அந்துமணி பதில்கள்
* கே.தர்மலிங்கம், ஆரப்பாளையம்: அண்ணாதுரை மறைவுக்குப் பின், நெடுஞ்செழியன் தலைமை ஏற்று இருந்தால், இப்போது திராவிடக் கட்சிகளின் நிலைமை எப்படி இருந்திருக்கும்?அந்த, நல்ல காரியம் நடக்காமல் போய் விட்டதே... இந்நேரம், திராவிட கட்சிகள் இருந்த இடத்தில், புல் என்ன மரமே முளைக்க வைத்திருப்பார்!*****ஆர்.லட்சுமிபிரியா, கொடைக்கானல்: உழைக்க மறுப்பவர்களை என்ன செய்யலாம்?சுட்டுத் தள்ள வேண்டும்; உழைக்க மறுப்பவர்களை வைத்து காப்பாற்றுபவர்களை - போஷிப்பவர்களை! உழைக்க மறுப்பவர்களை விட, இவர்கள் தான் சமூகத்திற்கு, நாட்டிற்கு அதிக தீங்கு இழைக்கின்றனர் - சோறு போட்டு, உடல் வளர்க்க உதவுவதன் மூலம்!****டி.எஸ்.சங்கர், சென்னை: போராட்டமே இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்?உப்பு இல்லாத அவியல் போல, சர்க்கரை இல்லாத அல்வா போல இருக்கும்!****எஸ்.சங்கரநாராயணன், சின்னமனூர்: வாகன, 'ஸ்டெப்னி' - வாழ்க்கை, 'ஸ்டெப்னி' - விளக்கம் தேவை!முதலாவது, 'ஸ்டெப்னி' - ஆபத்பாந்தவன்; துன்ப காலத்தில் கைகொடுப்பதில் தேர்ந்தவன்! இரண்டாவது, 'ஸ்டெப்னி' தொல்லைகளுக்கும், துயரங்களுக்கும், துக்கங்களுக்கும் தூபம் போட அவதரித்தது!***** எஸ்.வி.குப்புசாமி, போடிநாயக்கனூர்: நம் நாட்டில் இலவசமாகக் கிடைப்பது எது?பேச்சு; வெட்டிப் பேச்சு! இப்போது எல்லாரும், எதைப்பற்றி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், பேசிக்கொண்டே தானே இருக்கின்றனர்!****பி.அனந்தபத்மநாபன், பெரியகுளம்: அண்ணே... அந்துமணியண்ணே...'கடமை, கடமை'ங்கிறாங்களே...அப்படின்னா என்னண்ணே?உனக்குன்னு வரும்போது, நீ மறந்து போயிடற சமாச்சாரம்; எனக்குன்னு வரும்போது, மறக்காம, நீங்கள் சொல்லும் ஒரு சொல்தான் இது!****எம்.பேச்சியம்மாள், திருப்பூர்: காதலில் தோல்வி அடையும் பெண்கள், தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனரே...வடிகட்டிய முட்டாள்தனம்! 'காதல் தோல்வி' என்பது, வாழ்க்கையின் ஒரு 'பேஸ்' - கட்டம்தான்! தோல்வியால் உண்டாகும் அவமானமும், ஏமாற்றமும், சுய பச்சாதாபமும் காலத்தால் மறைந்தும், மறந்தும் போய் விடும்!***** சி.ரேணுகாதேவி, கோவை: சில பெரிய மனிதர்களைப் பார்க்கும் போது, 'இவர்கள் மாதிரி நம்மால் சாதிக்க முடியுமா?' என்ற பிரமிப்பு ஏற்பட்டு, மனதில் சோர்வு தோன்றி விடுகிறதே.. என்ன சார் செய்வது?சோர்வைத் தொலையுங்கள்... இன்னும் ஐந்து வருடத்திற்குப் பின், 'உங்களைப் (பெயர்) பார்த்தால் பிரமிப்பாக இருப்பதாக...' இன்னொருவர் என்னிடம் கேள்வி கேட்கக் கூடும்!***