உள்ளூர் செய்திகள்

ஆமையும் பருந்துகளும்!

அது கோடைகாலம். கடும் வெயிலால், கோவிலம்பாக்கம் கிராம நீர் நிலைகள் வரண்டிருந்தன. உயிரினங்கள், வேறு நீர் நிலைகளை நாடின. ஆமை மட்டும் எங்கும் செல்லாமல் தவிப்போடு சுற்றி வந்தது. அதன் நட்பு வட்டத்தில் சில பருந்துகள் இருந்தன. அவை, ஆமைய பிரிய மனமின்றி, 'நண்பா... உன்னையும் உடன் அழைத்து செல்ல விரும்புகிறோம்...' என்றன.வருத்தத்துடன், 'அது எப்படி சாத்தியமாகும்... நீங்கள் வானத்தில் பறக்க கூடியவர்; நான் பூமியில் மெதுவாக ஊர்ந்து செல்பவன்; உங்களால் எனக்கு எப்படி உதவ முடியும். விதிப்படி நடக்கட்டும்... நீங்கள் வேறிடம் சென்று மகிழ்ச்சியாக வாழுங்கள்...' என கூறியது ஆமை.பருந்துகள் விடவில்லை. ஒரு உபாயம் செய்தன. இரண்டு அடி நீள குச்சியை எடுத்து வந்து, குச்சியின், இரண்டு முனைகளையும் கால்களால் பற்றின. குச்சியின் நடுபாகத்தில் ஆமையை கவ்விக்கொள்ள அறிவுரைத்தன. இதற்கு உடன்பட்டது ஆமை.அப்போது, 'ஆமை நண்பா... பறக்கும் போது, மக்கள் ஏதாவது கிண்டலாக கூறினால் உணர்ச்சி வசப்பட்டு, வாயை திறந்து விடாதே... அது ஆபத்தில் முடியும்...' என எச்சரித்தது ஒரு பருந்து.தலையை வேகமாக ஆட்டி ஒப்புக்கொண்டது ஆமை.பறக்க துவங்கின பருந்துகள். அவை பற்றியிருந்த குச்சியை கவ்வியபடி, தொங்கியது ஆமை. காடு, மலை, கிராமம் என கடந்தன. ஆமையை, இரு பறவைகள் வினோதமாக சுமந்து செல்வது கண்டு ஆராவாரம் செய்தனர் மக்கள்.ஆமைக்கு பெருமை தாங்கவில்லை.சிலர், 'இந்த ஆமைக்கு என்ன திமிர்; சிறிய பறவைகளை மிரட்டி, தொங்கி செல்கிறதே...' என, கற்களை வீசினர்.சிலர், 'ஆமைக்கு கால் ஊனம் போல... அதுதான் பறவைகள் துாக்கி செல்கின்றன...' என்றனர்.இந்த விமர்சனங்களை ஆமையால் தாங்க முடியவில்லை. பொறுமை இழந்து, 'இந்த பருந்துகள் என் உயிர் நண்பர்கள் அவர்கள் தான் எனக்கு உதவுகின்றனர். நான், உதவியை நாடவில்லை' என பதிலடி தர துடித்தது.வாய் திறந்தால், விழுந்து மடிய நேரிடும் என்ற எச்சரிக்கை நினைவில் வர, அமைதியானது. மீண்டும் மீண்டும் மனிதர்களின் கிண்டல் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. இதனால், விதியை மீறி, நியாயத்தை தெளிவுப்படுத்த வாய் திறந்தது. தடாலென விழுந்து பரிதாபமாக இறந்தது ஆமை.எழில்களே... எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்கக் கூடாது. ஆத்திரம் அறிவிழக்க செய்துவிடும்.ஆர்.ராஜலட்சுமி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !