உள்ளூர் செய்திகள்

அருள்தரும் தெய்வத் தாய்!

யாருக்கு, எதை, எப்போது, எப்படித் தர வேண்டும் என்பது, இவ்வுலகில் இருவருக்கு மட்டுமே தெரியும். ஒன்று, தாய்; மற்றொன்று தெய்வம்!டில்லியை நவாப்கள் ஆண்ட காலம் அது. அங்கிருந்து புறப்பட்ட ஒரு பெரும்படை, ஆங்காங்கே கோவில்களில் இருந்த பொக்கிஷங்களை, கொள்ளையடித்துச் சென்றனர். அப்படை, தமிழகத்திலும் புகுந்து, சிதம்பரத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலை நெருங்கிய போது, திடீரென, படைத்தளபதிக்கு கடுமையான வயிற்றுவலி; பல்வேறு வைத்தியம் செய்தும் வலி குறையவில்லை.இந்நிலையில், வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள, செல்வ முத்துக்குமார சுவாமியின் ஆபரணங்களை பாதுகாத்து வந்த சரவணபிள்ளை, 'முத்துக்குமரா... கொடியவன் நெருங்கி விட்டான்; அருள் வடிவான உன் மகிமை அறியாமல், இந்த ஆபரணங்களை அள்ளிக் கொண்டு போய் விடுவானே...' என்று முறையிட்டு அழுதவர், அப்படியே தரையில் படுத்து தூங்கி விட்டார்.அவர் கனவில், முருகப்பெருமான் எழுந்தருளி, 'சரவணா... சங்கடப்படாதே! அத்தளபதிக்கு, கடுமையான வயிற்றுவலியை உண்டாக்கியுள்ளோம்; நாளை காலை, இப்பொட்டலத்திலுள்ள மருந்தைக் கொடுத்து, அவனை உண்ணச் செய்...' என்று கூறி மறைந்தார்.கண்விழித்துப் பார்த்த சரவணப்பிள்ளையின் கையில், ஒரு பொட்டலம் இருந்தது. விடிந்ததும், தளபதி இருந்த முகாமிற்கு சென்று, காவலர்களிடம், 'உங்கள் தளபதியின் வயிற்று வலியை தீர்க்க என்னிடம் மருந்து உள்ளது...' என்றார்.அவரை, அழைத்துச் சென்று, தளபதியிடம் விஷயத்தை கூறினர்.'ஐயா... என் வயிற்று வலியை தீர்த்து வைத்தால், உங்களுக்கு தகுந்த சன்மானம் அளிப்பேன்...' என்றார் தளபதி. தன் கையில் இருந்த பொட்டலத்தைப் பிரித்தார் சரவணப்பிள்ளை. அதில், வைத்தீஸ்வரன் கோவில் பிரசாதமான, திருச்சாந்து உருண்டை இருந்தது. அதை தளபதியிடம் கொடுத்து, உண்ண சொன்னார். சாப்பிட்ட மறுநொடி, தளபதியின் வயிற்றுவலி காணாமல் போனது. இதனால், மிகுந்த மகிழ்ச்சியடைந்த தளபதி, 'வேண்டியதைக் கேளுங்கள்...' என்றார்.சரவணபிள்ளையும் முருகப்பெருமான் தன் கனவில் சொன்னதை விவரித்தார்.இதைக் கேட்டதும் மெய் சிலிர்த்த தளபதி, தன்னிடம் இருந்த முத்துப்பந்தல், ஆலவட்டம், தண்டு, குடை, கொடி மற்றும் சாமரம் ஆகியவற்றுடன், ஏராளமான செல்வத்தை முருகப்பெருமானுக்கு சமர்ப்பித்தார்.அதை நினைவுறுத்தும் விதமாகத் தான் இன்றும், செல்வ முத்துக் குமார சுவாமிக்கு, தீபாராதனை நடைபெறும் காலங்களில், தண்டு, குடை, கொடி, ஆல வட்டம் மற்றும் சாமரம் ஆகியவற்றைக் கொண்டு, உபச்சாரம் நடைபெறுவதை காணலாம்.அருள வேண்டிய நேரத்தில், யார் மூலமாகவாவது, தெய்வம், கண்டிப்பாக நமக்கு அருள் செய்து காப்பாற்றும்!பி.என்.பரசுராமன்திருமந்திரம்!வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்காட்டவும் நாமிலங் காலையும் மாலையும்ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும்பாட்டவி காட்டுதும் பாலிவி யாமே!விளக்கம்: யாகங்களில் இடப்படுகிற நைவேத்தியத்தை ஏற்கிற, விரிந்த சடைகளையுடைய சிவபெருமானுக்கு, நைவேத்தியம் செய்வதற்கான தகுந்த பொருள் நம்மிடம் இல்லை. அச்சிவபெருமானுக்கு காலையும், மாலையும் நம்மால் நிவேதிக்கக் கூடிய பொருளாவது, மனதை மகிழச் செய்யும் பாடலாகிய உணவே! அதை நிவேதிப்போம்; அதுவே, சிவபெருமானுக்கு பால் நைவேத்தியமாகும்.கருத்து: மனதை மகிழச் செய்யும் இனிமையான பாடல்களை பாடி, இறைவனை துதிப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !