உள்ளூர் செய்திகள்

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (6)

எம்.ஜி.ஆரையும், என்னையும் ஒப்பந்தம் பண்ணி, ஏவி.எம்., ஸ்டுடியோவில், அன்பே வா படம் எடுத்தனர். முதன்முறையாக, 'ஏசி மேக் - அப்' அறை கட்டி, எங்களுக்கு தந்தனர்.துாங்குவதற்கு மட்டும் தான், வீட்டிற்கு போவேன். வீட்டிலிருந்து வந்தவுடன், 'மேக் - அப்' போட்டு, நடிக்க வேண்டியது தான்.அப்போது, பெங்களூரில், வக்த் என்ற ஹிந்தி படம் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு டிரஸ் தைக்கும் டெய்லரை, விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி, வக்த் படத்தில், நடிகை, சாதனா போட்டிருக்கும் உடை மாதிரியே எனக்கும் தைக்க சொன்னார், ஏவி.எம்., செட்டியார்.டெய்லர் தைத்து கொடுத்த உடையை அணிந்து தான், 'உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா...' பாடலுக்கு நடித்தேன்.அப்போதெல்லாம் இந்த வேடத்துக்கு, இன்னார் தான் வேண்டும் என்றால், எப்பாடு பட்டாவது அவரையே ஒப்பந்தம் செய்வர். அந்த காட்சிக்கு ஏற்ற உடைக்கான செலவை பற்றி கவலைப்படாமல், அதை தைத்துக் கொடுத்து விடுவர்.ஜெமினி ஸ்டுடியோவில், இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் கதாநாயகி, வைஜெயந்தி மாலா. அவரின் தங்கை வேடத்தில் நடிக்க, என்னை அணுகினர். அப்போது நான், எல்லா படங்களிலும் கதாநாயகியாய் நடித்துக் கொண்டிருந்தேன்.'இப்ப போய், தங்கை வேடம் செய்தால் சரியா இருக்காது...' என்று, ஒப்புக்கொள்ளவில்லை, அம்மா.'இருக்கலாம். ஆனா, வைஜெயந்திக்கு தங்கைன்னா இவதான் இருக்கணும். நீங்க மாட்டேன்னு சொன்னீங்கன்னா, இவளுடைய கை, காலையெல்லாம் கட்டி துாக்கிட்டு போயிருவேன்...' என்றார், வாசன் சார்.கதைக்கான கேரக்டரை அப்படியே திரையில் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்வர் என்பதை சொல்லத்தான், இந்த விஷயத்தை இங்கே கூறுகிறேன்.வாசன் சார் அப்படி சொன்னதும், ஒப்புக்கொண்டார், அம்மா. அந்த படத்தை ஹிந்தியில், டைகாம் என்ற பெயரில் எடுத்தனர். இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன.நாடோடி மன்னன் படத்தில், இரண்டு கதாநாயகிகள். எனக்கென்று புதிய பாத்திரத்தையே உருவாக்கினார், எம்.ஜி.ஆர்.,படத்தில், ஒரு பெரிய பாம்புடன் நான், நடனமாட வேண்டும். அதற்காக, பாம்பை கொண்டு வந்தனர். எனக்கு, பாம்பு என்றால் பயம். பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், படப்பிடிப்புக்கு தயாரானேன். எடுத்த எடுப்பிலேயே பாம்பு என்னை சுற்றிக் கொண்டது. அவர்கள் சொன்னபடியே செய்தேன். 'சரியாக வரவில்லை; இன்னொரு டேக்...' என்றார், கேமரா மேன். மறுபடி நடிக்க தயாரானேன்.சாதாரணமாக, இம்மாதிரியான காட்சிகளை எடுக்கும் போது, மலைப் பாம்பின் வாலை ஒருவர் பிடித்துக் கொள்வார். இல்லாவிட்டால், நிஜமாக சுற்றி, ஆளை நசுக்கி விடும்.இரண்டாவது, 'டேக்' எடுத்தபோது, பாம்பின் வாலை பிடித்துக் கொண்டிருந்தவர், அசந்தர்ப்பமாக விட்டு விட்டார்.மலைப் பாம்பு, என்னை முழுவதுமாக சுற்றிக் கொண்டதில், நினைவு தப்பியது.படப்பிடிப்பில் இருந்தவர்கள் ஓடி வந்து, பாம்பை விலக்கி என்னை மீட்டு, தண்ணீர் தெளித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மலைப் பாம்பு எங்கெல்லாம் உடலில் அழுத்தியதோ, அங்கெல்லாம் நீலம் பாய்ந்து வலித்தது. என்னை விட, அம்மா தான் அதிகம் பயந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதம், அதற்கான சிகிச்சையும், மருந்துகளும் எடுத்துக் கொண்டேன்.பாம்புடன் நடித்தது, முதலும், கடைசியும் அதுதான். அப்போது, சினிமா துறைக்கு புதியவள் என்பதால், ஏதோ ஒரு ஆர்வத்தில் நடித்து விட்டேன். அதன்பின், 'எத்தனை கோடி கொடுத்தாலும், பாம்புகளுடன் நடிக்க மாட்டேன்...' என்று, சொல்லி விட்டேன்.பாம்புகளின் நினைவு வந்து விடும் என்பதால், மீன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். நான், மீன் சாப்பிட வேண்டும் என்பதற்காக, மீனில் மேல் தோலை நீக்கி, எனக்கு தருவர். படப்பிடிப்பிற்காக எப்படியெல்லாம் சிரமப்பட்டோம் என்பதை குறிப்பிடத்தான், இதையெல்லாம் சொல்கிறேன்.நடிப்புக்காக, எல்லா வட்டார மொழிகளையும், தேவையான கலைகளையும் கற்றுக் கொண்டோம். இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும், 'டூப்' போட்டு நடிக்கின்றனர். அப்போதெல்லாம் சண்டைக் காட்சிகளில், 'டூப்' போடாமல் தான் நடிப்போம்.கல்யாண பரிசு படத்தில், சைக்கிள் ஓட்டும் காட்சி வரும். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பதால், படப்பிடிப்பிற்கு முன், எங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் சைக்கிள் ஓட்டி பழகினேன். பூந்தொட்டிகளின் மீது விழுந்து, அதையெல்லாம் உடைத்து, ஓரளவுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன். ஆனால், சைக்கிளில் ஏறுவது, இறங்குவது மட்டும் வரவில்லை.படப்பிடிப்பின்போது சைக்கிளில் ஏறி உட்காரும் வரை, யாராவது வந்து பிடித்துக் கொள்வர். 'ஆக் ஷன்' என்றதும் விட்டு விடுவர். 'கட்' என்ற குரல் கேட்டதும், 'யாராவது வாங்க, வந்து பிடியுங்க...' என்று, கத்துவேன்.கார் டிரைவிங் கற்றுக்கொண்டதும், இப்படித்தான். தாய் சொல்லை தட்டாதே படத்திற்காக, நான் கார் ஓட்ட வேண்டும்.'நீ, முன்னால் மட்டும் போய்க் கொண்டே இரு. பின்னால் வராதே...' என்று, அப்பா சொல்லித் தந்தார். அதனால், 'ரிவர்ஸ் கியர்' போட்டு பின்னே போவதை சொல்லித் தரவில்லை.— தொடரும்நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்எஸ். விஜயன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !