வயலின்!
வயலின் என்ற நரம்பிசைக் கருவி, இந்தியாவில் தோன்றியது. பின், மேலை நாடுகளுக்குப் பரவியது. அங்குள்ள அறிஞர்கள் பல மாற்றங்கள் செய்தனர். மாற்றங்களுடன் வந்த வயலின் கருவியை, இந்திய கலைஞர்கள், இசைக் கச்சேரிகளில் பயன்படுத்து கின்றனர்.கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிராமம் திருமகூடலு. இங்கு, அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இது, 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்குள்ள கருங்கல் துாணில், வில்லைக் கொண்டு, ஒரு இசைக் கருவியை வாசிப்பது போன்ற புடைப்புச் சிற்பம் உள்ளது.அக்காலத்திலே வயலின் போன்ற இசைக்கருவி பயன்படுத்தப்பட்டதற்கு சான்று இது. ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த ஸ்ட்ராடிவரிஸ் என்பவர், இப்போது புழக்கத்தில் உள்ளது போன்ற வயலினை உருவாக்கினார். சில்வர் ஓக், பைன், மேப்பிள் போன்ற மரங்களில் வயலின் இசைக்கருவி செய்யப்படுகிறது.தமிழகத்தைச் சேர்ந்த பால ஸ்வாமி தீட்சிதர், ஐரோப்பியர் வடிவமைத்த வயலினை, 1821ல் இசைக்க பயின்றார். அதில் கர்நாடக இசையை நிகழ்த்திக் காட்டினார். வயலினில் இருந்து பல புதுக்கருவிகள் தோன்றியுள்ளன.