உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

பி.ஜெரிக், பொள்ளாச்சி: பணம் தண்ணீராக செலவழிகிறது; சேமிக்க முடியவில்லை. சேமிக்க நல்ல யோசனை கூறுங்களேன்...சம்பள கவர் கைக்கு வந்ததும் குறிப்பிட்ட தொகையை வங்கியில் போட்டு விடுங்கள்.ஆடம்பரம் மற்றும் மிக அவசியம் என்றில்லாத பொருட்களை, 20ம் தேதிக்கு பின் வாங்கலாம் என, தீர்மானியுங்கள். (20ம் தேதிக்கு பின், கையில் காசு இருக்காது.)வெளியில் செல்லும் போது, பஸ் செலவுக்கு மட்டும் பர்சில் காசை வைத்துக் கொள்ளுங்கள்.சேவிங்க்ஸ் அக்கவுண்ட், 'செக் புக்' வங்கியில் தந்தால், எல்லா லீப்களிலும், 'கேன்சல்ட்' என, இரட்டை கோடு போட்டு, எழுதி விடுங்கள். வங்கியில் பணம் செலுத்தச் செல்லும் போது, 'வித்ட்ராயல் சிலிப்' இருக்கும் பக்கம் திரும்பியே பார்க்காதீர்கள்.இரண்டு மாதம் முயன்று, பலனை எழுதுங்களேன்!என். காந்தி, சென்னை: தனியார் நிறுவனத்தில், 15,000 ரூபாயில் ஒரு வேலை; சர்வீஸ் கமிஷன் மூலம் அரசு துறையில் எழுத்தர் பணி; 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சுய தொழில்... இம்மூன்றும் ஒரே நேரத்தில், ஒரு பட்டதாரி இளைஞனுக்கு கிடைக்கிறது... எதை ஏற்றுக் கொள்ள அவருக்கு சிபாரிசு செய்வீர்கள்?மூன்றாவதைத்தான்; முதலிரண்டில் பெறப் போகும் பொருளாதார ஆதாயத்தை காட்டிலும், மூன்றாவது பன்மடங்கு கிட்டும். மேலும், சுயதொழில் மூலம் கிடைக்கும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் மற்றவற்றில் கிடைக்காது. ஆனால், நம் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை செய்வதில் ஆர்வமே இல்லையே... இரண்டாவது, 'ஆப்ஷனை' தானே விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர்! * ஆர். சத்யா, மதுரை: இறந்தவர்களின் சிலை, புகைப்படம், சமாதி முன் விழுந்து நமஸ்கரிப்பதால் பலன் அதிகமா அல்லது உயிருடன் உள்ளவர்கள் முன் நேரடியாக விழுந்து நமஸ்கரிப்பதில் பலன் அதிகமா?இரண்டாவதில் தான் பலன் அதிகம்; எப்பவும் இல்லை என்றாலும், அவ்வப்போதாவது நிச்சயம் பலன் கிடைக்கிறது என்பதை, கண்ணெதிரே கண்டு கொண்டு தானே, இருந்தோம்; இருக்கிறோம்!ரா.கீதா, புதுச்சேரி: வீட்டு செலவுக்கு தேவை யான பணத்தை மட்டும் கொடுத்து, உம்மணா மூஞ்சியாக சில ஆண்கள் இருக்கின்றனரே...குடும்பத்தைத் தவிர, தம்பதியருக்குள் காமன் சப்ஜெக்ட் ஏதும் இல்லாமல் போவதுதான் இதற்கு காரணம். இப்படி இருக்கும் கணவனையோ, மனைவியையோ, ஆன்மிகம், சினிமா, பத்திரிகை என, ஏதாவது ஒரு சப்ஜெக்டுக்கு இழுத்துப் பேசி, விவாதிக்க ஆரம்பித்தால் இக்குறை தீர்ந்து விடும்.* எஸ்.மணி, திண்டுக்கல்: சொத்து பிரச்னை விரைவாக முடிய அடி தடி, பஞ்சாயத்து, கோர்ட் இம்மூன்றில் எதைத் தேர்ந்தெடுக்கலாம்?கோர்ட்: சம்பந்தப்பட்டவர் களின் பேரன், - கொள்ளு பேரன் காலத்தில் தான் முடிவு தெரியும். பஞ்சாயத்து: அப்பத்தை பங்கு போட குரங்கிடம் சென்ற பூனைகளின் கதையாகி விடும்.அடிதடி: மாமியார் வீட்டு விருந்தாளியாக்கி விடும்.சம்பந்தப்பட்டவர்கள், விட்டுக் கொடுத்து, தமக்குள்ளே பேசி முடிப்பதே சிறந்த வழி!ஆர்.குமரவேல், திருவண்ணாமலை: 'நான் பணக்காரன், என்னால் எதையும் சாதிக்க முடியும்; முடியாதது என்பது என் அகராதியில் கிடையாது...' என்கிறானே, என் நண்பன்...பணம் தரும் போதையால், மமதையால் வெளியான, 'ஸ்டேட்மென்ட்' இது! ஓடும் நாட்களையோ, உதிக்கும் சூரியனையோ பணத்தைக் கொண்டு உங்கள் நண்பரால் நிறுத்தச் சொல்லுங்களேன்... பல நூறு கோடிகளின் அதிபதிகளான அம்பானிகளாலும், பிர்லாக்களி னாலும் கூட முடியாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !