ஓர் இரவு தங்க, 40 ஆயிரம் ரூபாய்!
உத்தர பிரதேசத்தில் உள்ள, அலகாபாத் நகரம், பிரயாக்ராஜ் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு,49 நாட்கள், ஜன., 15ம் தேதி முதல், மார்ச், 14ம் தேதி வரை கும்பமேளா நடக்கிறது. இதில், 12 - 14 கோடி பேர் வரை பங்கேற்பர்.இதற்கு வரும், வி.ஐ.பி.,க்கள், வெளிநாட்டினர், ஓட்டலை தேடி போகாமல் இருக்க, கங்கை கரையில், 'டென்ட்' கட்டி வாடகைக்கு விட்டுள்ளது, உ.பி., அரசு. இதில், ஓர் இரவு தங்கவும், தனியாக, கங்கை குளியல் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு வாடகை, 40 ஆயிரம் ரூபாய். 900 சதுர அடியில், இரண்டு படுக்கையறை, ஒரு ஹால், வீட்டு உபயோக உபகரணங்கள் என, அனைத்தும் வசதிகளும் உள்ளன.இந்த, 'டென்ட்'கள் உள்ள இடத்திற்கு, 'இந்திர பிரஸ்த நகரம்' என பெயர். இத்தகைய, 'டென்ட்'டுகளை, கல்பவிருட்சம், கும்பகேன் நிவாஸ் மற்றும் வேதிக் நகரங்களிலும் காணலாம். பலர், படுத்து உறங்கும் வகையிலான இடங்களும் உண்டு. வாடகை, 650 ரூபாய் முதல் துவங்குகிறது.— ஜோல்னாபையன்.