உள்ளூர் செய்திகள்

பிள்ளையான பெருமாள்!

மறைந்த பெற்றவர்களுக்காக, பிள்ளைகள் திதி கொடுப்பது வாடிக்கை. ஆனால், குழந்தை இல்லாத ஒரு பக்தனுக்காக, தெய்வமே தீபாவளியன்று திதி கொடுக்கிறார் என்றால், ஆச்சரியம் தானே! இவர் தான், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள்.'சார்ங்கம்' என்றால் வில். பெருமாளிடம் சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகிய ஆயுதங்கள் இருப்பது வாடிக்கை. ஆனால், இங்கே பெருமாள், வில் ஏந்தி நிற்கிறார். இதனால், சாரங்கபாணி எனப்பட்டார். பாணி என்றால் தரித்தவர், வில்லை ஏந்தியவர் என, பொருள். ஒருமுறை லட்சுமி தேவி, பூலோகத்தில் பிருகு முனிவரின் மகளாகப் பிறக்க வரமளித்தாள். அவ்வாறு பிறந்த மகளுக்கு கோமளவல்லி என பெயரிட்டார், பிருகு.கோமளம் என்றால் அழகு, இளமை என, பொருள். அழகான கோமளவல்லியை மணக்க, சீனிவாசன் என்ற பெயர் தாங்கி, பூலோகம் வந்தார், பெருமாள்.கும்பகோணத்தில் கோமளவல்லி என்ற பெயரில் லட்சுமி தங்கியிருப்பதை அறிந்தவர், பிருகுவிடம் பேசி, மண ஒப்பந்தம் செய்தார். மண நாளுக்கு சில நாள் முன்னதாக, மணமகனை காணவில்லை. லட்சுமிக்கு வேடிக்கை காட்டுவதற்காக, ஒரு பாதாளத்தில் ஒளிந்து கொண்டார், சீனிவாசன்.ஒருவழியாக மணமகனின் இருப்பிடத்தை அறிந்து, அழைத்து வந்தனர். அவர் தங்கிய இடம், சாரங்கபாணி கோவிலுக்குள், பாதாள சீனிவாசன் சன்னிதி என்ற பெயரில் உள்ளது. பக்தர்கள், பாதாளத்திலுள்ள படிக்கட்டுகளில் இறங்கி, இவரைத் தரிசிக்கலாம். மேலே வந்த சீனிவாசன் மற்றொரு சன்னிதியில் அமர்ந்தார். இவரை, மேட்டு சீனிவாசன் சன்னிதியில் காணலாம்.இந்தக் கோவில் திருப்பணியை, லட்சுமி நாராயணன் என்ற பக்தர் மேற்கொண்டார். திருமணமாகாத இவர், பெருமாள் சேவையே கதி என, வாழ்ந்தார். தான் இறந்து விட்டால், தனக்கு திதி, சிரார்த்தம் முதலானவை செய்ய யார் இருக்கின்றனர் என, வருந்தினார். சாரங்கபாணியிடம், 'பெருமாளே... என் இறப்புக்கு பிறகு, நீயே என் பிள்ளையாக இருந்து காரியம் செய்ய வேண்டும்...' என, வேண்டினார்.ஒரு தீபாவளியன்று, அவர் இறந்து போனார். அவருக்குரிய இறுதி காரியங்களைச் செய்து விட்டு, சன்னிதிக்குள் சென்று விட்டார், பெருமாள். அர்ச்சகர், சன்னிதியைத் திறந்த போது, ஈர வேட்டியுடனும், மாற்றி அணிந்த பூணுாலுடனும் காட்சியளித்தார், பெருமாள். மறைந்த பக்தனுக்கு காரியம் செய்ய, நல்ல நாள் என்றும் பாராமல் சென்றது, தெரிய வந்தது. இங்குள்ள உத்ராயண வாசல் ஏறுமிடத்திலுள்ள மதில் சுவரில், நரசிம்மர், பிரகலாதனுக்கு அருளியது, இரண்யனை வதம் செய்தது உள்ளிட்ட காட்சிகளை தத்ரூப சிற்பங்களாக வடித்துள்ளனர். இவ்வளவு துல்லியமான சிற்பங்களை வேறு கோவில்களில் காண்பது அரிது.கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் பேருந்து நிறுத்தம் அருகில் கோவில் உள்ளது.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !