செதுக்கும் கலை!
சிவகாசி, அம்மன் கோவில்பட்டி, அரசு பள்ளியில், 1987ல், 3ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியராக இருந்தார் சிங்கராஜ். நானும், தோழி தீபாவும் போட்டி போட்டு, முதல் மதிப்பெண் வாங்குவோம். இருவரையும் நன்றாக கவனித்து நல் அறிவுரைகள் சொல்வார்; எடுத்து வரும் மதிய சாப்பாட்டையும் தருவார். ஆங்கில எழுத்து வடிவம், உச்சரிப்பு சொல்லிக் கொடுத்து, 'தேர்வின் போது, வடிவமாக எழுதணும்...' என்றார். வீட்டில் பேப்பரில் எழுதி பயிற்சி செய்தேன்; தவறுகளை திருத்தினேன். மறுநாள் தேர்வின் போது எல்லாம் மறந்து விட்டது. உடனே, பயிற்சி செய்திருந்த பேப்பரை பார்த்து எழுதினேன். இதை ஆசிரியரிடம் கூறிவிட்டாள் தோழி. என்னிடம் கண்டிப்புடன், 'இப்படி, 'பிட்' அடிக்கலாமா...' என்று கேட்டார். எதுவும் புரியாமல், 'அப்படின்னா என்ன ஐயா...' என்றேன். சிரித்தபடி, 'பேப்பரை பார்த்து எழுதினாய் அல்லவா... அதன் பெயர் தான், 'பிட்' அடிப்பது...' என்றார். பின், மதிய உணவு இடைவேளையின் போது சிறப்பு பயிற்சி அளித்தார்; ஆங்கிலம் எளிமையானது.என் வயது, 42; செதுக்க செதுக்க தான் கல் சிலையாகும் என்பதை அவரது செயலால் புரிந்து கொண்டேன்.- ரா.ஞானசெல்வி, மதுரை