ஆச்சரியமூட்டும் தஞ்சை பெரிய கோவில்!
பிப்., 5, பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்குதஞ்சை பெரிய கோவிலின் கோபுர உச்சியை உற்று பார்த்தால், பிரம்மாந்திர கல் எனப்படும், ஸ்துாபிக் கல் தெரியும். இதன் எடை, 80 டன்.இந்த பிரம்மாந்திர கல்லை தாங்கும், சதுர வடிவ கல்லும், 80 டன் கொண்டது. அந்த சதுர கல்லின் மேல் பக்கத்திற்கு, இரண்டு நந்தியாக மொத்தம், எட்டு நந்தி உள்ளது. ஒவ்வொரு நந்தியின் எடையும், 10 டன். ஆக, எட்டு நந்தியின் மொத்த எடை, 80 டன்.இந்த மூன்றும் தான், பெரிய கோவிலின் அஸ்திவாரம். இது என்ன விந்தை. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும். தலைகீழாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா...நாம், செங்கற்களை வைத்து வீடு கட்டும்போது, கட்டடத்தின் உயரம், 12 அடி என்றால், 4 அடிக்காவது அஸ்திவாரம் போடுவோம். பெரிய கோவிலின் உயரம், 216 அடி. முழுக்க, முழுக்க கற்களை வைத்து எழுப்பப்படும் ஒரு பிரமாண்ட கற்கோவில். கற்களின் எடையோ மிக மிக அதிகம்.இவ்வளவு பெரிய கோவிலுக்கு, குறைந்தது, 50 அடி ஆழம், 50 அடி அகலம் அஸ்திவாரம் அமைக்க வேண்டும். இந்த அளவு சாத்தியமே இல்லை. 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும், புகை மண்டலமாக தான் இருக்கும்.ஆனால், பெரிய கோவிலின் அஸ்திவாரம், வெறும், 5 அடி தான். இது எப்படி சாத்தியம்... இங்கு தான் சோழர்களின் அறிவியல், நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது. பெரிய கோவில் கட்டுமானத்தை, அதாவது, கற்கள் இணைக்கப்பட்டதை, இலகு பிணைப்பு என்கின்றனர். அதாவது, ஒவ்வொரு கல்லையும் இணைக்கும்போது, ஒரு நுாலளவு இடைவெளி விட்டு அடுக்கினர்.கிராமத்தில் பயன்படுத்தப்பட்ட கயிற்றுக் கட்டிலை நினைவில் கொள்ளுங்கள். கயிறுகளின் பிணைப்பு லுாசாக தான் இருக்கும். அதன் மேல் ஆட்கள் உட்காரும்போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகி விடும். இதனால், கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது.இதன் அடிப்படையில் தான், பெரிய கோவில் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. லுாசாக கற்களை அடுக்கிக் கொண்டே சென்று, அதன் உச்சியில் மிக பிரமாண்டமான எடையை அழுந்த செய்வதன் மூலம் மொத்த கற்களும் இறுகி, மிக பலமான இணைப்பை பெறுகின்றன.கோவிலின் உச்சியில், அஸ்திவாரம் இடம்பெற்ற அதிசயம் இது தான்.எத்தனை பூகம்பம் வந்தாலும், எந்த கல்லும் அசையாது; எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று இருக்கும்.சூரிய - சந்திரர் இருக்கும் வரை, இக்கோவிலும் இருக்கும் என்ற, நம் ராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை, எந்த காலத்திலும் பொய்க்காது.சாம்பார் வந்தது எப்படி?தஞ்சாவூரை, ஆட்சி செய்து வந்தவர்கள், போன்ஸ்லே வம்சத்தினர்.மராத்தா மா மன்னர் சிவாஜியின் மகன், சாம்பாஜி போன்ஸ்லே, நாட்டை ஆண்டதுடன், சமையல் கலையிலும் வல்லவராக இருந்தார்.ஒருநாள், ஆம்டி என்ற மராத்திய சமையலை செய்து கொண்டிருந்தபோது, வழக்கமான எலுமிச்சை சாறுக்கு மாற்றாக, புளி, மஞ்சள் துாள் மற்றும் காய்களையும் போட்டு செய்தார். அது, அனைவராலும் ரசித்து, சாப்பிடப்பட்டது.பிறகு, அந்த புதிய சமையல் குறிப்புக்கு, சாம்பாஜியை நினைவு கூறும் வகையில், 'சாம்பார்' என, பெயரிடப்பட்டது.கால மாற்றத்தால், கூடுதலாக மசாலாக்கள் சாம்பாரில் சேர்க்கப்பட்டது.— ஜோல்னா பையன்