அந்துமணி பா.கே.ப.,
அண்ணாச்சி, விவரமானவர்தான்; ஆனால், 'சிலிப் ஆப் த டங்' என்போமே... வாய் தவறிப் பேசுவதில் படு கெட்டிக்காரர். ஏறுக்கு, மாறாகப் பேசுவதில் வல்லவர். அவருக்கு சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம்; வசிப்பது சென்னையில், தொழில் செய்வது சேலத்தில்... மாட்டுத் தீவனம் தயாரித்து, தமிழகம் முழுவதும் விற்பனை செய்கிறார்.உடற்பயிற்சி தேவை என்பதற்காக அண்ணாச்சியை தினசரி வாக்கிங் போகச் சொல்லி ஆலோசனை கூறி உள்ளனர் டாக்டர்கள். இவர், 'வாக்கிங்' என்ற பெயரில், நூறு அடி நடந்து விட்டு, அரட்டைக் கச்சேரியில் கலந்து கொள்ள வந்து விடுவார்.அன்று ஒரு சனிக்கிழமை... பீச் மீட்டிங்கில் டாக்டர் நண்பர் ஒருவரும் இருந்தார்.அப்போது போலி, 'வாக்கிங்' முடித்துவிட்டு வந்த அண்ணாச்சி, படபடப்பாக டாக்டரிடம் வந்து, 'சுகர் பாருங்க...' என்றார். அருகில் இருந்த லென்ஸ் மாமா, 'ஓய் அண்ணாச்சி... உம்மோட பெரும் தொல்லையாப் போச்சு... இப்போ எப்படி டாக்டரால சுகர் பார்க்க முடியும்? கையைப் புடிச்சு நாடி பார்க்கணும் உமக்கு... அதத்தானே சொல்ல வறீர்?' எனக் கேட்டார்.'ஆமா சார்... அதே தான்... கொஞ்சம் படபடப்பா இருந்துது... அதான்... இந்த இங்கிலிசு தான் என்ன அப்பப்ப காலை வாரி விடுது...' என்றவர், டாக்டரிடம் கை நீட்டினார்.அண்ணாச்சியின் கையைப் பிடித்து பார்த்த டாக்டர், 'ஒரு பிரச்னையும் இல்ல... எல்லாம் நார்மலாத்தான் இருக்கு...' எனக் கூறியபடியே, அண்ணாச்சியின் உள்ளங்கையை உற்று நோக்கினார்.அப்போது, 'டாக்டர் உங்களுக்கு கைரேகை பார்க்கவும் தெரியுமா? எங்கே எனக்கு பாருங்களேன்...' என தம் கையை நீட்டினார் லென்ஸ் மாமா.கொஞ்ச நேரம் மாமாவின் உள்ளங்கையைப் பார்த்த டாக்டர், 'உங்களுக்கு ரத்த சோகை இருக்கும் போலிருக்கே....' என்றார். அவரே தொடர்ந்தார், 'உள்ளங்கைகளையும், விரல்களையும் நான் சோதித்தது, கைரேகை பார்க்க அல்ல... எனக்கு ரேகை பார்க்கவும் தெரியாது! ஒருவருடைய விரல்களையும், உள்ளங்கையையும் சோதித்தாலே அவருடைய உடல்நிலையைக் கணித்துக் கூற முடியும்...' என்றார்.'வயிற்றில் அல்சர் உள்ளவர்களின் உள்ளங்கைகள், சுருக்கங்கள் மிகுந்து இருக்கும். வெண்மையான உள்ளங்கைகள் ரத்த சோகைக்கு அறிகுறி... தேவைக்கு அதிகமாக, 'தைராய்டு' சுரப்பிகள் இயங்கினால், கைகள் வெதுவெதுப்பாக இருக்கும். அவற்றின் மீது வியர்வை பிசுபிசுப்பும் காணப்படும்.'அதே நேரம் தைராய்டு சுரப்பிகள் சரிவர இயங்காவிட்டால், தோல் வறண்டு சொர, சொரப்பாகக் காணப்படும்.'வறண்ட நகங்கள் சத்துக் குறைவை வெளிப்படுத்தும். மூட்டு வாதம், கீழ்வாதம் ஆகிய நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்கள் வீக்கமடைந்து காணப்படும்...' என்றார்.இதைக் கேட்ட அண்ணாச்சி தன் கைகளை இறுக மூடி, 'எனக்கு ஒரு வாதமும் இல்லேப்பா...' என்றார்.எங்கே... உங்கள் உள்ளங்கையையும், விரல்களையும் ஒருமுறை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள் பார்ப்போம்!***'எங்க நாட்டில், 40 சதவீதம் வருமானவரி வசூலித்துக் கொண்டாலும், குடிமக்களின் அடிப்படை தேவைகள், மருத்துவம் உட்பட அரசாங்கமே கவனிச்சுக்கறதாலே, வரிச்சுமை தெரியறது இல்லே எங்களுக்கு...' என கூறினார் ஆஸ்திரேலிய நாட்டில் குடியேறிய மதுரைக்கார நண்பர் ஒருவர்.'அட போங்க சார்... இங்கே எது, எதுக்கெல்லாமோ புதுப்புது வரியா போட்டுத் தள்ளுறாங்க... இன்னும் எது, எதுக்குப் போடலாமுன்னு தெரியாம முழிச்சுகிட்டும் கிடக்காங்க... வரிய ஏய்க்கிறவங்களும் புதுப்புது பிளான் போட்டு ஏமாத்திக்கிட்டும் தான் இருக்காங்க...'மது, பெட்ரோல், பஸ் கட்டணம் இந்த மூன்றும் தான் எப்பவும் மாட்டுது! எனக்கு இன்னொரு யோசனையும் தோணுது...' என்ற குப்பண்ணா, சிறிது நிறுத்தி, மீண்டும் பேசத் துவங்கினார்...'பெண்களுக்கெல்லாம் அழகு வரி போடலாம்; ஏராளமாக பணம் சேரும்! அந்தந்தப் பெண்ணையே அவள் அழகுக்கு மதிப்பு போடும்படி சொல்லிவிட வேண்டும். மதிப்பின் உயர்வுக்கு ஏற்ப வரியையும் உயர்த்திப் போட வேண்டும். தன் அழகு விஷயத்தில் எந்தப் பெண்ணும் குறைச்சலா மதிப்புப் போடவே மாட்டாள்; தாராளமாக நடந்து கொள்வாள்...' என்றார்.— பெண்களே... குப்பண்ணாவின் யோசனை எப்படி?***இதுவும் வெளிநாட்டு சமாச்சாரம்தான்... ஒவ்வொரு மண்ணுக்கும் விசேஷ குணம் உண்டு... அங்கு வசிக்கும் மக்கள் மண்ணின் மரபுக்கு ஏற்ப, செலவாளிகளாகவோ, தொண, தொணவென்று பேசுபவர்களாகவோ, ஆடம்பரப் பிரியர்களாகவோ இருப்பர்...அன்று நான் சந்தித்த நண்பர் ஸ்காட்லாந்தில் வசிப்பவர். ஸ்காட்ச் விஸ்கி தயாராகும் இடம்தான் அது.'ஸ்காட்லாந்து மக்கள் கஞ்சத் தனத்திற்கு பெயர் பெற்றவர்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். அதுபற்றி ஜோக் ஏதேனும் உண்டா?' எனக் கேட்டேன்.'கேட்டுக்கோ...' எனச் சொல்லி, ஒன்று, இரண்டு, மூன்று என அடுத்தடுத்து ஜோக் சொல்ல ஆரம்பித்தார்.அவை இதோ:வெளியூரில் இருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார் ஒரு தந்தை... 'மகனே... நீ ஏன் இப்போதெல்லாம் கடிதங்களே எழுதுவது இல்லை? தபால் ஆபீசுக்கோ, பேங்குக்கோ, போனால், அங்கு வருகிறவர்களிடம் பேனா இரவல் வாங்கி கடிதம் எழுதலாமே!'முப்பது வருடங்களுக்கு முன், அமெரிக்காவுக்கு ஓடிப் போன ஒருவர், ஸ்காட்லாந்துக்கு திரும்பி வந்தார். வரவேற்க ரயில் நிலையத்திற்கு வந்தான் அவரது தம்பி.தம்பியைத் தழுவி, நலம் விசாரித்த பிறகு, அண்ணன் கேட்டார்... 'இதென்ன... தாடியும், மீசையுமாய் இருக்கிறாய்? உடம்பு சரியில்லையா?''நீங்கள் அமெரிக்காவுக்கு ஓடிப் போகும் போது, நம் இருவருக்கும் சொந்தமான சேப்டி ரேசரைத் தூக்கிக் கொண்டு போய் விட்டீர்களே...' என்று பதிலளித்தான் தம்பி.'செருப்புத் திருடியதை நீ ஒப்புக் கொள்கிறாயா?' — நீதிபதி.'நான் திருடவில்லை ஐயா... இந்த செருப்பை ஸ்காட்லாந்துக்காரர் ஒருவர் அன்பளிப்பாகத் தந்தார்...' என்றான் குற்றவாளி.'திருடியதற்காக ஒரு ரூபாயும், கோர்ட்டில் பொய் சொன்னதற்காக ஒரு ரூபாயும் அபராதம் விதிக்கிறேன்...' என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.ஸ்காட்லாந்து ஆசாமிகள் இருவர், ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். ஓட்டல் சிப்பந்தி ஒருவன், குடை ஒன்றைக் கொண்டு வந்து கொடுக்கவும், இரண்டு ரூபாய், 'டிப்ஸ்' கொடுத்தார், குடையை வாங்கிக் கொண்டவர்.'என்ன இருந்தாலும், நீ கொடுத்த, 'டிப்ஸ்' அதிகம்தான்...' என்றார் மற்றவர்.'நான் வரும் போது குடையே கொண்டு வரலியே... இரண்டு ரூபாய்க்கு எவன் இவ்வளவு அருமையான குடை கொடுப்பான்?' என்றார் முதலாமவர்!திரையரங்கு ஒன்றின் பால்கனியில் அமர்ந்து குடும்பத்துடன் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு ஸ்காட்லாந்துக்காரர்.கீழே எட்டிப் பார்த்த அவரது மகன், திடீரென்று அப்படியே தலை குப்புற விழுந்து விட்டான்.தியேட்டர் மானேஜரிடம் ஓடினார் தந்தை.பையன் படம் முழுவதையும் பார்க்காததால், டிக்கெட்டை வாபஸ் செய்து, பணத்தை வாங்கி, நடையைக் கட்டினார்.— இப்படி பல ஜோக்குகள், கஞ்சத்தனம் பற்றி கூறிய போது, சுருளிராஜன் நடித்த பழைய படம் ஒன்று, 'டிவி'யில் பார்த்த நினைவு வந்தது...இரண்டு கஞ்சர்கள்... ஒருவர் சுருளி... மற்றவர் தெரியவில்லை. இவர்களில், மகா கஞ்சர் யார் என்பதில் போட்டி.இது பற்றி பேச சுருளியை தன் வீட்டுக்கு வரச் சொல்வார்...இருவரும் பேச ஆரம்பிக்கும் முன் விளக்கை அணைத்து விடுவார் கஞ்சர். 'ஏன்?' என சுருளி கேட்க, 'பேசிக் கொண்டு தானே இருக்கப் போகிறோம்... அனாவசியமா மண்ணெண்ணை செலவு எதற்கு?' என்பார்.பேசி முடித்ததும் விளக்கை ஏற்ற முயல்வார் கஞ்சர். உடனே சுருளி, 'இருங்க... இருங்க... வேட்டியைக் கட்டிக்கிறேன். இருட்டாத் தானே இருக்கு... வேட்டியை ஏன் அழுக்காக்கிக்கணுமுன்னு அவுத்து வச்சேன்...' என்பார்.— சிரித்து, சிரித்து வயிறு புண்ணானது அன்று!***