நல்ல மனம் வேண்டும்!
'நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை...' என்பது, அவ்வையார் வாக்கு. அதன்படி நடந்த கதை இது:கிராமம் ஒன்றில், நரபேராம் என்ற துறவி வாழ்ந்து வந்தார். மனதால் கூட பிறருக்குத் தீங்கு நினைக்காதவர்; அதிகாலையில் எழுந்து நீராடி, அனுஷ்டானங்களை முடிப்பார்; நெற்றியில் திருநீறு இட்டு, ஒரு கையில் தடியும், மறு கையில் துணி பையுமாகப் புறப்பட்டு, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று, 'தர்மமே வெல்லும்...' என, குரல் கொடுப்பார்.அவரவர்கள் போடும் தானியத்தை, துணி பையில் பெறும் அத்துறவி, எந்தவொரு வீட்டிலும் ஒரு கைப்பிடிக்கு மேல், வாங்க மாட்டார். ஒவ்வொருவரிடமும் விசாரித்து, அவர்களுக்கு நல்வழி காட்டுவார். இந்நிலையில், அந்த ஊர் கோவில் பூசாரி இறந்து போனதால், துறவியிடம் பொறுப்பை ஒப்படைத்து, அவரையே கோவில் பூசாரியாக்கினர்.அதன் பிறகும் கூட, துறவி, தாம் பிட்சை பெறுவதை நிறுத்தவில்லை; வீடுதோறும் போய், பிட்சை ஏற்று வந்தார். கிடைத்த தானியத்தை, கோவிலில் இருந்த ஒரு குதிரில் சேமித்தார்; நிறைய தானியம் சேர்ந்தது.அதைப் பார்த்த சிலர், 'இப்படி சேமித்து வைப்பதை விட, விற்றுப் பணமாக்கி வைத்துக் கொள்ளலாமே... ஏன் இப்படிச் செய்கிறீர்கள்...' என்று கேட்டனர். 'சிறு வயதில் இருந்தே, தானியங்களை விற்கக் கூடாது என்று, என் தந்தை சொல்லி இருக்கிறார். அதனால் நான், தானியங்களை விற்க மாட்டேன்...' என்று அழுத்தமாகக் கூறினார், துறவி. 29 நாட்கள் கடந்தன. எதிர்பாராத விதமாக, அப்போது மழை பொய்த்து, பஞ்சமும், பசியும் பரவின.பணக்காரர்கள் பாடு பரவாயில்லை; சேர்த்து வைத்திருந்த தானியங்களை வைத்து, பஞ்சத்தில் இருந்து தப்பினர். சாதாரண மக்கள்-, ஏழைகள் நிலை...பஞ்சத்தில் ஏழைகள் பரிதவிப்பதை கண்டும், அவர்களுக்கு உதவ, பணக்காரர்கள் முன்வரவில்லை. 'ஒருவேளை, பஞ்சகாலம் நீடித்து விட்டால், நாம் என்ன செய்வது...' என்ற எண்ணமே காரணம்.பசியால் வாடும் மக்களுக்கு உதவி செய்து, அவர்களை காப்பாற்ற நினைத்தார், துறவி. அதேசமயம், அதை வெளிப்படையாக, மற்றவர் கண்களில் படும்படியாக, விளம்பரமாகச் செய்யவும் விரும்பவில்லை. ஏற்கனவே, ஒவ்வொருவரை பற்றியும் விசாரித்து வைத்திருந்தார் அல்லவா... அதனால், ஒவ்வொருவர் வீட்டிலும், எவ்வளவு பேர் இருக்கின்றனர்... தேவை எவ்வளவு என்பது, அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால், இரவு நேரத்தில், பையில் தானியத்தோடு போய், ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையானதை, சத்தமே இல்லாமல், அந்தந்த வீட்டின் வாசலில் வைத்து, வந்து விடுவார்.இப்படி, குதிரில் சேமித்து வைத்திருந்த அரிசியை எடுத்து செலவு செய்து கொண்டிருந்தார். துறவி இவ்வாறு செய்வது, ஏழைகளுக்குத் தெரியாதே தவிர, செல்வந்தர்கள் இதை அறிந்தனர். அவர்களின் மனம் கசிந்தது; அவரவர்கள், தங்களால் முடிந்த அளவு தானியத்தை, துறவியிடம் தந்து உதவினர்.அப்புறம் என்ன... நாம் என்ன செய்தும் பலனில்லை. நல்ல மனம் உடைய இந்த நரபேராம், அனைவரையும் காப்பாற்றி விடுவார் போலிருக்கிறது. நமக்கேன் கெட்ட பெயர் வர வேண்டும் என்பதைப் போல, மழை பொழிந்தது; பஞ்சம் விலக, பசியும் நீங்கியது. நல்லவர்கள் எங்கும் இருக்கின்றனர்... என்றென்றும் இருக்கின்றனர்... மழை பெய்வதே அவர்களால் தான். அந்த பட்டியலில் நம் பெயரும் இடம்பெற முயல்வோம்!- பி.என். பரசுராமன்ஆலய அதிசயங்கள்!இமயமலை சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று, பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம், நடை திறப்பர். நவம்பர் முதல் வாரத்தில் நடை மூடும்போது, தீபம் ஏற்றுவர். அந்த தீபம், மீண்டும் கோவில் நடை திறக்கப்படும் வரை, ஆறு மாதமும் எரிந்தபடி இருக்கும்.