உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா

'கொரோனா' பாதிப்பைத் தடுக்க, நாடு முழுதும் ஊரடங்கு அமல் ஆனாலும், 'நான்காம் துாணான பத்திரிகைகளுக்கு, 'லீவு' கிடையாது; அவர்கள் தான், நோய் பற்றிய விழிப்புணர்வை, நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும்...' என, பிரதமர் உத்தரவு போட்டார்.உடனே, நம் நாளிதழ் ஆசிரியர், அலுவலக மனித வள மேம்பாட்டு நிர்வாகி, புஷ்பராஜைக் கூப்பிட்டு, 'பஸ், டிரெய்னெல்லாம் ஓடாது... நம் ஆபீசுல, 'ஸ்கெலிட்டன் ஸ்டாப்' இருந்தா போதும்... யாரை எல்லாம் தினமும் கூட்டிட்டு வந்து, மறுபடி வீட்டுக்கு அழைத்து போய் விட முடியுமோ ஏற்பாடு பண்ணுங்க...' என்றார்.அடுத்து, 'அந்து... உனக்கு வெளில எங்கேயும், ஜோலி கிடையாது... சில ஊழியர்கள் இங்கேயே தங்கி இருக்க வேண்டி இருக்கும்... அவங்களுக்கு டீ, காபி தயாரிச்சு குடுக்கறது உன் வேலை...' என, கூறி விட்டார்.உடனே, கடைக்கு ஓடி, டீத்துாள், 'இன்ஸ்டன்ட்' காபித் துாள், சர்க்கரை, பிளாஸ்கை கழுவப் பயன்படும், 'பிரஷ்' மற்றும் சோப்பு பவுடர் என, எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டேன்.அந்த நேரத்தில், 'படபட'வென ஓடி வந்தார், ஐ.ஏ.எஸ்., பாலு.'அந்து... ஊரடங்கு போட்டாச்சுனா, 'சரக்கு' கிடைக்காது... என்ன செய்யிறது...' எனக் கேட்டார். 'இந்த கேள்வியெல்லாம் எங்கிட்டே கேட்காதே... லென்சுகிட்டே கேளு...' எனக் கூறி, என் ஜோலியைப் பார்க்கத் துவங்கினேன்.மறுநாள் காலை, லென்ஸ் மாமா தென்பட்டார்.'என்ன லென்சு... பாலு கேட்டாரே... என்ன ஏற்பாடு செஞ்சீங்க...' என, நான் கேட்க, 'கார் டிக்கில, கொள்ற அளவுக்கு அடுக்கி வச்சிட்டார்...' என, சூசகமாய் சொன்னார்.கூடவே, 'அந்த பிரபலமான ப்ரொட்யூசர், உன்னோட பேசணும்ன்னு துடியாய் துடிச்சார்...' எனக் கூறி நிறுத்தினார்.'யாரு பா...' என, நான் கேட்பதற்குள், 'கமல்ஹாசனை வச்சு நிறைய படம் பண்ணினாரே... அவரு... 'சரக்கு' இருக்கான்னு கேட்க தான் முயற்சி செஞ்சிருக்காரு...' என்றார், லென்ஸ்.'நல்ல ஆளைப் பார்த்து கேக்குறாரு பாரு...' என, நான் கூறியதும், 'கவலைப்படாதே... அவர் கேக்கச் சொன்னது, எங்கிட்டே தான்... நம்ம, பி.ஆர்.ஓ., ஜக்குகிட்டே தான் பேசினாராம்... 'அவரோ, 'லென்ஸ் மாமா, இப்பல்லாம் சரக்கு அடிக்கிறதை நிறுத்திட்டார்... எப்பவாவது மண்டை அரிச்சா, 'பைவ் ஸ்டார்' ஓட்டலுக்குப் போய், தாக சாந்தி செஞ்சுட்டு வந்திடறாரு... முன்ன மாதிரி, 'ஸ்டாக்'கெல்லாம் வச்சிக்கிறதில்லே...'ன்னு சொல்லிட்டாராம்...' எனக் கூறினார்.அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, டாக்டர் நண்பர் ஒருவர் வந்தார்.'கொரோனா'வுக்காக தன் உடலை, 'செக்' செய்து கொள்ள, டாக்டரை அழைத்திருந்தார், லென்ஸ். அப்படியே நானும், 'டெம்பரேச்சர்' சரி பார்த்துக் கொண்டேன். இரண்டு பேருக்கும், 'கிளீன் சிட்' கொடுத்தார், டாக்டர்.கிளம்புகையில், 'எனக்கு ஓட்கா வேணும்...' என, இழுத்தார், டாக்டர்.'பிராண்டி இருக்கும்... ஐ.ஏ.எஸ்.,கிட்டே கேளுங்க...' எனச் சொல்லி அனுப்பி வைத்தார், லென்ஸ்.எனக்கு கவலை படர ஆரம்பித்தது.'ஊரடங்கு அமலாகி இருக்கும் இந்த நேரத்தில், நாடு முழுதும் மதுக் கடைகளை மூடியதால், ரெகுலர், 'குடி'மகன்கள் இப்படி தவிக்கின்றனரே... பணக்காரர்கள், முன்கூட்டியே பதுக்கி வைத்து விட்டனர். ஏழைகள், அன்றாடம் வேலை செய்து கிடைக்கும் பணத்தில், உடல் வலியைப் போக்க, 'சரக்கு' அடிக்கின்றனர்.'வருமானமே இல்லாமல் இனி இவர்கள் என்ன செய்வர்? 'சரக்கு' அடித்த உடல், மீண்டும் மீண்டும் அதைக் கேட்குமே... இதனால் மன அழுத்தம் அதிகமாகி பிரச்னை ஏற்படுமே...' என, சிந்திக்கத் துவங்கினேன்...அடுத்த நாள், நாளிதழ்களில், 'ஆந்திர மாநிலம், ஐதராபாதில், 50 வயது தினக் கூலி தொழிலாளி, 'சரக்கு' கிடைக்காமல், மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்தார்.'கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர், மது கிடைக்காமல், துாக்கு போட்டு தற்கொலை செய்தார்; இன்னொருவர், ஆற்றில் குதித்து தற்கொலை செய்தார்; ஒருவர், 'ஷேவிங் லோஷனை' குடித்தார்; கர்நாடக மாநிலத்தில், ஒருவர் தற்கொலை செய்தார்...' என, செய்தி வெளியாகி இருந்தது.'இது போன்ற விஷயங்களில், அரசு, அதிக அக்கறை எடுக்க வேண்டும்...' என எண்ணியபடியே, ஊழியர்களுக்கு டீ தயாரிப்பதற்காக, பால் பாக்கெட்டை, 'கட்' செய்யத் துவங்கினேன்!

'சின்னச் சின்ன மின்மினிகள்' நுாலில் படித்தது: இரண்டு நீதிபதிகள் ஒரு, 'பார்ட்டி'க்கு சென்றிருந்தனர். அளவுக்கு அதிகமாக மது அருந்தி விடவே, போதையில் ஓவென்று கத்திக் கூச்சலிட்டனர். மறுநாள் நீதிபதிகள் இருவரும், கோர்ட்டில் சந்தித்து கொண்டனர். 'நேற்றிரவு நாம் தவறாக நடந்து கொண்டோம். நாம், நீதிபதிகள். என் குற்றத்திற்கு, நீங்கள் தண்டனை கொடுங்கள். உங்கள் குற்றத்திற்கு, நான் தண்டனை கொடுக்கிறேன். இது தான் நாம் செய்த தவறுக்கு பரிகாரம்...' என்றார், ஒருவர். மற்றவரும் ஒப்புக்கொண்டார்.குற்றவாளிக் கூண்டில் ஒருவர் நின்றார். மற்றவர், நீதிபதி ஆசனத்தில் அமர்ந்து, விசாரித்தார். 'நேற்றிரவு, குடித்துவிட்டு கலாட்டா செய்தது உண்மையா?' 'ஆம்...' 'பத்து ரூபாய் அபராதம்...'இதன் பிறகு, இருவரும் இடம் மாற்றிக் கொண்டனர். முதலாமவர் கேட்டார், இரண்டாமவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 'இந்த குற்றத்திற்காக, 200 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்...' என்றார். 'இது என்ன நியாயம்... நான், உங்களுக்கு, 10 ரூபாய் தான் அபராதம் விதித்தேன். நீங்கள் ஏன் எனக்கு, 200 ரூபாய் அபராதம் போடுகிறீர்கள்...' என்று, கோபமாக கேட்டார். 'என்ன செய்வது, இம்மாதிரி வழக்குகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. பாருங்களேன், இன்று, இது இரண்டாவது வழக்கு. ஐயோ பாவம் பார்த்தால், இம்மாதிரி குற்றங்கள் அதிகமாகிக் கொண்டே போகும்...' என்று, ஒரு போடு போட்டார், நீதிபதி ஆசனத்திலிருந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !