ஒரு வார்த்தை!
நாம் தலையிடாமல் ஓரமாய் உட்கார்ந்து கொள்ளலாம் என்றாலும், தயாளனின் மனசு, சொல் பேச்சு கேட்கவில்லை. ஓய்விற்கு பிறகு, மனிதர்களைப் பற்றிய ஆய்வில், பி.எச்.டி., வாங்கியவராக தன்னை மாற்றிக் கொண்டதாலோ என்னவோ, வசியம் செய்யாத வார்த்தைகளை அனாவசியமாக இப்போதெல்லாம் அவர் பயன்படுத்துவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன், மகள் சரோஜா வீட்டில் ஏற்பட்ட மனஸ்தாபம், இன்னுமே அவரை வாட்டி வதைக்கிறது. அதனாலேயே, தன்னை அமைதியாக்கி கொண்டார்.கால்களை தாங்கி தாங்கி, லட்சுமி பக்கத்தில் வந்து நிற்க, வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து, நிமிர்ந்து பார்த்தார்.''என்ன லட்சுமி?''''இப்படி தேமேன்னு உட்கார்ந்திருந்தா, யாருக்கா இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்,'' என்றாள் குரலை குறைத்து, கோபத்தைக் கூட்டி.''அப்போ சரி, இப்படி உட்கார்றேன்,'' என்றவர், கால்களை துாக்கி, டீபாயில் கிடத்தி மெல்ல காலாட்ட, தலையில் அடித்துக் கொண்டு முறைத்தாள், லட்சுமி.''இதென்ன சின்னப் பிள்ளைத்தனம்... இங்கே வீடே அல்லோக தில்லோகப்பட்டுட்டு இருக்கு. நீங்க புத்தகம் வாசிசுட்டிருந்தா, பொறுத்துப் போக இது, மகள் இல்லை, மருமகள்,'' என்று சொன்னாலும், மகளே பொறுக்கவில்லை என்பதுதான் நிஜம்.''எல்லாம் தெரியுது. நான் வராத வரைக்கும் எல்லாம் கனகச்சிதமா இருக்கும். நான் பாட்டுக்கு இங்கே உட்கார்ந்து இருக்கேன். எதுக்கு வந்து வம்பு வளர்த்தறே,'' என்று, அவர் திரும்பிக் கொள்ள, முனங்கியபடி உள்ளே நகர்ந்தாள், லட்சுமி.நான்காவது மாடியில் இருந்து, அகலமான தெருவின் நடமாட்டத்தை பார்த்தபோது, வெகு பாந்தமாக இருந்தது. மனிதர்கள் இயங்கிக் கொண்டு இருப்பதையும், இயக்கம் தொலைத்த மனிதர்களையும் பார்ப்பது கூட சுவாரஸ்யம் தான்.மகன் பத்ரி, மிகப்பெரிய நிறுவனத்தில் மேலாளர்; மருமகள் வித்யா, தனியார் கல்லுாரி பேராசிரியை. அவர்களுக்கு ஒரே மகன், நவீன். இன்னும் மூன்று நாட்களில், பட்டப் படிப்பிற்காக, அமெரிக்கா நாட்டிலுள்ள டெக்சாஸ் மாகாணத்துக்கு கிளம்பப் போகிறான். அதனால் தான் வீட்டில் அமளி துமளி.இந்த ஆர்ப்பாட்டத்தை எல்லாம், ஒரு பார்வையாளனாய், வாய் திறக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார், தயாளன்.புகழ்பெற்ற, ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில், மார்கெட்டிங் மேனேஜராக இருந்தவர், தயாளன். பேச்சு தான் அவருக்கு முதல் சொத்து. அவரின் பேச்சு சாதுர்யத்தில், எதிர்ப்படும் மூவரில், இரண்டு பேரை பாலிசி எடுக்க வைத்து விடுவார். அதுதான் பின்னாளில் அவரை, 'ஹெட்'டாக உயர்த்தியது.அந்நாளில் அப்பாவின் பேச்சை மெச்சிப் பார்த்த பையனும், பொண்ணும், அவரின் ஓய்விற்கு பிறகு, அதையே சலிப்பாய் பார்க்கத் துவங்கினர்.பேசிப் பேசியே, 'இன்கிரிமென்ட், ப்ரமோஷன்' வாங்கிய மனிதர், வாயைத் திறந்து கருத்துச் சொன்னாலே, அங்கே பிரச்னை ஆரம்பமாகி விடுகிறது.இரண்டு ஆண்டு முன்வரை, பெண் மற்றும் பையன் வீட்டிலும் மாறி மாறித்தான் இருந்து கொண்டிருந்தனர். ஜாபர்கான்பேட்டையில் இருந்தது, மகளது விசாலமான வீடு. பக்கத்திலேயே பிள்ளையாரும், முருகனும் இருக்க, காலையில், ஒருவரையும், மாலையில் ஒருவரையும் தரிசிக்க முடிந்தது.மகள் வயிற்று பேத்திக்கு, மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பிக்கும்போது தான், பிரச்னை வந்தது. நல்ல வரன்களை எல்லாம் உப்புக்கு பெறாத காரணத்துக்கு, குடும்பமே தட்டிக் கழிக்க, வீட்டில் மூத்தவராய் ஆற்றாமையாக வந்தது.சர்வ லட்சணத்தோடு, சம்சார லவுகீகத்தோடு, 'பிசியோதெரபிஸ்ட்' வரன் வந்தது. வீட்டில் மூத்தவராய் தயாளன் பூரித்துக் கொண்டிருக்க, மகளும், பேத்தியும், அந்த இடத்தை மறுத்து, அதற்கு ஒரு காரணம் சொன்னதும், அவரை எரிச்சலுாட்டியது.'சாப்ட்வேர் இன்ஜினியரா இருந்தா, வெளிநாடு போக, 'ஸ்கோப்' இருக்கும். இது என்ன வேலை, கையையும் காலையும் பிடிச்சுக்கிட்டு...' என்று பரிகசித்த போது, அங்கிருந்து எழுந்து போனார்.'எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. நிழலோட அருமை வெயில்ல தான் தெரியும். வயசு மூர்க்கத்தால, வருகிற வரனை எல்லாம் குறை சொல்லிட்டே இருந்தா, கடைசியில நாம இழுத்த இழுப்புக்கு காலம் வந்தது போய், அது இழுப்புக்கு நாம போகணும். 'ஒரே பையன். நானும் போய் பார்த்துட்டு வந்தேன். குணவானா இருக்கான். க்ளினிக் வச்சிருக்கான். ஜாதகம் ஏக பொருத்தம். எந்த, 'டிமாண்டும்' இல்ல அவங்களுக்கும். அதை விட்டுட்டு அவதான் குழந்தை புரியாம பேசுறானா, நீயும் ஏன் சரோஜா... நான் சொல்லிட்டேன், இந்த இடத்தைத் தான் முடிக்கணும்...' என்றவரை, அத்தனை காந்தலாக பார்த்தனர். பதிலே சொல்லவில்லை. அதுதான் முதல் அலட்சியம். 'தாத்தாக்கு இன்னும் கூட முடிவெடுக்கற அதிகாரம் இருக்குன்னு நினைப்பு...' பூனைக் குரலில் கேலி பேசி சிரித்தாள், பேத்தி. அடுத்த வரன், பார்க்க வரும் தகவலை அவரிடம் சொல்லாமல் தவிர்த்து, நிச்சயத்தை கூட முடிவு செய்து, பொத்தாம் பொதுவாய் சொன்னதும், அடுக்கடுக்காய் நடந்த அலட்சியத்தில் முழுதாய் துயருற்றுப் போனார்.அதன்பிறகு, மகள் வீட்டுக்கு போகவே இல்லை. இரண்டு முறை அழைத்த சரோஜாவுக்கு, பெற்றவர்களின் ஆதங்கம் புரிந்தது. அதில் நியாயமில்லை என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.வெளிநாட்டில் மகளை திருமணம் செய்து கொடுத்து, இப்போது, தனிமையில் புலம்பித் திரிவது தனிக்கதை.அதன்பிறகான இடைவெளியில் அத்தனையும், மகன் வீடு தான் என்றான பிறகு, அலட்சியம், மலை போல் வளர்ந்தது.'உங்கப்பா பேசாம இருக்க மாட்டாரா... எப்ப பாரு, அவர் கருத்துன்னு எதையாவது சொல்லி மூக்கை நுழைக்கிறாரு. நவீன் விஷயத்துல தலையிட்டா, நான் உங்க தங்கையை விட மோசமா திருப்பித் தந்திடுவேனாக்கும்...' மெதுவாய் சொல்வது போல், உரக்கச் சொல்லிப் போனாள், மருமகள்.சலித்துப் போனார், தயாளன். போராடலாம், வாயாடலாம். ஆனால், அதுக்கெல்லாம் அவர் தன்மானம் இடம் தரவே இல்லை. இந்த ப்ளாட்டை வாங்கி வந்தபோது, தன்னையும், லட்சுமியையும் மனதில் வைத்து, நான்காவது மாடி வேண்டாம் என்றார்.அவர் சொன்ன அபிப்ராயம் பரிசீலனை கூட பண்ணப்படவில்லை என்றதை உணர்ந்த பிறகு, தன் மனதை வீட்டில் இருந்து ஒதுங்கிக் கொள்ள கற்றுக் கொண்டார்.அமெரிக்கா கிளம்ப இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்க, ஆயிரத்தெட்டு சந்தேகத்தோடு பயணத்தை எதிர்கொள்ள பயந்து கொண்டிருந்தான், நவீன்.'யாருமே தெரிஞ்சவங்க இல்லாம, நான் எப்படி அங்கே போய் இருக்க... யூனிவர்சிட்டி கவனிச்சுக்கும் தான். ஆனால், எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை. இப்போ நினைச்சா உதறுது. யாராவது உறவுக்காரங்க இருந்தா சொல்லுங்க, அங்கே போய் கொஞ்ச நாளைக்கு தங்கிக்கறேன். இன்னும், பீஸ் கட்டல. யோசிக்க நேரமிருக்கு...' கடைசி நேரத்தில் அந்தர் பல்டி அடிக்க, பெற்றோருக்கு உதறல் எடுத்தது. எத்தனை செலவு, அலைச்சல். கடைசி நேரத்தில் பின் வாங்கினால் உறவுக்குள் தலை காட்ட முடியாத அவமானம். தாமதமாய் பிறந்த ஒரே மகன் என்பதால், செல்லமும் தாராளம். இப்போது அவன் அழுத்தமாய் மறுத்தால், வழியே இல்லை இவர்களுக்கு.விஷயம் கொஞ்சம் வில்லங்கமாக வேடிக்கை பார்க்க, அவரின் அனுபவ பொறுப்பு அனுமதிக்கவில்லை. எழுந்து வந்து பேரனின் தோளில் கை போட்டார்.கலக்கமாய் நிமிர்ந்து பார்த்தான். பதினெட்டு வயதுக்கான மாறாட்டம் முகத்திலும், அகத்திலும்.''எதுக்கு பயம், எல்லா இடத்திலும் மனிதர்கள் தானே இருக்காங்க. நீ சம்மதிச்சுத் தானே இத்தனை ஏற்பாடும் நடந்தது.'' ''சொல்லும்போது பயணம் மட்டும் முன்னால இருந்தது. இப்போ, பயம் மட்டும் தான் இருக்கு. என் நண்பர்கள் இரண்டு பேர், என் கூட வர்றதா இருந்தாங்க. கடைசி நேரத்துல அவங்க வேற நாட்டுல, 'அட்மிஷன்' கிடைச்சு போயாச்சு. சட்னு ஒரு புரிபடாத பயம்,'' என்றான் வெகுளியாக.''நவீன், 'பார்ன் ஸ்வோலோ'ன்னு ஒரு பறவையைப் பத்தி கேள்விபட்டு இருக்கியா?'' சம்பந்தமில்லாத பேச்சை அவர் ஆரம்பிக்க, அடிவயிற்றில் லட்சுமிக்கு கிலி பிடித்தது.''அந்தப் பறவை அர்ஜென்டினாவிலிருந்து, கலிபோர்னியாவுக்கு 8,000 கி.மீ., தாண்டி கடல் மேல பயணம் செய்து, வந்து இனப்பெருக்கம் செய்யுமாம். பறக்கிறதும், இடம் விட்டு இடம் தேடி வந்து இனப்பெருக்கம் செய்யிறதும், பறவைகளுக்கு வழக்கமானது தான்.''ஆனால், இந்த பறவை பயணம் செய்யிற அத்தனை துாரமும் நிலப்பரப்போ, மலையோ இல்லை. அப்போ, அது தன் ஆகாரதுக்கு என்ன செய்யும் தெரியுமா...'' என்றவர், நிறுத்தி அத்தனை பேரையும் ஒரு பார்வை பார்க்க, யாரிடமும் பதிலில்லை.''அது கிளம்பும்போதே, தன்னுடைய அலகில் ஒரு சிறு குச்சியை கவ்விட்டு தான் பறக்குமாம். பசிக்கும்போது, அந்த குச்சியை கடல் மீது போட்டுட்டு, அதுல நின்னு ஓய்வு எடுத்துட்டு, தனக்கு தேவையான மீனையும் பிடிச்சு சாப்பிட்டுக்குமாம். திரும்ப குச்சியை எடுத்துட்டு பறக்குமாம்.''இப்படி, 16 ஆயிரம் கி.மீ., போக வர கடக்கிற அந்த சிறு பறவை, தன் தேவையை ஒரு சிறு குச்சியை வச்சு நிறைவேத்திக்க முடியும்ன்னா, ஐம்புலனும் உள்ள ஆறறிவு மனிதன் உன்னால முடியாதா?''வேட்டைக்காரன் வேட்டைக்கு வில், அம்போடு போறது தான் கம்பீரம். அதை விட்டுட்டு பஞ்சு மெத்தையையும், பட்டு துணியையும் எடுத்துட்டு போனால், பார்க்கிறவங்க சிரிக்கத்தான் செய்வாங்க.''கையையும் காலையும் கட்டிட்டு நீச்சல் பழக முடியாதுல்ல. நீ, இப்போ இந்த உலகத்தை புரிஞ்சுக்க போ; ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்புக்கு போகிற போது வர்ற தயக்கம், குழப்பம் மாதிரி தான் இதுவும். இதை நீதான் ஜெயிச்சாகணும்; யாரும் ஜெயிக்க வைக்க முடியாது.''தாத்தா தோளில் தட்டிச் சொல்ல, கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்திருந்தது. மெல்ல தலை அசைத்து, நண்பர்களிடம் சொல்லி வர கிளம்பினான்.மகனும், மருமகளும் முகத்தில் நிம்மதியோடு நிற்க, பக்கத்தில் வந்து அவர்களை அழுத்தமாகப் பார்த்தார், தயாளன்.''வயசானதும் ஓய்வு தான் குடுக்கச் சொன்னாங்க, ஒதுக்கி வைக்கச் சொல்லல. கலந்து பேசறதும், எங்க கருத்தை கேட்கறதும் ஒண்ணும், 'அவுட்டாப் பேஷன்'லாம் இல்லை. நவீனங்கள் தெரியாட்டியும், எங்களுக்கு நியாயங்கள் தெரியும். பக்குவங்கள் கை வரும். ''பிள்ளைகளோட நாங்க வாழ்ந்த காலத்துல, அவர்களுக்கு தந்த ஆனந்தத்தை, நாங்க பிள்ளைகளோட வாழ்ற கடைசி காலத்துல, அவங்க தர்றது இல்ல. இது எல்லாம் குற்றச்சாட்டு இல்ல, ஆதங்கம். இருந்தும் இல்லாமல் இருக்கிறது எத்தனை துயரம் தெரியுமா... கருத்துகளே இல்லாத மனிதர்களா வாழறது, காற்றே இல்லாம சுவாசிக்கிற மாதிரி.''இந்த ஆதங்கமெல்லாம் உங்க வாழ்க்கையில வரவே கூடாதுன்னு தான், நல்ல தகப்பனா, நான் வேண்டிக்கிறேன். இந்த முறை என் கருத்தை நீங்க கேட்டதால, நவீனுக்கு இருந்த குழப்பமும், எனக்கு இருந்த வருத்தமும் தீர்ந்துச்சு,'' என்றபடி, தன் வழக்கமான இடத்தில் சென்று அமர்ந்து, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.இவர்கள் தான், இதுவரை வழக்கமே இல்லாத வருத்தத்தை பழக்கமாக்கி கொண்டு, தலை குனிந்திருந்தனர். எஸ். பர்வின்பானு