சமயோசித அறிவுக்கு உதாரணம் இவர்!
ஜூலை 1, டாக்டர்ஸ் டேபுகழ்பெற்ற மருத்துவர், எஸ்.ரங்காச்சாரி. சென்னையில், அவருக்கு மட்டும் தான், வெள்ளைக்காரன் ஆட்சியில், 1939ல் சிலை வைக்கப்பட்டது. அச்சிலையை, சென்னை அரசு பொது மருத்துவமனையில் இன்றும் காணலாம்.சைக்கிளில் சென்று மருத்துவம் பார்த்தவர். நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டும் என்று, 'ரோல்ஸ் ராய்ஸ்' கார், பின், சிறு ரக விமானம் வாங்கி, அதில் சென்று மருத்துவம் பார்த்தார். தினமும், 18 மணி நேரம் கடினமாக உழைத்தவர்.சென்னை எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின், முதல் டெபுடி சூப்பரின்டென்ட்டாக பணியாற்றியவர். சட்டென்று முடிவுகளை எடுக்கும் திறமையும், பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்தவர். அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு.ஒருநாள், நடந்து போகும்போது, வழியில், பெரிய கூட்டம் கூடியிருந்தது. என்னவென்று விசாரித்தார்.'மனைவிக்கு பிரசவ நேரம். பெரிய மருத்துவரிடம் போக வசதியில்லை, ஐயா...' என்று, அழுதான், கணவன்.நிறைமாத கர்ப்பிணிக்கு, குழந்தையின் கால் வெளியில் வந்துவிட்டது. கொஞ்சம் தாமதித்தாலும், இரு உயிர்களுக்கும் ஆபத்து. சட்டென, தன் கையிலிருந்த சிகரெட்டின் முனையை, குழந்தையின் காலில் வைத்து அழுத்த, காலை உள்ளே இழுத்து, உள்ளுக்குள்ளேயே சுழன்று சுகப்பிரசவமாகி விட்டது. தாய் - சேய் இருவரும் நலம். இதுபோல் பல சிக்கலான பிரச்னைகளை எளிதில் தீர்த்து வைத்துள்ள, டாக்டர் ரங்காச்சாரியை, டாக்டர்கள் தினத்தன்று நினைவு கூர்வோம்!— ஜோல்னாபையன்