உள்ளூர் செய்திகள்

அண்ணன்!

தலையில், கை வைத்து அமர்ந்திருந்தான் பசுபதி. டவுனில் துவங்கிய கமிஷன் கடையும், காலை வாரி விட்டது. பொருட்களுக்கு கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான் தரகன். விவசாயத்தை கைவிட்டு, இரண்டு ஏக்கர் நிலத்தை அம்போன்னு போட்டு விட்டு, விதவிதமாக தொழில் செய்து பார்த்தான் பசுபதி. எதுவும் செட்டாகவில்லை. கடைசியாக, கடன் வாங்கி, கமிஷன் மண்டி வைத்தான்; காசுடன் கம்பி நீட்டி விட்டான் தரகன். கடைத் தூசாய்ந்து அமர்ந்திருந்தவன் கண்கள், கண்ணீரிலும், மனம் துக்கத்திலும் நிறைந்திருந்தது. இனி, என்ன செய்வது என்று, ஒரே குழப்பமாக இருந்தது. இரண்டு மகள்களும், 8ம்வகுப்பு,10 வகுப்பு என்று, கான்வென்டில் படித்துக் கொண்டிருந்தனர்.'ஏற்கனவே வாங்கிய கடன் இருக்க, இனி யாரும் கடன் தர மாட்டார்கள். கமிஷன் கடை லாபமாக ஓடியிருந்தால், வட்டியாவது கட்டியிருக்கலாம். இந்நிலையில், மேற்கொண்டு என்ன செய்வது, கேட்கும் போதெல்லாம் காதில், கழுத்தில் கிடந்த அனைத்தையும், கழட்டிக் கொடுத்த மனைவியிடம் எப்படி சொல்வது, இதே கமிஷன் மண்டியில், யாரிடமாவது வேலை கேட்கலாமா என்று ஒரு நிமிடம் எண்ணியவன், அடுத்த நிமிடமே, 'ஒருமொதலாளியா வலம் வந்த இடத்துல, தொழிலாளியா எப்படி வேலை செய்றது... அதை விட, நாண்டுக்கிட்டு சாகலாம். ஆனால், என் இரண்டு குழந்தைகளின் எதிர்காலம்... என் மனைவி, பைத்தியம் பிடித்து, ரோட்டில் அலைவாளே... என்ன தான் செய்வதோ...' என்று குழம்பிய மனநிலையில், கமிஷன் மண்டியில வேலை செய்யும் தொழிலாளிகளை பார்த்தான். அவர்கள் காய்கறி மூட்டைகளை, சுமந்து வந்து, கடைகளில் இறக்கிக் கொண்டிருந்தனர். கடையை விட்டு இறங்கி, ஏதேதோ சிந்தித்துக் கொண்டே, வீட்டை அடைந்தான். வீடு திறந்து இருந்தது. ஹாலில், அவனுக்கு வட்டிக்கு கடன் கொடுத்த மாரிச்சாமி அமர்ந்திருந்தான். கூட்டுவட்டி, மீட்டர் வட்டி என்று, அவன் சொன்ன தொகை, பசுபதிக்கு தலைசுற்றியது. பசுபதியின் மனைவி செண்பகம் கொடுத்த காபியை குடித்தவாறே, மிரட்டும் தொனியில் பேசினான் மாரிச்சாமி,''பசுபதி... வேற யாரையும், நான் இதுவரை மூணுமாசம் வட்டியை பாக்கி வைக்குற அளவுக்கு விட்டு வச்சதில்லை. நீ நல்லவன்; தொழிலுல நஷ்டப்பட்டவன்கிறதால, மூணு மாசம் பொறுத்துக்கிட்டேன். நானும்ல இதை நம்பி வாழுறவன். அதனால, வட்டியையும், மொதலையும் ஒரு வாரத்துக்குள்ள குடுக்கப்பாரு... என்ன வேற மாதிரி முடிவெடுக்க வச்சிடாத,'' என்று சொல்லி, காபி டம்ளரை வைத்துவிட்டு கிளம்பினான் மாரிச்சாமி.அவன் சொன்ன, 'வேறமாதிரி' என்னவென் பதை, பசுபதி அறிவான். ரவுடிகளை வைத்து, பொருட்களை தூக்குவான் அல்லது வீட்டிற்கு வந்து மரியாதை குறைவாக பேசுவான்.''குடும்பத்தோடு விஷம் குடித்து இறந்து போவோமா?'' என்று, மனைவியிடம் கேட்டான். பதறிப்போன செண்பகம், ''என்ன வார்த்தை சொன்னீங்க... நாம செஞ்ச பாவத்துக்கு, நம்ம புள்ளைங்க எதுக்குங்க சாகணும்? நாம செத்து, நம்ம புள்ளைங்க உயிரோட இருக்கிறது கொடுமைங்க. ஏதாவது மாற்று வழி பார்ப்போம்; இந்த மாதிரி எண்ணங்களை கைவிடுங்க,'' என்று, ஆபத்துக் காலத்தில், உதவும் அமைச்சராய், புத்தி சொன்னாள்.சிறிது நேர அமைதிக்கு பின், செண்பகம், ''ஏங்க உங்களுக்கும், உங்க அண்ணனுக்கும் சேர்த்து, நாலு ஏக்கர் நிலம் இருக்குதுல்ல. நீங்க உங்க பங்கை விவசாயம் பார்க்காம போட்டிருக்கீங்க; அவரு, அதை பொன்னு விளையிற பூமியா மாத்தி வச்சிருக்காரு. அந்த நிலம் நல்ல விலைக்குப் போகுமுங்க. ''அதுவும், மெயின் ரோட்டுக்கு பக்கமாக இருக்கிறதால, ஏதாவது ரியல் எஸ்டேட்காரங்ககிட்ட வித்தா, நல்ல தொகை கிடைக்கும். அதை வச்சு கடனை அடைச்சிட்டு, மிச்ச காசுல, அகலக்கால் வைக்காம, ஒரு பொட்டிக்கடை வச்சு பொழைச்சுக்குவோம்,'' என்றாள். ''செண்பகம்... அந்த நிலத்துல தாண்டி எங்க அம்மா, அப்பாவை அடக்கம் செய்திருக்கோம்; வருங்காலத்துல நாமளும் அங்கதான் அடங்கணும். அதை போய் விக்க சொல்றீயே,'' என்றான்.''அத விக்கலேன்னா, நாம நாலு பேரும், கடன் சுமையில செத்து, கவர்ன்மென்ட் சுடுகாட்டுலதான் படுக்க வேண்டி வரும், புரிஞ்சுக்கங்க,'' என்றாள்.மனைவியின் உக்கிரமான வார்த்தை அவன் மண்டைக்குள் உறைத்தது.''சரிடி... என் அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கறேன். அப்புறம் முடிவெடுப்போம்,'' என்றான்.நான்கு தெரு தள்ளியிருந்த, தன் அண்ணன் வீட்டுக்குச் சென்றான். அண்ணி தமயந்தி அவனை வரவேற்று அமரச் செய்தாள்.''என்ன கொளுந்தனாரே... இந்தப் பக்கம்?''''அண்ணன பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன். வீட்டுல இல்லையா?''''வெளிய போயிருக்கறாக, வர்ற நேரம்தான். எதுக்கும் போன்ல கூப்பிட்டு பாருங்க,'' என்றாள்.அண்ணனை, மொபைலில் பிடித்தான் பசுபதி. 'வீட்டுக்குதான் வந்துக்கிட்டுருக்கேன்...' என்றான் அவன். சொன்னது போல் பத்து நிமிடத்தில், வீடுவந்து சேர்ந்தான் அண்ணன் மாணிக்கம். தம்பியின் முகவாட்டத்தை பார்த்து கனிவாய், ''என்னடா தம்பி, என்ன பிரச்னை,'' என்று கேட்டான்.அண்ணனின் கனிவான வார்த்தைகளை கேட்டதும், கரை உடைந்த வெள்ளம் போல், தன் நிலையை கொட்டித் தீர்த்தான் பசுபதி. அண்ணனும், தம்பியும் வெகுநேரம் பேசிக் கொண்டனர். முடிவில்,'' நிலத்தை யாருக்கும் விற்க வேண்டாம். கடன உடன வாங்கி, நிலத்தை நானே வாங்கிக்கிறேன்,'' என்று கூறினான்இயற்கையிலேயே நல்ல குணம் கொண்ட பசுபதி, தங்கள் குடும்பச் சொத்து மற்றவர்களிடம் போகாமல், தன் அண்ணனிடம் போய் சேர்வது தான் நல்லது என்று, மனதுக்குள் மகிழ்ந்தான். கடனாளி கழுத்தை நெரிப்பதற்குள், பணத்தை கொண்டுவந்து தருவதாக, வாக்களித்தான் மாணிக்கம்.ஒரே வாரத்தில், பணத்தை புரட்டி விட்டான் மாணிக்கம்.'மொத்த சொத்தும், கைக்குள் வந்துவிட்டது' என்று மனதுக்குள் தீபாவளி கொண்டாடினாள் மாணிக்கத்தின் மனைவி. 'கணவர் புத்திசாலிதான்...' என்று, நினைத்துக் கொண்டாள்.பையில் பணத்தை போட்டு, மனைவியையும் அழைத்துக் கொண்டு, தம்பி வீட்டிற்கு கிளம்பினான் மாணிக்கம். அங்கு சென்று, பணத்தை கொடுத்து, பத்திரத்தில், தன் பேரில் எழுதிக் வாங்கிக் கொண்ட மணிக்கம், தம்பியை பார்த்து, ''டேய் பசுபதி... மிச்ச பணத்தை தொழில் தொடங்கறேன்னு கரியாக்கிடாத. உனக்கு ரெண்டு பொம்பளப் புள்ளைங்க இருக்கு. அவங்களோட எதிர்காலத்தை மனசில் வச்சு, அவங்க பேருல டெபாசிட் செய். நிலம் என் பேருல தான் இருக்குதே தவிர, அது இப்பவும், உன் நிலம்தான். அற்புதமாய் விளைச்சல் குடுக்கிற நிலத்தை உதாசீனப்படுத்திட்டு, தொழில் தொடங்குறேன்னு போன பாரு... அதுக்கு நிலத்தாய் உனக்கு தற்காலிகமாக கொடுத்த தண்டனை தான் இந்த கடன். ''இத்தனை நாளும், நீ பட்ட கஷ்டத்தை உணர்ந்து, நிலத்துல இறங்கி பாடுபடு; நானும், என்னால முடிஞ்ச உதவியை செய்றேன். நானும், கடன உடன வாங்கித் தான், உன் நிலத்தை வாங்கியிருக்கிறேன். அந்தக் கடனை அடைக்கணுமுன்னா, விவசாயத்துல கிடைக்கிற லாபத்துல, எனக்கொரு பங்க குடு. அதை சேர்த்து வச்சு, நான் கடனை அடைச்சிடுறேன். அப்புறம், இந்த நிலத்தை, உனக்கே திருப்பித் தந்துடறேன், சரியா?'' என்றான்.அண்ணன் காலில், சாஷ்டாங்கமாய் விழுந்து கதறினான் பசுபதி. நெருப்பு உமிழ கணவனைப் பார்த்தாள். தமயந்தி. அதை, சட்டை செய்யாமல், தொடர்ந்தான் மாணிக்கம்...''அழாம போய், நிலத்துல என்ன போடாலம்ன்னு யோசிச்சு, உழைச்சு முன்னேறு,'' என்று தம்பியை தட்டிக் கொடுத்து விட்டு, மனைவியையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினான் மாணிக்கம்.மாணிக்கத்தின் வீட்டில் பிரளயம் வெடித்தது. வானத்துக்கும், பூமிக்கும் குதித்தாள் தமயந்தி. வார்த்தைகளால், அவளை அடக்கிய மாணிக்கம், ''அவன், என் உடன் பிறந்த ரத்தம். அவனை தெருவுல விட்டுட்டு, என்னால வீட்டுக்குள்ள நிம்மதியா உறங்க முடியாது; இன்னொன்னையும் புரிஞ்சுக்க... தம்பி, சொத்தை, ரியல் எஸ்டேட்காரங்களுக்கு விற்கறதா இருந்தான். எங்க அப்பா, தாத்தா தானியம் விளைவிச்ச, அவங்க ஆத்மா அலைஞ்சிட்டிருக்கிற, அந்த இடத்தை, கான்கிரீட் காடா மாற்ற, என் மனசு இடம் கொடுக்கல; அதனாலதான், அப்படி செய்தேன். பணத்தை புரட்டி குடுத்திட்டு, நிலத்தை என் பேருல வாங்குனது, நிலத்தை என்னுது ஆக்கிக்கிட இல்லை. அது பத்திரமா எங்க குடும்பத்தை விட்டு போயிராம இருக்கத்தான் புரிஞ்சுக்க,'' என்ற, தன் கணவனின் பேச்சில் கட்டுப்பட்டாள் தமயந்தி.மறுநாள் காலை, மண்வெட்டியை தோளில் வைத்தபடி கிளம்பினான் பசுபதி, தன் குடும்பத்தை, வாழவைக்கப் போகும் நிலத்தில், வாழை கண்ணு நட!வி.சகிதா முருகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !