திண்ணை!
சென்னையில் இருக்கும், முக்கிய சாலைகள் பலவற்றின், பெயர் காரணம் குறித்து, திண்ணைப் பெரிசு ஒருவர், சொன்ன விவரம்:சார்லஸ் பின்னி என்பவர், 1769ல், இந்தியாவில், வாணிபம் செய்ய வந்தார். இவர் பெயரில், பின்னி தெரு உள்ளது. இது, அண்ணா சாலையையும், கமாண்டர்- இன் -சீப் பாலத்தையும், இணைக்கும் சிறிய தெரு. இங்கு, பின்னி வாழ்ந்த மாளிகைதான், இப்போது கன்னிமாரா ஓட்டலாக உள்ளது.கிழக்கிந்திய கம்பெனி காலத்தில், ஐரோப்பிய குடியேறிகளின், பொழுதுபோக்கு மன்றமாக இருந்த இடம் பாந்தியன் எனப்பட்டது. (அதுவே இன்றைய மியூசியம் தியேட்டர்) இதை நினைவுபடுத்தும் வகையில், இங்குள்ள சாலைக்கு, 'பாந்தியன் சாலை' எனப் பெயரிடப்பட்டது.ரிச்சர்ட் எல்டாம்ஸ் என்பவர், பிரபல ஆங்கிலேய வர்த்தகர். இவர், சென்னை மேயராக இருந்து, 1820ல், இறந்தார். இவர் பெயரில் தான், எல்டாம்ஸ் சாலை உள்ளது.ஜேம்ஸ் டெய்லர் என்பவர், 1795ல், சென்னையில், நிர்வாக அதிகாரியாக இருந்ததால், கீழ்பாக்கத்தில், இவர் பெயரில், டெய்லர்ஸ் சாலை உள்ளது.சிங்கண்ணை செட்டி என்பவர், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குள், அடகுக்கடை வைத்திருந்தார். இவர் பெயரில், சென்னையில் மூன்று தெருக்களும், சிந்தாதிரிப் பேட்டையில் இரண்டு சந்துகளும் உள்ளன.ஆளுநரின் பாதுகாவலர் இருந்த வீதிக்கு, பாடிகார்ட்ஸ் சாலை என்று பெயர். அக்காலத்தில், கப்பல்படை வீரர்களுக்குப் பயன்பட்ட இடத்திற்கு, ஓல்டுநேவல் மருத்துவமனை சாலை என்று பெயரிட்டு, பெரியமேட்டில், ஒரு வீதி உள்ளது.'தி மெட்ராஸ் ஆர்மி' என்ற பெயரில், சென்னைக்கு பிரத்யேகமாக, ஒரு தனிப்படை ராணுவம் இருந்தது. இதன் தளபதி இருந்த இடம்தான், 'கமாண்டர் - இன்- சீப் சாலை' என, அழைக்கப்படுகிறது.வெள்ளையர் அரசால், நடத்தப்பட்ட கல்லூரி இருந்த இடம், கல்லூரி சாலை என்ற பெயரில் உள்ளது.வேப்பேரியில், டவுட்டன் பிராட்டஸ்டண்டு கல்லூரி இருந்த இடம், சுருக்கமாக, டவுட்டன் என்று அழைக்கப்பட்டது. இன்றும், அதுவே பெயர்.இந்தியர்கள் வாழும் பகுதி கறுப்பர் தெரு, (பிளாக்கர்ஸ் ஸ்ட்ரீட் ) என அழைக்கப்பட்டு, இன்றும் அதே பெயரில் உள்ளது. கெயிட்டி தியேட்டர் இருக்கும் சாலை இது.பஞ்சாமிர்தம் (1925) இதழ் ஆசிரியர், அ.மாதையா எழுதிய கட்டுரையிலிருந்து...சென்னையில், குஜிலியின் முக்கில், ஒரு வீதிக்கு, 'ஈவினிங் பஜார்' என்றும், அடுத்த வீதிக்கு, 'தீவிங் பஜார்' என்றும் பெயர் இருந்தது. இதை, நான் முதலில் கவனித்த போது, உண்மை எவ்வாறிருப்பினும், ராஜதானி நகரத்தில், ஒரு வீதிக்கு, 'தீவிங் பஜார் சாலை' அதாவது, 'திருட்டுக் கடை தெரு' என்றிருப்பது நகரவாசிகளுக்கும் போலீசாருக்கும் கவுரவம் தருவதன்று என்று நினைத்து, அப்போது முனிசிபல் கமிஷனராயிருந்த என் நண்பர், மலோனி துரைக்கு அதைப்பற்றி எழுத, அவர், 'தீவிங் பஜார்' என்ற பெயரை, 'குஜிலி பஜார்' என்று மாற்றினார்.'அமரர் கல்கியின் ஹாஸ்யம்' நூலிலிருந்து: வைணவ மதம், ரொம்ப ருசியான மதம் என்பது பிரசித்தம். கண்ணனை வெண்ணெய் திருடும் கடவுளாகச் செய்தவர்கள், ரொம்பவும் சுவை அறிந்த மனிதர்களாகத் தானே இருக்க வேண்டும். இன்னும், வைணவ மதத்தின் ருசியை, ஸ்ரீரங்கம் மற்றும் காஞ்சிபுரம் கோவில் பிரசாதங்கள் எவ்வளவு தெளிவாக நிரூபிக்கின்றன!தன்னை விட, 153 மடங்கு உயரமான ஈபிள் டவரை கட்டி, சாதனை படைத்திருக்கிறான் மனிதன். ஆனால், கரையான் புற்றை, கரையான், தன்னை விட, 1,000 மடங்கு உயரமாக கட்டுகிறது. ஆனால், அதை சாதனையாக அவை வெளியே சொல்வதில்லை.— குப்பண்ணா சொன்னது.நடுத்தெரு நாராயணன்