அந்துமணி பதில்கள்
என்.நாகராஜன், தேவனாம்பாளையம்: யாரையும் காதலிக்கக் கூடாது என்று வைராக்கியம் இருந்தாலும், சில நேரங்களில் மனசு சஞ்சலப்படுகிறதே...சஞ்சலம் என்று கூறாதீர்கள். அது, இயற்கை. அந்தந்தப் பருவத்தில் ஏற்படும் இயற்கை உணர்வுகள். அந்த உணர்வுக்கு மதிப்பளித்து, உண்மையாக, ஏமாற்றாமல் செயல்பட உங்களால் முடியும் என்றால் மட்டுமே காரியத்தில் இறங்குங்கள்; உங்களது ஒரு செயலால், பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைக்கு காரணமாகாதீர்கள்!கே.ராஜாமணி, திருப்பூர்: கணவனின் சிறப்பை, மனைவி எப்போது தெரிந்து கொள்கிறாள்?பெரும்பாலோர் கல்யாணமான உடனேயும், அடங்காப் பிடாரிகள், கணவன் வீட்டை விட்டு ஓடிய பின்னோ அல்லது அவனுக்கு, 'டிக்கெட்' வாங்கிக் கொடுத்த பின்னோ!டி.சசிகலா, நெகமம்: பஸ்சில் காலை, மாலை ஜன நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில், முன் பக்கம் உள்ள பயணிகளிடமிருந்து டிக்கெட் வாங்கித் தருகிறேன் என்று கூறி, காசை வாங்கி, பயணிகளை ஏமாறறி, பஸ் மெதுவாகச் செல்லும் போது, இறங்கி விடும் ஆசாமிகளைப் பற்றி...முக ஜோசியம் தெரிந்தவர்கள். முகத்தைப் பார்த்தவுடன், 'இன்னிக்கு கிராக்கி சிக்கிடுச்சி' என்பதைப் புரிந்து கொள்ளும், திறமை படைத்தவர்கள்!ம.கணேசன், புளியம் பட்டி: வேலை தேடி அலைந்த ஒருவர், தற்போது, சிறிய அளவில் செருப்புக் கடை ஆரம்பித்து விட்டார். அது கேவலமா?சம்பாதிக்கும் வயதும், தகுதியும் வந்த பின்னும், அப்பா கையை எதிர்பார்த்து இருப்பது தான் கேவலம். பிறரை ஏமாற்றாமல், வயிற்றில் அடிக்காமல், சுய முயற்சியால் சம்பாதிக்கும் எந்தத் தொழிலுமே கேவலம் இல்லை!எஸ்.பாலசரஸ்வதி, திண்டுக்கல்: கூட்டுக் குடும்பத்திலிருந்து கஷ்டப்படும் என் போன்ற பெண்களுக்கு பிரச்னை தீர என்ன வழி, என்று நிம்மதி?போதுமான பொருளாதார வசதி இருந்தால், தனிக் குடித்தனம் சென்று விடலாம். ஆனால், தனிக் குடித்தனத்தின் நரக வேதனை பற்றி, தனிப் புத்தகமே எழுதலாம். . நகரத்தில் உள்ள என் நண்பர்கள் பலர், பொருளாதார வசதி இருந்தும், அவ்வளவு சிரமப்படுகின்றனர். 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு' மற்றும் 'நான்கு மாடுகளும் ஒரு சிங்கமும்' - இதை எல்லாம், மீண்டும் ஒரு முறை நினைத்துப் பாருங்கள்!ம.நாசர், போடி: நான் எல்லாரிடமும் ஜாலியாக, சகஜமாகப் பேசுவேன். ஆனால், எல்லாரும் என்னை 'அறுவை, ரம்பம்' என்று கூறுகின்றனரே...யாராவது ஒருவர், இருவர் இதே கருத்தைச் சொன்னால், 'உங்களது பேச்சுத் திறமை, அறிவு ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொண்டு பேசுவதாகச் சொல்லலாம். 'எல்லாரும்' என நீங்கள் குறிப்பிடுவதால், 'மவுனசாமி'யாக இருப்பதே நலம்!வெ.குந்தவை, கோயம் புத்தூர்: தங்கம் விலை குறை யுமா? உங்கள் வாழ் நாளில் ஏறிய எந்தப் பொருளின் விலை இறங்கி உள்ளது... யோசித்துப் பாருங்கள். கையில் காசு நிறைய இருந்தா, நழுவ விடாதீஙக, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிறைய வாங்கி, 'ஸ்டாக்' பண்ணிடுங்க; குறையவே குறையாது தங்க விலை!