இருளில் ஒளித்திருவிழா
அமாவாசை என்றாலே இருட்டு தான். வெளியே (புறம்) இருட்டாக இருந்தாலும், மனம் (அகம்) வெளிச்சமாக இருந்தால், புறஇருள் பெரிதாக தெரியாது.இந்த அரிய தத்துவத்தை விளக்கும் வகையில், திருநெல்வேலி மாவட்டம், காரையார் சொரிமுத்தைய்யனார் கோவிலில், இருளில் ஒளி விழா நடக்கிறது. சாஸ்தா கோவில்களில் இதுவே முதன்மையானது; சபரிமலைக்கும் முந்தைய பழமையான கோவிலாக கருதப்படுகிறது.அகத்தியர் தென்பொதிகைக்கு வந்த போது, தாமிரபரணியின் நடுவிலுள்ள ஒரு பாறையில் அமர்ந்தார். அவர், கண் மூடி தியானம் செய்த போது, சாஸ்தா சிவ பூஜை செய்யும் ஒளிமிக்க காட்சி, மனதிற்குள் தெரிந்தது.விழித்துப் பார்த்தால், மனதுக்குள் பார்த்த அதே நிகழ்வு, வெளியேயும் தெரிந்தது. எங்கும் ஒளிமயமாக இருந்தது. இந்த நிகழ்வு நடந்த நாள், அமாவாசை. இதையடுத்து இந்தக் கோவிலில் ஆடி அமாவாசையில், இது விழாவாக எடுக்கப்பட்டது. இதனால், எல்லா அமாவாசைகளும் முக்கியத்துவம் பெற்றன.சூரியன், தெற்கு நோக்கி பயணிக்கும் துவக்க மாதமான, ஆடியில் வரும் அமாவாசை முக்கியமானது என்பதால், அன்று சாஸ்தாவுக்கு சிறப்பு பூஜை நடக்கும். சாஸ்தாவுக்கு, அய்யனார் என்று கிராமங்களில் பெயருண்டு. இப்பகுதியில், முத்து போல மழை பொழியும் என்பதால், இவருக்கு, சொரிமுத்து அய்யனார் என, பெயரிட்டனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில், வேண்டுதலுக்காக, மணிகட்டும் வழக்கம் இருக்கிறது. இங்கும், அந்த வழிபாடு உண்டு. சபரிமலையில் கோவில் பிரகாரங்களிலுள்ள சன்னிதிகளிலும், அய்யப்பன் சன்னிதானம் முன்புள்ள உத்திரங்களிலும் மணி கட்டுவர்.இதைக் கட்டியதுமே, மற்ற பக்தர்கள் முண்டியடித்து எடுத்து, அதை பிரசாதமாகக் கருதி, வீட்டுக்கு எடுத்து செல்வர். ஆனால், சொரிமுத்து அய்யனார் கோவிலில், ஒரு மரத்தில் மணிகளை கட்டுவர். இதை யாரும் தொட மாட்டார்கள்.சில நாட்கள் கழித்து வந்து பார்த்தால், அந்த மணிகள் மரத்தில் பதிந்து போய் இருக்கும். அதை, எளிதில் வெளியே எடுக்க முடியாது. இதனால், அந்த மரத்துக்கு, 'மணி விழுங்கி மரம்' என்று, பெயர் வைத்து விட்டனர். இதையும் விட இன்னொரு சிறப்பு...பிராமணராக பிறந்து, தாழ்த்தப்பட்ட பெண்களை மணம் முடித்த பட்டவராயர் என்பவரது சன்னிதியில், பக்தர்கள், செருப்புகளை காணிக்கையாக கொடுப்பர்.கோவிலுக்குள் செருப்பணிந்து செல்வது பாவம் என்பது, நடைமுறையாக இருக்க, இங்கு, செருப்பு காணிக்கை கொடுப்பது விசேஷத்திலும் விசேஷம். கோவில் முன், தாமிரபரணி ஓடுகிறது. தண்ணீரின் வேகம் அதிகம் என்பதால், பக்தர்கள் பாதுகாப்பாக நீராட வேண்டும்.திருநெல்வேலியில் இருந்து பாபநாசம், 45 கி.மீ., இங்கிருந்து மலைப்பாதையில், 15 கி.மீ., சென்றால் கோவிலை அடையலாம்.தி. செல்லப்பா