உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

அந்த வாசகி, உளவியல் முதுகலை படிப்பவர்; அடிக்கடி விமர்சனக் கடிதங்கள் எழுதுவார்; நேரில் சந்தித்தது இல்லை.சமீபத்தில் ஒருநாள் தொலைபேசியில் அழைத்து, 'நேரில் சந்திக்க வேண்டும்...' என்றார். வந்தவர், தன் தம்பியை கல்லூரியில் சேர்க்க சிபாரிசு செய்யும்படி கேட்டுக் கொண்டார்; தேவையான ஏற்பாடுகளை செய்து தந்தேன்.அன்று, பேச்சினுாடே, 'உளவியல் தொடர்பாக ஏதாவது கூறுங்களேன்...' என்றேன்.'சாதத்தை வைத்து உளவியல் சமாசாரம் ஒன்றைக் கூறுகிறேன்... இதை, 'சாத சோதிடம்' என்று வைத்துக் கொள்ளுங்கள்...' என, அவர் கூறியதைக் கேட்டு, வாய் பிளந்து அமர்ந்திருந்தேன்.'உங்களுக்கு ஐந்து வயதில் பையன் இருக்கிறானா? அவனைப் பற்றிய எதிர்காலத்தை அறிய உங்களுக்கு ஆசையா?' என்றார்.நான் பதில் ஏதும் சொல்லாமல், அவரையே பார்த்தபடி இருந்தேன்.'இதோ, இப்போதே அறியலாம் அவனது பிற்காலத்தை...' என்றபடியே தொடர்ந்தார்...'தேவையானவை: ஒரு தட்டு, கொஞ்சம் சோறு. தட்டிலே சாதத்தைப் பிசைந்து, உங்கள் குழந்தை முன் வையுங்கள்; பின்னர் கவனியுங்கள்...'சாதத்தால் தட்டிலே பாத்தி கட்டிக் கொள்கிறானா... அப்படியானால், அவன் கூடப் பிறந்தவர்களுடன் பாகப்பிரிவினை செய்து கொள்ள கோர்ட் ஏறுகிறவனாக திகழ்வான். அந்த நிலை வராமல், நீங்களே ஒரு ஏற்பாடு செய்து, கண்ணை மூடுங்கள்.'அடுத்து, பிசைந்த சோற்றை உருட்டுகிறானா? அதிர்ச்சி அடையாதீர்கள்... எதிர்காலத்தில் உங்கள் தலையை உருட்டுவான் அல்லது நாலு பேரை உருட்டும்படியான காரியங்களைச் செய்வான்.'மூன்றாவதாக, நீங்கள் தட்டைத் தொட்டால் வீலென்று கத்துகிறானா? பிற்காலத்தில் உங்களுக்கு, அவன் கையால் சாப்பாடு கிடைக்குமென்பது நிச்சயமில்லை; அப்படியே போட்டாலும், திட்டிக் கொண்டே தான் போடுவான். ஆகவே, உங்கள் எதிர்காலத்துக்கு இப்போதே சேமியுங்கள்.'காலை நீட்டிக் கொண்டோ, கால் மேல் கால் போட்டுக் கொண்டோ சாப்பிடுகிறானா? குழந்தையின் எதிர்காலத்துக்கு இப்போது இருந்தே சேமிப்பது நல்லது. எதிர்காலத்திலும் குழந்தை இப்படி கால் நீட்டிக் கொண்டு சாப்பிடத்தான் விரும்புவான்; அது, அவ்வளவு சுலபமாக இருக்காதே!'சாப்பிடும் போது சோற்றை வாய், மேவாய், கன்னம், மூக்கு நுனியெல்லாம் பூசிக் கொள்கிறானா? 'மேக் -- அப்' ஆசை இப்போதே வந்துவிட்டது. உடனே கோடம்பாக்கம் பக்கமாக குடியேறி, பையனை திரையுலகில் தள்ளப் பாருங்கள். அப்புறம் அவன் தலையெழுத்துப்படி நடக்கட்டும்.'சாதத்தில் கிடக்கும் கல், மண்ணைப் பொறுக்கி எறிகிறானா? நாளைக்கு மாமனாராக வரப் போகிறவர் பாவம்... இவனிடம் மாட்டிக் கொண்டு திண்டாடுவார். என்ன சீர் செய்தாலும், 'நொள்ளை' கண்டுபிடிக்கிற மாப்பிள்ளையிடம் அவரது விழி பிதுங்கப் போகிறது.'சாதத்தை ஏறெடுத்தும் பாராமல் திரும்பிக் கொள்கிறானா? இவனைப் போல பெரிய அரசியல் தலைவர் யாரும் இருந்ததில்லை என்று பெயரெடுப்பான்! ஆமாம்... குழந்தை இப்போதிருந்தே, உண்ணாவிரதப் பயிற்சி செய்கிறானே...'- என்று சொல்லிச் சிரித்தார்.'உண்மையா?' எனக் கேட்டேன்.'சோதித்துப் பார்த்து சொல்லுங்கள்...' எனக் கூறி சென்று விட்டார்.எனக்கு வந்திருந்த, மின் அஞ்சல்கள் மற்றும் - இ - -மெயில்களைப் பார்த்தபடி இருந்தேன்.சிங்கப்பூரில் இருந்து வாசகி ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். அதில், அவரது கணவர் சிங்கப்பூரில் பணியாற்றுவதாகவும், தம்பதியருக்கு, நான்கு வயதில் குழந்தை ஒன்று இருப்பதாகவும் கூறி, 'வாரமலர்' இதழில் என்னுடைய, கேள்வி -- பதில் பகுதியைப் படித்ததாகவும், அதனால் ஏற்பட்ட பலன்களையும் எழுதியிருந்தார்.தான் வெகுகாலமாக, 'டிவி' சீரியல்களில் மூழ்கி இருந்ததாகவும், இதனால், அந்த தொடர்களில் வரும் கதாபாத்திரங்களுடன் ஒன்றியதில் மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டு, மூக்கு நுனியில் கோபம் வரும் திடீர் பழக்கம் ஒட்டிக் கொண்டதாம்...இதனால், தன் கணவரையோ, குழந்தையையோ சரியானபடி கவனிக்க முடியாமல் போனது என்றும், அவர்கள் மீது எரிந்து விழுவது, கோபப்படுவது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டதுடன், வீட்டையும் ஒழுங்காக பராமரிக்க முடியாத நிலை வந்து விட்டதாம்.இவரிடம் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த அன்பான கணவர், இந்த மாற்றங்களுக்கான காரணம், டெலிவிஷன் சீரியல்கள் தான் என்பதை உணர்ந்து, அவரிடம் எடுத்து கூறி, டெலிவிஷன் பார்ப்பதை நிறுத்தும்படி கேட்டிருக்கிறார். ஆனால், வாசகியால் சீரியல் என்ற அரக்கியின் கோரப் பிடியில் இருந்து விடுபட முடியவில்லை.அதன்பின், 'வாரமலர்' இதழில் வெளியான கட்டுரை மூலம், 'டிவி' சீரியலால் ஏற்படும் மன அழுத்தத்தை பற்றி அறிந்து, 'தன் கணவரும் இதைத்தானே கூறுகிறார்...' என்ற எண்ணம் வந்து, கேபிள் கனெக் ஷனை துண்டித்திருக்கிறார்.ஆனால், அடுத்து வந்த நாட்களில், சீரியல் பார்க்க வேண்டும் என்ற பரபரப்பு, ஆசை, மோகம், வெறி தன்னை ஆட்டிப் படைத்ததாகவும், இப்போது, அதிலிருந்து விடுபட்டு, சீரியல் பற்றிய எண்ணங்களே இல்லாமல், மிகுந்த மன நிம்மதியுடன் இருப்பதாகவும், தன்னை தொற்றிக் கொண்ட திடீர் கோபம், மன அழுத்தம், குபுக்கென்று கண்ணீர் விடுவது ஆகியவை முற்றிலும் அகன்று விட்டதாகவும், தன் மகனுடன் அதிக நேரம் செலவிடுவதாகவும், இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவுவதாகவும் எழுதி, எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.- குறைந்தபட்சம் ஒரு பெண்மணியையாவது சீரியல் அடிமைத்தனத்திலிருந்து, என் எழுத்துகளால் வெளியே கொண்டு வர முடிந்ததே என எண்ணி, மகிழ்ச்சியடைந்தேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !