உள்ளூர் செய்திகள்

தங்கம் தரும் கஞ்சன்!

கஞ்சன் என்றால், பணத்தை இரும்பு பெட்டிக்குள் பூட்டி வைக்கிற கருமி என்று தானே பொருள் கொள்வோம். இந்த சொல்லுக்கு, தங்கம், இரும்பு, தாமரை என்ற பொருட்களும் உண்டு.கஷ்டப்படுவோரின் துயரம் நீக்கும் தங்க மகன், பக்தர்களுக்கு துன்பம் செய்வோரை இரும்புக்கரத்தால் ஒடுக்குபவன், தாமரை போல் பரந்த மனம் கொண்டவன்... இத்தகைய குணங்களுடன், சேலம் அருகிலுள்ள, கஞ்ச மலையில், குழந்தை வடிவில் அருள்பாலிக்கிறார், பாலமுருகன். இவர், குழந்தைகளின் நோய் தீர்ப்பவராகவும் உள்ளார்.ஒருமுறை, தன் மருமகன், முருகனை காண சென்றார், திருமால். அவரிடம், முருகனின் வாகனமான மயில், கர்வத்தால் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டது. மாமனாரிடம் மரியாதை குறைவாக நடந்ததால், மயிலை கல்லாகும்படி முருகன் சாபமிட்டார். அது, மன்னிப்பு வேண்டி தவமிருந்தது. மயிலின் தவத்துக்கு இரங்கி, விமோசனம் அளித்தார், முருகன். முருகனுக்கும், மயிலுக்கும் பெருமை சேர்க்கும் வகையில், இப்பகுதியிலுள்ள பக்தர்கள், கஞ்ச மலை அடிவாரத்திலுள்ள குன்றில் குழந்தை ரூபத்தில், முருகனுக்கு கோவில் எழுப்பினர். 250 அடி உயரமுள்ள இந்த மலையில், 101 படிக்கட்டுகளை கடந்தால், கோவிலை அடையலாம்; கார்களிலும் செல்லலாம்.கஞ்சம் என்றால், தங்கம். சிதம்பரத்தில் கூத்தாடும் நடராஜப் பெருமானுக்கு, தங்க விமானம் அமைத்தான், பராந்தக சோழன். அது, கஞ்ச மலையில் உள்ள தங்கத்தால் என்கிறது, தல வரலாறு. கஞ்ச மலையிலும், சுற்றுப்புறங்களிலும் இரும்புத்தாதும் மிகுந்துள்ளது.இக்காட்டில் விளையும் கருமை நிற மூலிகைகள், இரும்புச்சத்து கொண்டவை. 15 வகை நோய்கள், மயக்கம் மற்றும் மன வியாதியை நீக்கும் கருநெல்லி மரங்கள், இந்த மலையில் உள்ளன. 'கஞ்சன்' என்பது பிரம்மாவை குறிக்கும். அவரால் உருவாக்கப்பட்ட மலை என்பதாலும், கஞ்சமலை என, பெயர் வந்தது.குழந்தை வடிவில், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், பாலமுருகன். இங்கு வழங்கப்படும் தீர்த்தம், குழந்தைகளின், நீண்ட கால நோய்களை நீக்குவதாக நம்பிக்கை உள்ளது. திருமணத்துக்கு நகை வாங்கும் முன், இங்குள்ள முருகனை வணங்கினால், வாங்கும் நகைகள், நீண்ட காலம் நிலைத்திருக்கும்; மேலும், பெருகும் என்பது நம்பிக்கை. வைகாசி விசாகம், சஷ்டி, கிருத்திகை, பவுர்ணமி நாட்களில், பால் அபிஷேகம் செய்தால், குழந்தை பாக்கியம், திருமணத்தடை விலகல், இழந்ததை பெறுதல் ஆகிய பலன்கள் கிடைக்கின்றன.சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து, இளம் பிள்ளை கிராமத்துக்குச் செல்லும் சாலையில், 19 கி.மீ., சென்றால், கஞ்ச மலை சித்தர் கோவிலை அடையலாம். இங்கிருந்து நடந்து செல்லும் துாரத்தில், பாலமுருகன் கோவில் உள்ளது. தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !