முட்டாள் மகன்!
நீலகிரி என்னும் ஊரில் தேவகி என்பவள் வசித்து வந்தாள். அவளுக்கு அருண் என்ற மகன் இருந்தான். அவன் மிகவும் முட்டாளாக இருந்தான்.அவனைத் திருத்த எவ்வளவோ முயற்சி செய்தாள் தேவகி. ஆனால், பயன் ஏதும் இல்லை.ஒருநாள்-''மகனே! எனக்கு உடல் நலம் சரியில்லை. நான் நெய்த துணிகள் நிறைய சேர்ந்து விட்டன. இவற்றை எல்லாம் நகரத்திற்கு எடுத்துச் சென்று பொறுப்பாக விற்று விட்டு வா; முட்டாள் தனமாக நடந்து கொள்ளாதே,'' என்று அறிவுரை கூறினாள் தேவகி.''என்னை எப்போதும் குறை சொல்வதே உனக்கு வேலையாகப் போயிற்று. இந்தத் துணிகளை நல்ல விலைக்கு விற்று விட்டு வருகிறேன். அப்போதுதான் என் திறமை உனக்குப் புரியும்,'' என்று சொல்லி விட்டு துணி மூட்டையுடன் நகரத்தை நோக்கி நடந்தான்.நல்ல வெயில். அவன் செல்லும் பாதைக்கு எதிரே கதிரவன் இருந்தான். அதனால் அவன் நிழல் பின்னால் விழுந்தது. சிறிது தொலைவு சென்ற அருண் திரும்பிப் பார்த்தான். நிழல் அவனைத் தொடர்ந்து வந்தது.தன்னைத் தொடர்ந்து வருவது தன் நிழல்தான் என்று அறியாத முட்டாள் அருண், ஏதோ பேய்தான் வருகிறது என்று நினைத்தான்.அச்சத்தை மறைத்தவாறு, ''ஏ! பேயே! நான் பெரிய முரடன்; உன்னைப் போல நூறு பேய்களைக் கொன்று இருக்கிறேன். என்னைத் தொடர்ந்து வராதே. உன்னைத் தொலைத்து விடுவேன்,'' என்று கூறியபடியே நடந்தான்.தன் பேச்சைக் கேட்டுப் பேய் ஓடியிருக்கும் என்ற எண்ணத்துடன் திரும்பிப் பார்த்தான். ஆனால், நிழலோ அவனைத் தொடர்ந்து வந்தது.''ம்ம்ம்... என்னைக் கண்டு உனக்கு அச்சம் இல்லை. உன்னைக் குழி தோண்டிப் புதைக்கிறேன். எப்படி வெளியே வருகிறாய் என்று பார்த்து விடுகிறேன்? அப்போதுதான் நான் யார் என்று உனக்குத் தெரியும்,'' என்று கத்தினான். தன் நிழல் இருந்த இடத்தில் பெரிய பள்ளம் ஒன்றை தோண்டினான்.பின் அந்த பள்ளத்தை மண் போட்டு நன்றாக மூடினான்.''அப்பாடா! பேயைப் புதைத்து விட்டேன். இனி தொல்லை இராது!'' என்று நினைத்த அருண். துணி மூட்டையுடன் பயணத்தைத் தொடர்ந்தான்.சிறிது தொலைவு சென்ற பின் திரும்பிப் பார்த்தான். இப்போதும் நிழல் அவனைத் தொடர்ந்து வந்தது.அஞ்சி நடுங்கிய அருண், துணி மூட்டையைப் பிரித்து ஒவ்வொரு துணியாக எடுத்து நிழலின் மீது போட்டுக் கொண்டே வந்தான். ஆனால், நிழலோ எந்தத் தடையாலும் நிற்காமல் அவனைத் தொடர்ந்து வந்தது. அவனிடம் இருந்த துணிகள் எல்லாம் தீர்ந்து போயின.மிகுந்த நடுக்கத்துடன் ஓடத் துவங்கினான். எங்கும் நிற்காமல் வெகு தொலைவு ஓடிய பின் திரும்பிப் பார்த்தான். பேயும் தன்னைத் துரத்தியபடி ஓடி வருவதைக் கண்டான்.எப்படியாவது அதனிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைத்து, மிக வேகமாக ஓடினான்.மூச்சு இறைக்க ஓடிய அருண், ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் நின்றான். இப்போதும் பேய் தன்னைத் தொடர்கிறதா என்று நாலா பக்கமும் பார்த்தான்.ஆலமரத்தின் நிழலில் இருந்ததால் அவன் கண்களுக்கு நிழல் தெரியவில்லை.'அப்பாடா! ஒரு வழியாக பேயிடம் இருந்து தப்பித்தோம்' என்ற நினைத்து, ஆலமரத்தை விட்டு வெளியே வந்தான்.நிழல் அவனைத் தொடர்வதைக் கண்டு திகைத்து, மீண்டும் மரத்தின் நிழலுக்கே சென்றான்.இந்த மரம் மிகவும் ஆற்றல் வாய்ந்த மரமாக இருக்க வேண்டும். இதன் அருகில் நான் இருந்தால் பேய் ஓடி விடுகிறது. வெளியே வந்தால் பேயும் துரத்துகிறது. வேறு வழி இல்லை. வழித் துணைக்கு யாராவது கிடைக்கும் வரை இங்கேயே தங்க வேண்டியதுதான் என்று நினைத்தான்.அந்த ஆலமரத்தில் ஏறி, பெரிய கிளை ஒன்றில் படுத்துத் தூங்கத் துவங்கினான்.வணிகர் கூட்டம் ஒன்று அந்த வழியே வந்தது. வழி எங்கும் இறைந்து கிடந்த புதிய துணிகளை எடுத்த அவர்கள், இளைப்பாற அந்த ஆலமரத்தின் நிழலில் தங்கினர்.அவர்களின் பேச்சுக் குரல் கேட்டு விழித்த இளைஞன், தன் துணிகள் அவர்களிடம் இருப்பதைப் பார்த்தான்.''என் துணிகளை என்னிடம் தாருங்கள்,'' என்று கத்தினான்.குரல் கேட்டு வணிகர்கள் மேலே பார்த்தனர்.இளைஞன் ஒருவன் படுத்திருப்பதைக் கண்டு, அவனைக் கீழே வருமாறு அழைத்தனர்.அவனும் கீழே இறங்கி வந்தான்.தன்னைப் பேய் துரத்தியதையும், அதனிடம் இருந்து தப்ப முயற்சி செய்ததையும், இந்த மரம் பாதுகாப்பாக இருந்ததையும் விளக்கமாகச் சொன்னான் அருண்.எல்லாவற்றையும் கேட்ட வணிகர்கள், அவன் முட்டாள் தனத்தை எண்ணிச் சிரித்தனர்.''உன்னைத் துரத்தியது பேய் அல்ல; வெளிச்சத்தில் நாம் எங்கு சென்றாலும் நம்மைத் தொடர்ந்து வரும் நிழல்தான் அது. இப்போது நாம் எல்லாரும் மரத்தின் நிழலில் இருப்பதால் நம் நிழல் தெரியவில்லை. வெளியே சென்றால் தெரியும்,'' என்று அவனுக்கு விளக்கமாக கூறினார் வணிகர் ஒருவர்.சிறிது சிறிதாக அவனுக்கும் உண்மை விளங்கியது.தன் துணிகளைப் பெற்ற அருண், அவர்களுடன் நகரத்திற்குப் புறப்பட்டான்.இனி புத்திசாலித்தனமாக நடந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டான்.