முதல் பாத யாத்திரை!
முருகன் கோவில்களுக்கு, குறிப்பாக, பழநிக்கு பாத யாத்திரை செல்லும் வழக்கம், இன்று நேற்றல்ல, ஏழாம் நுாற்றாண்டிலிருந்தே இருந்துள்ளது. மதுரையில் இருந்த முருகன் விக்ரகத்தை, பழநிக்கு பாத யாத்திரையாக எடுத்துச் சென்றுள்ளனர்; பக்தர்களும் உடன் சென்றனர்.அன்று முதல், பழநிக்கு பாத யாத்திரை செல்லும் வழக்கம் ஏற்பட்டது. ஏழாம் நுாற்றாண்டில் நிகழ்ந்த பாத யாத்திரையே, முதல் பாத யாத்திரை.ஏழாம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர், சுந்தரர். நாயன்மார்களில் ஒருவரும், தேவாரம் பாடிய மூவரில் ஒருவருமான இவர், மதுரைக்கு, யாத்திரை வந்தார்.மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் இருந்த (அன்றைய திண்டுக்கல் சாலை, இன்றைய நேதாஜி சாலை) முருகன் கோவிலில் தங்கினார். இதனால், இந்த இடத்துக்கு, சுந்தரர் மடம் என, பெயர் ஏற்பட்டது. இந்த கோவில் கருவறையில் இருந்த முருகன் விக்ரகம், பழநி முருகன் விக்ரகத்தை ஒத்திருந்தது.கோவணத்துடன் நின்ற கோலத்தில், தண்டாயுதபாணி எனும் பெயர் தாங்கி இருந்தார். வலது கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பில் வைத்துள்ளார். இதுதவிர, உற்சவர் விக்ரகம் ஒன்றும் இருந்தது.இந்த விக்ரகத்தை, தை பூசத்தன்று தலைச் சுமையாக, பழநிக்கு, பாத யாத்திரையாக எடுத்துச் சென்றனர், பக்தர்கள். அங்கு சென்றதும், உற்சவருக்கு அபிஷேகம் நடத்தினர். மீண்டும், தலையில் சுமந்து, மதுரைக்கே எடுத்து வந்தனர்.பிற்காலத்தில், விக்ரகத்தை எடுத்துச் செல்லும் வழக்கம், நின்று போனது. ஆனால், பாத யாத்திரை செல்லும் வழக்கம் மட்டும், இன்று வரை தொடர்கிறது.இந்த கோவிலில், வைகாசி விசாகம், விசேஷம். அன்று, பக்தர்கள், முருகனுக்குரிய, 'ஓம் சரவணபவ... ஓம் சரவணபவாய நம... ஓம் முருகா...' ஆகிய மந்திரங்களை சொல்லுவர். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம் மற்றும் சண்முக கவசம் பாடல்களை பாடுவர்.கோவிலின் முன் மண்டபத்தில், திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமி மலை, திருத்தணி, சோலை மலை முருகன் சிற்பங்கள் சுதை வடிவில் (சுண்ணாம்பு கலவையால் செய்தவை) உள்ளன.மகா மண்டபத்தில் விநாயகர், துர்க்கை, நாகராஜர், அனுமன், சிவன், தட்சிணாமூர்த்தி, கால பைரவர் சன்னிதிகள் உள்ளன. தேய் பிறை அஷ்டமி, ஞாயிறு ராகு காலத்தில், கால பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. இதை தரிசித்தால், கிரக தோஷம் நீங்கும். பிரதோஷத்தன்று, சிவனுக்கு பூஜை நடக்கும்.மதுரை, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து, மீனாட்சியம்மன் கோவில் செல்லும் நேதாஜி சாலையில் கோவில் உள்ளது. தி. செல்லப்பா