வெற்றி படிக்கட்டு!
புதுவையில் பிரபலமான க்ளூனி மகளிர் பள்ளியில், 2001ல் எல்.கே.ஜி., வகுப்பில் சேர்ந்தேன். என் சித்தப்பா மகன் அபய்கிருஷ்ணாவும் உடன் படித்தான். அப்போது, கிண்டர் கார்டன் வகுப்புகளில், இருபாலரும் சேர்ந்து படிக்க அனுமதியிருந்தது.இருவரும் சேர்ந்திருக்கும் படம், சிறுவர்மலர் செப்., 18, 1998 இதழ் அட்டையில் வெளியாகியிருந்தது. குடும்பமே மகிழ்ச்சி கடலில் மூழ்கியது. பலரும் அடையாளம் கண்டு விசாரித்து, கன்னம் தடவி வாழ்த்தினர். இதனால், பள்ளியில் சேர்ந்த உடன், ஆசிரியர்கள் அடையாளம் கண்டனர்; குதுாகலம் பெற்றோம். என் சித்தப்பாவுக்கு ஊர் மாறிக்கொண்டிருக்கும் வேலை. அதனால், அவரது குடும்பம் சென்னை சென்றுவிட்டது. நான், புதுச்சேரி, செயின்ட் பேட்ரிக் பள்ளியில் சேர்ந்தேன்; அவன் சென்னை, ஜெ.ஜி.டபுள்யூ., பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தான்.நான் தஞ்சாவூர், சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திலும், அவன் சென்னை, எஸ்.எஸ்.என்., பொறியியல் கல்லுாரியிலும் கணினி பொறியியலில் பட்டம் பெற்றோம். மீண்டும், 17 ஆண்டுகளுக்குப் பின் இணைந்து, 'விடு சவாரி...' என அமெரிக்கா புறப்பட்டோம்; அங்கு சிகாகோ, இல்லினாய் பல்கலைக் கழகத்தில், எம்.எஸ்., பட்ட மேற்படிப்பில் சேர்ந்தோம். கொரோனா தொற்று உலகை உலுக்கிய, 2020ல் படிப்பை முடித்தோம்.புகழ்பெற்ற, 'அமேசான்' நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு இருவருக்கும் கிடைத்தது. அமெரிக்கா, சியாட்டில் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் கைநிறைய சம்பளத்தில் பணி புரிகிறோம். இப்போது என் வயது, 25; வாழ்வில் பெற்றுள்ள இந்த உயர்வு மகிழ்ச்சி தருகிறது. அன்று, 'சிறுவர்மலர்' இதழில் அட்டை படம் வெளியான போது ஏற்பட்ட குதுாகலத்தை மனம் அசை போடுகிறது. அதை படித்ததை பெருமிதமாக கருதுகிறேன். அதுவே, இந்த வெற்றிக்கு படிக்கட்டாக அமைந்ததாக மகிழ்ச்சி கொள்கிறேன்.- அபிஷேக் வாசுதேவன், அமெரிக்கா.தொடர்புக்கு: 98430 48084