உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவில் சிவராத்திரி!

சிவன் கோவில்களில் சிவராத்திரியும், அம்மன் கோவில்களில், நவராத்திரியுமே பிரதானம்; ஆனால், புதுக்கோட்டை - அரிமளம் சாலையில், 18 கி.மீ., துாரத்திலுள்ள சத்திரம் கிராமத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில், சிவராத்திரி விழாவே, பிரதானம்.சிதம்பரம் அருகேயுள்ள நல்லினம் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன், பூஜாரி ஒருவர் இருந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், ஆவுடையார்கோவிலில் வசித்து வந்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், புகுந்த வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கைக்குழந்தையுடன் வெளியேற்றப்பட்டாள். தன் வீட்டில் வைத்து வணங்கிய காமாட்சி அம்மன் திருவுருவத்துடன், தன் உடன்பிறந்தோர் வசித்த, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலுக்கு வந்தாள்.வழியில், சில குடு குடுப்பைக் காரர்கள், கைக்குழந்தையுடன் தன்னந் தனியே வருபவளைப் பார்த்து இரக்கப்பட்டு, அவள் ஊர் வரை பாதுகாப்பாக வந்தனர். பின், அவ்வூரிலேயே தங்கி விட்டனர்.குழந்தை வளர்ந்து, பத்து வயதை எட்டினான். விளையாடுவதற்காக தாயிடம் உடுக்கை கேட்க, தாயும் வாங்கிக் கொடுத்தாள். சிறுவன் அதை அடித்து விளையாடும் போதெல்லாம், வீட்டில் சிலையாய் இருந்த காமாட்சி, அதை ரசித்துக் கேட்டதுடன், அதற்கு பரிசாக, அக்குழந்தை உடுக்கை அடித்தபடியே எது சொன்னாலும் பலிக்கும் பாக்கியத்தை, அவன் அறியாவண்ணம் கொடுத்தாள்.இதனிடையே, காளையார் கோவிலை ஆண்ட மன்னரின் மனைவிக்கு, நோய் ஏற்பட்டது. தீர்க்க முடியாத அந்நோய்க்கான காரணத்தை அறிய, குடுகுடுப்பைக்காரர்களை வரவழைத்தார், மன்னர். அவர்கள் சில காரணங்களைக் கூறினர்.அவை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. எனவே, அவர்களை சிறையில் அடைத்து விட்டார். தன் தாயை சிறு வயதில் காப்பாற்றிய குடுகுடுப்பைக்காரர்கள் சிறையில் அடைக்கப் பட்டதை அறிந்த சிறுவன், அவர்களை வெளியே கொண்டு வர எண்ணினான்.அரசனிடம் சென்று, நோய்க்கான காரணத்தையும், அது, தீர்வதற்கான வழியையும் சொன்னான். நோய் குணமானது; மனம் மகிழ்ந்த மன்னன், 'உனக்கு என்ன வேண்டும்...' எனக் கேட்க, குடுகுடுப்பைக்காரர்களை விடுவிப்பதுடன், தனக்கு ஓர் உடுக்கை பரிசாகத் தர வேண்டும் எனக் கேட்டான்; அவ்வாறே செய்தார், மன்னர்.காமாட்சியின் அருளால் குறி சொல்லி வந்த அச்சிறுவனின் மரபில் வந்த நான்கு பேர், அவனது அன்னை வணங்கி வந்த காமாட்சிக்கு பிற்காலத்தில் கோவில் எழுப்பினர்.காமாட்சியம்மன், பரம்பொருளான சிவபெருமானுக்குள் ஐக்கியமானவள் என்பதால், அம்மன் கோவில் என்றாலும் கூட, இங்கு சிவராத்திரியே முக்கியமான விழாவாக கொண்டாடப்படுகிறது. பவுர்ணமியன்று சிறப்பு பூஜையும் உண்டு.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !