உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

கடந்த சில வாரங்களாக, பலமாக இரும ஆரம்பித்திருந்தார், லென்ஸ் மாமா. அத்துடன், சளியாக துப்ப துவங்கியதும், 'மாமா... நீங்க ஓவரா சிகரெட் பிடிக்கிறீங்க... அதனால வந்த கோளாறு தான் இது! சளி நுரையீரல்ல கட்டிக்கிச்சுன்னா ரொம்ப டேஞ்சர்; வாங்க டாக்டரை பாக்கலாம்...' என, கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றேன்.ஏகப்பட்ட டெஸ்ட் எழுதிக் கொடுத்தார், டாக்டர். டெஸ்ட் முடிந்து, ரிசல்ட்டுடன் டாக்டரை சென்று பார்த்த போது, 'மிஸ்டர் லென்ஸ்... சிகரெட் பிடிப்பதை உடனே நிறுத்துங்க; இந்த மாத்திரைய ஆறு வாரம் சாப்பிடுங்க...' எனக் கூறி அனுப்பினார்.அலுவலகம் வந்து, இந்த பாழாய் போன சிகரெட் தோன்றிய விதம் பற்றிய புத்தகத்தை லைப்ரரியில் தேடினேன்; இதோ, அதன் தொகுப்பு...இளைஞர்கள் முதல், வயதான லென்ஸ் மாமா வரை, அனைவருக்கும் நண்பனாகத் திகழும் சிகரெட், 19ம் நூற்றாண்டில் தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. புகையிலைச் செடிகளை எரித்து, அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்தனர், அமெரிக்க செவ்விந்தியர்கள்.இவர்களே காலப் போக்கில் வெள்ளி, களிமண் மற்றும் மரக்கட்டையினால் செய்யப்பட்ட குழாய்களில் புகையிலையை அடைத்து, புகைக்கத் துவங்கினர்.பின், சுருட்டு என்னும் வடிவம் தோன்றியது. இங்கிலாந்தில் கைத் தொழிலாக இருந்த சுருட்டு, காலமாற்றத்தால் இயந்திரத் தொழிலாக மாறியது. இத்தொழிலில் ஏற்பட்ட உச்ச நிலையே, காகிதத்தால் செய்யப்பட்ட சிகரெட்!அப்பொழுது, பிரேசில் நாட்டு சிகரெட்டின் திருநாமம், 'பாபிஸிட்டோஸ்!'கி.பி., 1855ல் இங்கிலாந்தில், இன்றைய வளர்ச்சியை எட்டியது, சிகரெட்!காண்பதற்கு சிறியதாக இருந்தாலும், இதன் உடலில், 270 வகையான ரசாயனப் பொருட்கள் உள்ளன.அவற்றில் சில: நிக்கோடின், பர்பரோஸ், கார்பன்டை ஆக்ஸைட், ஆர்செனிக், பிரஸ்லிக் அமிலம், மீதேன், பார்மிக் அமிலம், கோலிடைன், பைரடின், கிரிஸால், பைரான், ரூபிடின், பார்மோலின், பிரிடின், காரிடின், லெண்டிடின், மைதிலின், பைக்கோலின், ஏட்டிடைன், விரிடைன், மெதிலைபின், பென்ஸ்பிரின், பார்மால்டி ஹைட், பார்மிக் ஆல்டிஹைட், வெடியுப்பு, மார்ஜுவானா மற்றும் அக்ரோலின் ஆகியவை.இவற்றில் நிக்கோடின் என்ற நச்சுப் பொருள் தான் மிகவும் ஆபத்தானது. இது, மூளைப் பகுதியில் உள்ள நுண் துளைகளைப் பாதிக்கும் ஆற்றல் உடையது. ஒரு சிகரெட்டிலிருக்கும் நிக்கோடினை தனியே பிரித்தெடுத்து, ஒருவரின் ரத்தத்தில் செலுத்தினால், அது, அவரை மரணமடையச் செய்யும் அளவிற்கு நச்சுத்தன்மை பெற்றது.புகைக்கும் போது முழுப்புகையும் உடலுக்குள் செல்வது இல்லை; இது, இதயத்திலுள்ள ரத்தக் குழாய்களை சுருங்க வைத்து, இதயத்திற்குத் தேவையான ரத்த ஓட்டத்தைத் தடை செய்வதால், இளமையிலேயே மாரடைப்பு ஏற்படுகிறது.சிகரெட்டை புகைக்கும்போது, புகைப்பவரின் உடலினுள், 2,000 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் செல்கிறது. இவ்வெப்பத்தினால் சுவாசப் பையின் சுவர்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால், எளிதில், புற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டாகிறது.-இப்போதெல்லாம் புகைப்பதை குறைத்து விட்டார், லென்ஸ் மாமா. சிகரெட்டை இரண்டாக உடைத்து, இரண்டு இழுப்பு இழுத்து, கீழே போட்டு விடுகிறார்.'சிகரெட்டை விட ஆபத்தில்லாதது பீடி...' என, எவரோ சொல்ல, 'பீடிக்கு மாறிவிடவா...' என, பார்ப்பவரை எல்லாம் கேட்டு வருகிறார், லென்ஸ் மாமா.'என்ன ஓய்... ஆழ்ந்த சிந்தனையில் உட்கார்ந்திருக்கிறீர்...' என்று நடுத்தெரு நாராயணனை கேட்டபடியே, மேல் துண்டால் நாற்காலியின் தூசியைத் தட்டி, உட்கார்ந்தார் குப்பண்ணா.'வேறொண்ணுமில்ல... பெண்களின் அழகான விரல்களை, 'காந்தள் விரல்கள்'ன்னு உவமை சொல்றாங்களே... பொதுவா பெண்ணின் விரல்களை வெண்டைக்காயோடு தானே ஒப்புமை சொல்வாங்க. இங்கிலீஷ்ல கூட வெண்டைக்காய்க்கு, 'லேடீஸ் பிங்கர்'ன்னுதானே பேரு... இந்த காந்தள் காய் எப்படி இருக்கும்ன்னு பாத்ததில்லயே... அதைதான் யோசிச்சுட்டு இருக்கேன்...' என்றார் நாராயணன்.'போச்சுடா... ரெண்டு பெரிசும் இன்றைக்கு பிளேடு போட்டுத் தள்ளப் போறாங்க...' என எண்ணியபடி அவர்களையே பார்த்தேன்.'காந்தள் என்பது காயும் இல்ல; பழமும் இல்ல. அது, ஒரு பூ...' என்ற குப்பண்ணா, 'இது, குறிஞ்சி நிலத்துக்கு உரிய மலர்; மலைச்சாரலில் அருவியின் அருகே காந்தள் மிகுதியாக வளரும். மலை முழுவதும் இதன் மணம் கமழும். இது கொத்துக் கொத்தாக மலரும் இயல்பு உள்ளதால், 'குலைக்காந்தள்'ன்னும் சொல்வாங்க.'இந்தப் பூவிலுள்ள நறுந்தாதைத் தும்பி என்னும் வண்டு உண்ணும். நடு நிலை பிறழாத சான்றோரைக் கண்டதும், நன்மக்கள் அவர்களுக்கு இடம் கொடுத்து, ஆதரவு செய்து உபசரிப்பதுபோல, வண்டு வாய் திறக்கும் போது, காந்தள் மலரின் முகை மலருகிறது என்று பாடியிருக்கிறார், ஒரு புலவர்.'தலைவிக்கு, தலைவன் அளிக்கும் கையுறைப் பொருட்களில் காந்தள் மலரும் ஒன்று. ஊர்ப் பொதுவிடத்தில், துறுகல்லில் படிந்த காந்தள் மலர், யானை முகத்தில் உள்ள புண்ணைப் போல இருக்கிறது என்கிறார், ஒரு கவிஞர். அத்துடன், நீண்ட காம்போடு கூடிய மலரை, படத்தை விரித்த பாம்புக்கும், கை விரலுக்கும் உவமையாகக் கூறுவர்.'தலைவனுடைய மலையிலிருந்து அருவியில் வந்த காந்தள் கொடியின் கிழங்கை, தன் இல்லத்துக்கு எடுத்து வந்து நட்டு வளர்த்துப் பாதுகாத்தாள், தலைவி எனும் செய்தி, சங்க இலக்கியத்திலிருந்து தெரிகிறது.'இதில், வெண்காந்தள், செங்காந்தள் என, இருவகை உண்டு. செங்காந்தளை குருதிப் பூ என்று கூறுவர். இது, கோழியின் சிவந்த கொண்டை போலத் தோற்றம் அளிக்கிறது என்று சிறப்பித்துப் பாடியிருக்கிறார், ஒரு புலவர்.'காந்தள் மலரோடு, முல்லை யையும், குவளையையும் இடையிடையே கோர்த்து, மாலையாகக் கட்டுவது உண்டு. தலைவியின் மேனி மணத்துக்கும், நுதலின் மணத்துக்கும் காந்தள் மலரின் வாசனையை உவமையாகச் சொல்வது மரபு...' என்று சொல்லி முடித்தார் குப்பண்ணா.கேட்ட எனக்குத் தான் மூச்சு வாங்கியது.பொது மக்களின் எண்ணம், கருத்து, விருப்பங்களை மதிப்பதில்லை, அரசியல்வாதிகளும், ஆளுவோரும்! இது எந்தக் காலத்தில் இருந்து தமிழகத்தில் ஆரம்பித்தது என்பதை, கி.ஆ.பெ.விஸ்வநாதம் எழுதிய புத்தகம் ஒன்றை சமீபத்தில் படித்த போது தெரிந்து கொண்டேன்.அப்புத்தகத்தில் அவர் கூறியுள்ளது:ஈரோட்டில் பெரியார் மாளிகையின் மாடியில், ஒரு நாள், உண்டியல் காசுகளை எண்ணிக் கொண்டிருந்தேன். 'குடியரசு' பத்திரிகைக்கு ஏதோ எழுதியபடி இருந்தார், ஈ.வெ.ரா., அச்சமயம், அவர்கள் வீட்டு வேலைக்கார பையன் மாடிக்கு வந்து, 'ராஜாஜி வந்திருக்கிறார்...' என்று சொன்னான்.உடனே, தன் சால்வையை எடுத்து, இடுப்பில் கட்டி, கீழே இறங்கி ஓடோடிச் சென்று வணங்கி, அவரை மேலே அழைத்து வந்தார், ஈ.வெ.ரா., 'ஏது, தலைவர் இவ்வளவு தூரம்?' என்று கேட்டார், ஈ.வெ.ரா.'காரணம் இருக்கிறது...' என்று சொல்லி, என்னை ஓரக் கண்ணால் பார்த்தார், ராஜாஜி.இக்குறிப்பை உணர்ந்த ஈ.வெ.ரா., 'அவர் நம்ம ஆள் தான்; தாராளமாகச் சொல்லலாம்...' என்றார்.'ஒரு சந்தேகம்; உங்க கிட்ட ஆலோசனை பெற வந்தேன்...' என்றார் ராஜாஜி.உடனே, 'சந்தேகமா... தலைவருக்கா... அதுவும் என்னிடம் ஆலோசனையா...' என்று அடுக்கினார், ஈ.வெ.ரா., 'ஆமாம் நாயக்கரே... உம்மிடம் தான் - கேட்க வந்தேன்...' என்று, ஒரு சங்கதியைச் சொல்லி, 'இதற்கு என்ன செய்யலாம்...' என்று கேட்டார்.சிறிது நேரம் யோசித்து, 'சிக்கல் தான்; ஏன், இப்படிச் செய்தால் என்ன...' என்று ஒரு ஆலோசனை சொன்னார்; 'அதையும் யோசித்தேன்; அப்படி செய்தால், மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பர்...' என்று திருப்பிக் கேட்டார், ராஜாஜி.அதற்கு ஈ.வெரா., 'பொது மக்கள் என்ற சொல்லை, மற்றவர்கள் சொல்லலாம்; நீங்களும், நானும் அதை நினைக்கலாமா...' என்று கேட்டார்.'அப்ப சரி...' என்று எழுந்து போய்விட்டார், ராஜாஜி.தங்களைத் தவிர வேறு எவரும் பொது ஜனம் இல்லை...- தங்களின் கருத்து தான் பொது ஜனக் கருத்து. -நாம் தான் பொது ஜனங்களை உண்டாக்குகிறோம் என்பதே, அவர்கள் உரையாடல் மூலம் தெரிந்தது. அதுதான், அரசியலில் நான் கற்றுக் கொண்ட முதல் பாடம்!- பாருங்களேன்... இன்றும், ஈ.வெ.ரா., கருத்துப்படி தானே தம்மை ஆளுவோரும், அரசியல் கட்சித் தலைவர் களும் உள்ளனர் !


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !