில் இருந்து, வேறு ஒருவன் வந்து, தாக்குதலை தொடர்கிறான்...'இதை கேட்டதும், குழம்பினார் தளபதி.'இவர்கள் வீரர்களா அல்லது ஏதேனும் வழிப்பறி கொள்ளையரா...''எங்களுக்கும் புரியவில்லை தளபதி. நம் குதிரைப்படை வீரர்களை, குதிரையிலிருந்து கீழே வீழ்த்த முனைகின்றனர் எதிரிகள்; அப்படி வீரர்கள் கீழே விழுந்த போது, தப்பி வந்த குதிரைகள் தான் இந்த ஐந்தும்...''நீங்கள் சொல்வதை பார்த்தால், எதிரிகள் முறையான போர் பயிற்சி பெற்றவர்கள் போல் தெரியவில்லையே...''அவர்களது தாக்குதல் முறையே வித்தியாசமாக இருக்கிறது தளபதி. நம் வீரர்கள் கவச உடை அணிந்திருப்பதால், ஓரளவு சமாளிக்கின்றனர்...''இனி, நாமும் விதிமுறைகளை பற்றி யோசிக்க வேண்டாம். வாருங்கள்...' என்ற தளபதி, அருகிலிருந்த மகேந்திரனை நோக்கித் திரும்பினார்.'எதிர்புறம் சென்றுள்ள மற்ற வீரர்களையும், உடனே அழைத்து வாருங்கள். நானே, நேரடியாக களத்துக்கு செல்கிறேன்...' என்றபடி, குதிரையை மானோடைக்குள் இறக்கினார். குதிரை வீரர்கள் தப்பி வந்த வழியில், தன் குதிரையை விரட்டினார் தளபதி.அவரது குதிரையும், மெய்க்காப்பாளர்கள் குதிரைகளும், நீரோட்டத்திற்கு எதிர் திசையில் தண்ணீருக்குள்ளேயே ஓட ஆரம்பித்தன.நீண்ட துாரம் சென்ற போது, ஒரு இடத்தில் சேணம் கட்டிய இரண்டு குதிரைகள் மட்டும் மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்தனர்.குதிரையை நிறுத்திய தளபதி, சுற்று முற்றும் பார்த்தார். தரையில் சில காலடித் தடங்களும், குதிரைகளின் குழம்பு பதிந்த தடங்களும் தெரிந்தன.'தளபதி... இங்கே தான் சண்டை நடந்திருக்க வேண்டும்...'மெய்க்காப்பாளர்களில் ஒருவர் சொல்ல, ஒப்புதலாக தலையசைத்தார் தளபதி.'அப்படியென்றால், சண்டையிட்டவர்கள் எங்கே...'சற்றுத் தள்ளி இரண்டு கட்டாரிகளும், ஒரு குறுவாளும் கிடந்தன. சுற்றிலும் பார்த்தார் தளபதி. அவரது பார்வை, மரங்களின், உச்சி வரை அலசியது. கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.அவருடன் வந்திருந்த மெய்க்காப்பாளர்களும், குதிரையை நிறுத்தி விட்டு அங்குமிங்கும் திகைப்புடன் பார்த்து கொண்டிருந்தனர்.'இங்கு எவருமே இல்லையே... நம் வீரர்களை சிதறடித்து விட்டனரா அல்லது சிறை பிடித்து விட்டனரா...'புரியாமல் புலம்பினார் தளபதி.குதிரையில் அந்த இடத்தை வட்டமடித்தார். கீழே கிடந்த கட்டாரியும், குறுவாளும் அவர் பார்வையில் மீண்டும் பட்டன.'அந்த கட்டாரியையும், குறுவாளையும் எடுத்து வாருங்கள்...'தளபதியின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தனர். அந்த குறுவாளையும், கட்டாரிகளில் ஒன்றையும் கையில் வாங்கிப் பார்த்தார் தளபதி.முகத்தில் சிந்தனை ரேகை ஓடியது. சுற்றும் முற்றும் பார்த்தார்.'உங்களுக்கு ஏதாவது சத்தம் கேட்கிறதா...'மெய்க்காப்பாளர்களிடம் விசாரித்தார் தளபதி.'இல்லை தளபதி... பறவைகளின் கீச்சொலியும், பூச்சிகளின் ரீங்காரமும் மட்டும் தான் கேட்கிறது...''இந்த இடத்தில் சண்டை நடந்ததற்கான அடையாளம் இருக்கிறது; ஆனால், எவரையும் காணோமே...''இன்னும் சற்று முன்னேறி சென்று பார்க்கலாமா...''சரி...'தளபதி, சட்டென குதிரையை நிறுத்தினார்.'என்ன தளபதி...''என்ன நடந்தது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளாமல், முன்னேறுவது புத்திசாலித்தனமாக தெரியவில்லை. மகேந்திரனும், மற்ற வீரர்களும் வரட்டும்...'நீண்ட நேர காத்திருப்புக்கு பின், தண்ணீருக்குள் நடந்தபடி குதிரைகள் வரும் சலசலப்பு சத்தம் கேட்டது. வந்தது மகேந்திரனும் மற்ற வீரர்களும் தான்.'நமக்கு தகவல் கூறிய வீரன் எங்கே...'சற்று பின் வரிசையில் இருந்த அந்த இரு வீரர்களும், குதிரையை முன் செலுத்தி தளபதியிடம் வந்தனர்.'சண்டை நடந்த இடம் இது தான்...' என்றனர்.'சண்டை என்ன சண்டை... கைகலப்பு நடந்த இடம் என்று சொல்; நீ கூறிய தாக்குதலை பார்த்தால், கைகலப்பு நடந்தது போல தான் இருக்கிறது...' எரிச்சலுடன் கூறிய தளபதி, 'உறுதியாக இந்த இடம் தானா...' என்று மீண்டும் கேட்டார்.'ஆமாம் தளபதி...'இந்த உரையாடல் நடந்த போது, மகேந்திரன் குதிரையை செலுத்தி, தளபதிக்கு அருகில் வந்தான். 'தரையில் உள்ள அடையாளங்களை பார்த்தால், நீங்கள் சொல்வது போல கைகலப்பு தான் நடந்திருக்கிறது. நாம் முன்னேறி செல்லலாமா தளபதி...' என்றான் மகேந்திரன்.பதில் சொல்லாமல், யோசனையில் இருந்தார் தளபதி.'நம் வீரர்கள், அந்த எதிரிகளை வென்றிருக்கலாம். தோல்வியை அறிந்து எதிரிகள் தப்பி ஓடி இருப்பர். நம் வீரர்கள் அவர்களை துரத்தி சென்று இருக்கலாம்; இதற்கும் வாய்ப்பு இருக்கிறதே தளபதி...' என்றான் மகேந்திரன்.'அப்படியும் நடந்திருக்கலாமோ...' என்றபடி, மகேந்திரனை நிமிர்ந்து பார்த்தார் தளபதி.- தொடரும்...- ஜே.டி.ஆர்.