உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

அன்வர்பாயின் கார் தான் எல்லாருக்கும், 'டம்பிங் கிரவுண்ட்' - அவரவர் வாக்கிங் ஷூ, ஷாட்ஸ், மினரல் வாட்டர் பாட்டில், கண்ணாடி டம்ளர்கள் - ஏன், உ.பா., பாட்டில்களைக் கூட அவரது காரில் தான் போட்டு வைப்பர்.அன்று, பாயின் காரில் இருந்த டம்ளர்கள் அனைத்தும் காணாமல் போயிருந்தன.காரை தலைகீழாகப் போட்டு தேடாத குறை தான்; டம்ளர்கள் கிடைக்கவில்லை. நொந்து போன மாமா, பிளாஸ்டிக் டம்ளரை, உபயோகப்படுத்தியவர், திருடர்கள் கதை ஒன்று சொன்னார்...'அமெரிக்காவில் உள்ள கேளன் நகரச் சிறைக் கைதிகள், 'இன்ட்டர் பிரட்டர்'ன்னு ஒரு பத்திரிகை நடத்துறாங்கப்பா... அதுல, கைதிகள் எழுதும் கதை, கவிதை மற்றும் கட்டுரைகள் வெளி வரும். சமீபத்தில், அந்தப் பத்திரிகையில் ஒரு அறிவிப்பு வந்தது... 'எங்கள் பத்திரிகையைப் போலவே, சிறைகளிலிருந்து வேறு பல பத்திரிகைகள் வெளியாகின்றன. அவற்றில் சில, எங்கள் பத்திரிகையில் வெளியான கதை, கட்டுரைகளைத் திருடி வெளியிடுகின்றனர் என்பதை அறிந்து வருந்துகிறோம்...' என்று இருந்தது...' எனக் கூறி நிறுத்தினார்.'என்ன சொல்ல வர்றீரு... அன்வர் பாய், 'போட்டு'த் தள்ளுன, 'டம்ளர்'கள வேற எவனோ அள்ளிட்டு போயிட்டாங்கீறா?' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.நமுட்டுச் சிரிப்பு சிரித்த மாமா, வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.அடுத்த நாள், கார் துடைக்கும் பையன் காதைத் திருகி, காணாமல் போன, 'டம்ளர்'களை மீட்டு வந்திருந்தார், பாய்!சினிமா செய்திகளைத் தரும் பொன்னையா, அன்று, வசமாக மாட்டினார். ஏனோ, 'மூடு' இல்லாமல் இருந்தார். அப்போது தான், பொ.ஆ., அறையில் இருந்து வெளியே வந்திருந்தார். பொ.ஆ., ஏதும், 'டோஸ்' விட்டு இருப்பார் போலும்...'பொன்ஸ்... ஏதாவது அச்சில் ஏற்ற முடியாத சினிமா நியூஸ் இருந்தா, சொல்லுங்களேன்...' என, நச்சரித்தேன்.என்னை, வெறுப்பாக பார்த்தவர், 'ஒரு படத்தில், ஒரே பாடலில், நான்கு பேருக்குக் குரல் கொடுத்து பாடிய பாடகரை தெரியுமா?' எனக் கேட்டு, என் முகத்தை பார்த்தார். நான், 'திரு திரு'வென விழிக்க, 'பாமா விஜயம் படத்தில், 'வரவு எட்டணா செலவு பத்தணா...' பாடலில் பாலையா, நாகேஷ், முத்துராமன் மற்றும் மேஜர் சுந்தர்ராஜன் என, - நான்கு பேருக்கும், டி.எம்.சவுந்தரராஜனே குரல் கொடுத்து பின்னணி பாடினார்...' என்று கூறி, 'விறு விறு'வென, நடந்து வெளியேறினார், கடுப்புடன்!இதையும் ஒரு செய்தியாக ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்... வேற வழி!'நான் துடுக்கு பொண்ணு.... 'பட் பட்'ன்னு பேசி விடுவேன்... ரொம்ப சோஷியல் டைப்... காதல், கத்தரிக்காய் - இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது.'இப்படி இருந்த என்னுடன் நட்பாகப் பழக ஆரம்பித்தார் ஒருவர். அதுவே, பின் காதலாக மாறி விட்டது...'இப்படியே தொடர்ந்து எழுதி இருக்கிறார், ஒரு வாசகி. இதோ அவரது கடிதம்:சார், என் பிரச்னையைப் பற்றி கூறுவதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள்... என் ஊரையும், பெயரையும், குறிப்பிட விரும்பவில்லை.நான், 'சோஷியல் டைப்!' 'டிப்ளமோ' முடித்தவள். உள்ளூரில் படிக்க கூறினர், என் பெற்றோர். அதை மீறி, வெளியூரில் படிக்க சென்றதால், அவர்களுக்கு என் மீது கோபம். இதை மனதில் வைத்து, படிக்கும் போது, எனக்கு போன் செய்ய மாட்டார்கள். அப்படியே பேசினாலும் பயங்கரமாக திட்டுவர். விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் போது, நான் வரும் பஸ்சில் என், 'காலேஜ் மேட்' ஒருவன் கூட வருவான். ஒரே ஊர் என்பதால், இருவரும் நன்றாகப் பேசுவோம். நாளடைவில், அவனை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஏனென்றால், மற்ற மாணவர்களைப் போல் இல்லாமல், ஒரு லட்சியத்திற்காக படிப்பவன், அன்பே உருவானவன், மற்றவர் துன்பப்படுவதைக் கண்டு வருந்துபவன். என் குணங்களோடு ஒத்துப் போவதால், அவனை எனக்கு மிகவும் பிடித்தது.ஆனால், பார்ப்பவர்களுக்கு அது வித்தியாசமாக தெரிந்தது போலும்... 'பிரின்சிபால்' கூப்பிட்டு எங்களை கண்டித்தார். 'இனிமேலும் இருவரும் பேச வேண்டாம்...' என, முடிவெடுத்தோம். இதற்கிடையில், காலேஜ் முழுவதும் நாங்கள், 'லவ்' பண்ணுவதாக புரளி கிளம்பியது. காலேஜ் பிரண்ட்ஸ், என் நண்பனிடம் என்னைப் பற்றி ஒரு நாள் தரக்குறைவாக விமர்சிக்க, ஆத்திரமடைந்த அவன், 'ஆமாண்டா, நான், அவள, 'லவ்' பண்றேன்; என்னடா செய்வீங்க'ன்னு எதிர் கேள்வி கேட்க, என் மூச்சே நின்று விடும் போல் இருந்தது.அதன் பின், அவனிடம் பேசுவதை குறைத்தேன்; ஆனால், என்னால், அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. நான் பேசவில்லை என்பதற்காக, என் பெயரை கத்தியால் கையில் எழுத முயன்று, அதன் விளைவாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அதன் பின் நடந்த, சில மனதைத் தொடும் சம்பவங்களால் இருவருமே உயிருக்குயிராய் நேசிக்க ஆரம்பித்தோம்.வெறும் கடிதப் பரிமாற்றத்தால் மனதை பகிர்ந்து கொண்டோம். ஒருவழியாக படிப்பும் முடிந்தது. இருவருக்கும் வேலையும் கிடைத்தது. அதற்கும் எங்கள் வீட்டில் தடை. அதையும் மீறி சென்றேன். வேறு ஊரில் உள்ளான், என் நண்பன். என்ன தான் நாங்கள் உயிருக்கு உயிராய் நேசித்தாலும், தொட்டுப் பேசியதில்லை; ஒரு தடவை கூட சண்டை போட்டது கிடையாது.இதற்கிடையில், என் வீட்டிற்கு என் காதல் விஷயம் தெரிந்து, என்னை வேலைக்குப் போக விடவில்லை. இருந்தாலும், சாப்பிடாமல் அடம்பிடித்ததால், சொந்த ஊரில் வேலைக்குச் செல்ல அனுமதித்தனர். ஆனால், வேலை முடித்து வரும் போதெல்லாம் சந்தேகப் பார்வைகள்; பெண் என்று கூட பாராமல் என்னிடம் கேட்கக் கூடாத கேள்விகள்... நொந்து அழும் போதெல்லாம், அவனுடைய கடிதங்கள் மட்டுமே எனக்கு ஆறுதல்.இருந்தாலும், பிரச்னை அதிகமாகி, தற்கொலைக்கு முயன்றபோது, 'நீ எதற்காக சாகிறாய்... நான் இருப்பதால் தானே, இத்தனை பிரச்னைகள். நானே சாகிறேன்...'என்று என்னை தடுத்து விட்டான். அதனால், அந்த முயற்சியும் கை விட்டேன். 'நீ ஜெயில் கைதி மாதிரி இருக்கிறத பாக்க, என்னால தாங்க முடியல. பேசாம அவங்க சொல்ற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்க; நான் எப்படியோ போறேன்...' என்றான். இப்படியெல்லாம் கூறும்போது, அவன் மீது காதல் அதிகமானதே தவிர, குறையவில்லை.இன்னும் ஓர் ஆண்டிற்குள் நல்ல நிலைக்கு வந்து விடுவான். எனக்கோ, இன்னும் நாலு மாதத்திற்குள் திருமணம். இன்னும் எனக்கு அவன் கூறும் நம்பிக்கையான வரிகள் மட்டுமே உயிரோடு இருக்கச் செய்கிறது. திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்று எவ்வளவோ கூறியும் கேட்கவில்லை, பெற்றோர். அவர்களோ கடமையை முடிக்கப் பார்க்கின்றனர்.என் தோழிகளிடம் கூட பேச விடுவதில்லை; யாரிடம் என் சோகச் சுமைகளை சொல்லி அழுவது... அவனோ, சொந்த ஊரில் இல்லை; அப்படி இருக்கும் போது நான் எப்படி அவனை சந்திக்க முடியும்... இதையெல்லாம் நான் சொல்லியும் புரிந்து கொள்ளாமல் எப்போது பார்த்தாலும் சந்தேகம்... பெற்றவர்கள் கூடவா இப்படி தரக் குறைவாக... ச்சே... என்மேல் நம்பிக்கை இல்லாத இவர்களிடம் இருப்பதை விட, என் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும், நான் என்ன ஆனேனோ என கலங்கும் அவனிடத்தில் இருப்பதே மேல் என நினைக்கிறேன். என்னால், என் ஜீவனின் வாழ்வு கருகி விடக் கூடாது.- இப்படியே எனக்கு கடிதம் எழுதும் வாசகிகள், எக்கச்சக்கமாகி விட்டனர்.என் சந்தேகம் எல்லாம்... 'நான் அப்படி... நான் இப்படி... காதல் கத்தரிக்காய்க்கெல்லாம் மயங்கி, அடிமையாகி விட மாட்டேன்...' என, வீராவேசமாக கடிதத்தின் ஆரம்பத்தில் எழுதும் வாசகியர், பின்னர் இப்படி விழுந்து விடுகின்றனர்.'இன்வேரியபளி' அனைவருமா... விளக்குங்களேன், வாசகியரே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !