உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (256)

அன்புள்ள அம்மா...அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவியர் நாங்கள். எங்கள் வகுப்பாசிரியர், அடிக்கடி, 'கைகளைத் தட்டுங்கள்... அதில், ஆயிரம் நன்மைகள் ஒளிந்திருக்கின்றன...' என்று கூறுகிறார். அவர் கூறும் போதெல்லாம் கைத்தட்டிக் கொண்டு தான் இருக்கிறோம். அதன் விளைவு என்ன என்பது, சரியாக தெரியவில்லை. கைத்தட்டுவது நன்மை தருமா... அது பற்றி, தெளிவாக கூறுங்கள்... இப்படிக்கு,அ.வீரையன் மற்றும் மாணவ, மாணவியர்.அன்பு செல்லங்களே...வாழ்த்துவதற்காக, உற்சாகப்படுத்துவதற்காக, பிரியத்துக்காக ஒரு உள்ளங்கையின் மீது, இன்னொரு உள்ளங்கையை தொடர்ச்சியாக, உணர்ச்சி பூர்வமாக தட்டி ஓசை ஏற்படுத்துவதே கைத்தட்டல் ஆகும். சமஸ்கிருதத்தில், கரகோஷம் என்பர்.கி.மு., 300ல் ரோம நாடக ஆசிரியர் பிளாட்டஸ் தன் நாடக முடிவில், ரசிகர்ளைப் பார்த்து, 'பிளாடைட்' என்பர்.உடனே, மக்கள் கைத்தட்டினர். இது தான், உலகின் முதல் கைத்தட்டல் நிகழ்வாக பதிவாகியுள்ளது.கிரேஸ் லுபெங்கா மொட்டோவு என்ற கிறிஸ்துவ பாடகர், ஜூலை 30, 2023ல் ஆப்ரிக்க நாடான உகாண்டாவில், ஒரு இசை நிகழ்ச்சியில் பாடி முடித்த போது, அங்கிருந்தோர் தொடர்ந்து, மூன்று மணி, 16 நிமிடம் கைத்தட்டி பாராட்டி இருக்கின்றனர்.உலக சாதனையாக, 117 டெசிபல் அளவு சத்தத்தில், ஸ்டீபன் வாலஸ் என்பவர் கைத்தட்டி இருக்கிறார். உலகில், ஏழு வகை கைத்தட்டல் முறைகள் உள்ளன.* பட்டாசு வெடிப்பு - கைதட்டி விட்டு பட்டாசு வெடிப்பது போல பாவனை செய்வது* பண கைத்தட்டல் - கைத்தட்டி விட்டு பாவனையாக ரூபாய் நோட்டுகளை எண்ணுவது போல் பாவனை செய்வது* காபி கைத்தட்டல் - கைத்தட்டி விட்டு காபி குடிப்பது போல நடிப்பது* டிஜே கைத்தட்டல் - கைத்தட்டிய பின் ஒரு கையை காதில் வைத்து, மறு கையை நீந்துவது போல அசைத்தல்* ரோடியோ கைத்தட்டல் - கைத்தட்டிய பின், உடலை முழுமையாக சுற்றுதல்* ரோலர் கோஸ்டர் - கைத்தட்டிய பின், கைகளை கீழே இறக்கி, ரோலர் கோஸ்டர் போல சறுக்கி ஏற்றுதல்* கறுப்பு கண்கள் பட்டாணி கைத்தட்டல் - குத்தாய் வெடிப்பாய் கை விரித்தல் என்பவை ஆகும்.கைத்தட்டுவதால்...* அஜீரணக்கோளாறு விலகும்* முதுகு வலி, கழுத்து வலி, முட்டி வலி அகலும்* ரத்த அழுத்தம் நீங்கும்* இதய, நுரையீரல் நோய் குணமாகும்* மூளையின் செயல்பாடு கூர்மையாகும். நோய் எதிர்ப்பு சக்தி, பல மடங்காய் கூடும். கைத்தட்டல் தொடர்பாக வீடியோ பாடல் குழந்தைகளுக்காக அறிமுகமாகியுள்ளது. ஒரு கையின் நடு விரலை, அதே கையின் கட்டை விரலுடன் மோதி, ஒரு கை ஓசை எழுப்பலாம். சட்டசபையில், ஆளும் கட்சி உறுப்பினர்கள், தங்கள் தலைவரின் செயல்பாடுகளை பாராட்ட மேஜையை தட்டுவர். ஒரு நடிகன், தனக்கு கிடைக்கும் சம்பளத்தை விட, கைத்தட்டல்களை பெரிதாய் விரும்புவான். நானும் சொல்கிறேன் கைத்தட்டுங்கள்!-- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !