அந்துமணி பதில்கள்!
எஸ்.விஷ்வராஜ், அம்மாபாளையம்: மருத்துவத் துறையில் நம் நாடு முன்னேறி விட்டது தானே?நகரங்களைப் பொறுத்தவரை, 'ஆம்' என்று சொல்லித் தான் ஆக வேண்டும். கிராமப் புறங்களை இது, இன்னமும் எட்டி பார்க்கவே இல்லை. பிறந்து நான்கு வாரத்திற்குள் உயிர் விடும் தளிர்கள், உலக அளவில் பார்க்கும் போது, மூன்றில் ஒன்று இங்கே நடக்கிறது என்கிறது மத்திய சுகாதாரத் துறையின் குறிப்பு ஒன்று!எஸ்.அஸ்வத்கந்தன், புதுச்சேரி: கிரிக்கெட் விளையாட்டை சில நேரங்களில் ஐந்து நாட்கள் கூட விளையாடுகின்றனர். கால் பந்தாட்டம், கூடைப் பந்து, டென்னிஸ் மற்றும் ஹாக்கி போன்றவை சில மணி நேத்தில் முடிந்து விடிகிறது. மிக குறைந்த நேரத்தில் முடியும் விளையாட்டு எது?கிழங்கு கிழங்காக குண்டு உடலைக் கொண்ட, மாமிச மலைகளாக திகழும் இருவர், தம் இடையில் ஜமுக்காளத் துணியில் ஒரு பகுதியை கிழித்துக் கட்டிக் கொண்டு, ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து சண்டையிடும், 'சுமோ' எனும் விளையாட்டு, 30 வினாடிக்குள் முடிந்து விடும்!எம்.எஸ்.மயில்வாகனன், ஊமச்சிகுளம்: கிடைத்த வேலையை, 'கப்' என்று பிடித்துக் கொள்வது - படிப்புக்கேற்ற வேலை கிடைக்கும் வரை காத்திருப்பது... எது சரி?முதலாவதே சரி! இன்று பல இன்ஜினியரிங் பட்ட தாரிகள் இதே முடிவையே எடுக்கின்றனர். தாம் தேர்வு செய்யும் தம் படிப்புக்கு தொடர்பில்லாத துறையில் முன்னுக்கும் வந்து விடுகின்றனர். கால விரயம் என்பது தேச துரோகம்!ம.மெய்ஞானம், மங்கலம்பேட்டை: பெரிய பாக்கியசாலியாக யாரை கருதுகிறீர்கள்?மனசாட்சி என்ன சொல்கிறதோ, அதைக் கேட்டு, அதன்படி சத்தியத்துடன் நடப்போர் உலகில் மிகப் பெரிய பாக்கியசாலி! மனசாட்சி சொல்வதைக் கேட்க மறுப்போர், வெறுப்போர், பல விஷயங்களில் அல்லல் படுவர்!வி.கே.கணேஷ், பாலமேடு: நண்பர், 'டூ - வீலர்' வாங்க, 'கியாரண்டராக' என், 'செக் - லீப்'களை தரலாமா?தரக் கூடாது; இது, தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். முடிந்தால், அத்தொகை திரும்பி வராது என எண்ணி, வட்டி இல்லாமல் ஒரு தொகையை நண்பருக்கு அளியுங்கள். இல்லையேல், உறவு போகும்; பகை தான் மிஞ்சும்!சு.பாலுமகேந்திரன், மயிலாப்பூர்: 'ஷாக்' அடிக்க வைத்த செய்தி ஏதும் சமீபத்தில் படித்தீர்களா?படித்தேனே... இங்கிலாந்து செய்தி இது! அங்கே, ஒரு நாயை, அதன் ஆயுட்காலம் வரை வளர்த்து பராமரிக்க ஆகும் செலவு என்ன தெரியுமா? சராசரியாக, 17 லட்சம் ரூபாயாம்! இங்கே, ஒரு சராசரி மனிதன், தன் ஆயுட்காலம் முழுமைக்கும் கூட இப்படி சம்பளம் வாங்கிவிட முடியுமா?மு.உதயசங்கர், காஞ்சிபுரம்: இந்தியாவில், எந்த மாநில ஆட்சியை, 'நல்லாட்சி' என்பதற்கு உதாரணமாகக் கூறலாம்?ஒன்றைக் கூட கூற முடியாது. தங்கள் பதவியை காத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர் ஆட்சியாளர்கள். வாங்கும் சம்பளத்தில் குடும்பத்தை நடத்திச் செல்ல இயலாத அளவில், விலைவாசி ஏறிக் கொண்டே போகிறது. ஏமாளிகளான நாம், 'வாழ்க, ஒழிக...' கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறோம்!