தந்தை, அண்ணனுக்காக உயிரை விட்ட சிறுமி!
அண்ணணுக்கு சிறுநீரகம், தந்தைக்கு கண்களை தானமாக கொடுக்க, தன் உயிரை கொடுத்துள்ளார், 12 வயது சிறுமி.மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டம், ஜோர்பாரா என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, மம்பி சர்க்கார்; வயது 12. பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை, மிரிதுல் என்பவர் கண் பார்வையின்றி தவித்து வந்தார். இவரது அண்ணன் மனோஜித் என்பவர், சிறுநீரகம் செயல் இழந்து, வேலை செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். தினக்கூலியான மிர்துலுக்கு தினமும் வாழ்க்கையை ஓட்டவே போதுமான பணம் கிடைப்பது இல்லை. சொற்ப ஊதியத்தை வைத்து, மிகப்பெரிய மருத்துவ சிகிச்சையை இவர்களால் எப்படி மேற்கொள்ள முடியும்?யாராவது சிறுநீரகத்தை தானமாக கொடுத்தால், மனோஜித்தை காப்பாற்ற முடியும், கண் மாற்று அறுவை சிகிச்சை செய்தால், மிர்துலுக்கு பார்வை கிடைக்கும் என குடும்பத்தினர் பேசிக் கொண்டிருந்தனர்; இதை, மம்பி சர்க்கார் கேட்டார். எனவே, தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தார். தன் உடல் உறுப்புகளை, தன் தந்தைக்கும், சகோதரனுக்கும் தானமாக வழங்க முடியும் என அவர் நம்பினார். ஜூன் 27ம் தேதி, தன் சகோதரி மோனிகாவை அழைத்து, தன் எண்ணத்தை தெரிவித்தார். அதைக் கேட்டு சிரித்த மோனிகா, அதைப் பற்றி பெரிதாக எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை; பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றாள். வீட்டில் தனியாக இருந்த மம்பி சர்க்கார், வீட்டில், வயலில் தெளிக்க வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை எடுத்து சாப்பிட்டார். உடனே, தன் தந்தையை நோக்கி ஓடினார். அங்கே மயங்கி விழுந்த மம்பி சர்க்காரை, மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். உடனே போதுமான சிகிச்சை கிடைக்காததால், மம்பி சர்க்கார் மரணமடைந்தார். பின்னர், வீட்டிற்கு அவர் உடலை எடுத்து வந்து, முறைப்படி இறுதி சடங்குகளைச் செய்தனர். மறுநாள் தான் மம்பி சர்க்கார் எழுதி வைத்திருந்த கடிதத்தை அவர்களது பெற்றோர் பார்த்தனர்.தங்களைக் காப்பாற்ற உறுப்பு தானம் செய்ய உயிரை விட்ட மம்பி சர்க்காரை நினைத்து அழுதனர். அவரது மரணத்தால், அவரது ஆசை நிறைவேறாமல் போனது குறித்து பெரிதும் கவலைப்பட்டனர்.இந்த சம்பவம், ஜோர்பாரா கிராமம் மட்டு மல்லாமல், மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உள்ளூர் எம்.எல்.ஏ., சமீர் போதர் என்பவர் இதை கேள்விப்பட்டு, அந்த கிராமத்துக்கு வந்து, பெற்றோரைப் பார்த்தார். பெரிய மருத்துவ மனையில் மனோஜித்துக்கும், மிர்துலுக்கும் தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளைச் செய்தார்.எப்படியோ, அந்த சிறுமியின் ஆசை, அவர் உயிர் துறந்ததன் மூலம் நிறைவேறி வருகிறது.***நித்தீஷ் சர்மா