உள்ளூர் செய்திகள்

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே...

அன்பு காட்டும் இடத்தில் குழந்தை மட்டுமல்ல, தெய்வமும் இருக்கும். அதனால் தான், 'குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில்' என்கின்றனர் சான்றோர். இச்சொல்லாடலுக்கு உதாரணம் இக்கதை:இறை பக்தி கொண்ட முதியவர் ஒருவரின் மாளிகைக்கு, அவ்வப்போது அடியவர்கள் வருவர். அப்போது, கண்ணனின் மகிமையை பற்றிய பஜனைப் பாடல்களால் அம்மாளிகையே, பக்தி மணம் கமழும். இவற்றையெல்லாம் பார்த்து வளர்ந்த முதியவரின் பேத்தி சிறுமி மீராவுக்கு, கிருஷ்ணன் மீது ஈடுபாடு ஏற்பட்டு, எப்போதும் கண்ணனின் பாடல்களை பாடிக் கொண்டிருந்தாள். அவள் பாடுவதைக் கேட்டு, வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ந்தனர்.அக்காலகட்டத்தில் ரவிதாசர் என்ற மகான் வாழ்ந்து வந்தார். அவர் எங்கு சென்றாலும், தான் அன்றாடம் வழிபடும் கிருஷ்ணரின் சிலையையும் எடுத்துச் செல்வார். ஒருநாள், அவர் அம்முதியவரின் மாளிகைக்கு வருகை புரிந்தார்.அன்று அனைவரும் பஜனையில் மூழ்கியிருந்த போது, ரவிதாசர் முன் இருந்த கிருஷ்ண விக்ரகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிறுமி மீரா, 'அந்த கிருஷ்ணன் எனக்கு வேணும்...' என, தன் தாத்தா மற்றும் அங்கிருந்தோரிடம் கேட்டாள்.அவர்களோ, 'குழந்தை விளையாடுவதற்காகத் தான், விக்ரகத்தை கேட்கிறது...' என நினைத்து, அவள் வேண்டுகோளை நிராகரித்தனர்.உடனே அழத் துவங்கினாள் மீரா. பூஜையும், பஜனையும் முடிந்த பின், கிருஷ்ண விக்ரகத்தை எடுத்துக் கொண்டு, விடை பெற்று சென்று விட்டார் ரவிதாசர். அவர் விக்ரகத்தை எடுத்துச் சென்று விட்டார் என்றதும், மீராவின் அழுகை அதிகமானது; சாப்பிடாமல், தூங்காமல் விக்ரகத்தை கேட்டு, அடம் பிடித்து அழுதாள்.இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர் வீட்டினர்.மறுநாள் காலை, திடீரென அங்கு வந்த ரவிதாசர், அழுது கொண்டிருந்த குழந்தையின் கைகளில், கிருஷ்ண விக்ரகத்தை ஒப்படைத்தார். ஒன்றும் புரியாமல் அனைவரும் விழித்தனர்.'நேற்று இரவு, கண்ணன் என் கனவில் காட்சியளித்து, 'என் பக்தையான அக்குழந்தை, என்னைக் காணாமல் அழுது கொண்டிருக்கிறாள். உடனே உன்னிடம் உள்ள கிருஷ்ண விக்ரகத்தை அவளிடம் ஒப்படை...' என கட்டளையிட்டார்; அதனால் தான், குழந்தையிடம் விக்ரகத்தை ஒப்படைக்க ஓடி வந்தேன். இந்த தெய்வக் குழந்தையால், எனக்கு கண்ணனின் தரிசனம் கிடைத்தது...' என்று கூறி, குழந்தை மீராவை ஆசிர்வதித்தார் ரவிதாசர்.அவ்வீட்டில் நல்ல பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததால், சிறுமியான மீராவும் அதை தீவிரமாக கடைப்பிடித்து, பின்னாளில், இறைவனின் அன்பைப் பெற்று, அவனுள் ஐக்கியமானாள்.குழந்தைகள் எதிரில், வீட்டில் உள்ளவர்கள் நல்ல செயல்களை கடைப்பிடித்தால், குழந்தைகளும் நல்வழிப்படுவதுடன், தெய்வத்தின் அருளையும் பெறுவர்.பி.என். பரசுராமன்திருமந்திரம்!இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்துள்நன்செயல் புன்செயலால் அந்த நாட்டிற்காம்என்ப இறைநாடி நாடோறும் நாட்டினில்மன்பதை செப்பம் செயின் வையம் வாழுமே!விளக்கம்: மக்களிடம் உள்ள நற்செயல்களும், தீயசெயல்களுமே, ஒரு நாட்டின் இன்ப, துன்ப நிலைகளுக்கு காரணம் என்று அறிவுடையோர் கூறுவர். எனவே, நாடும், நாட்டு மக்களும் நலம் பெற வேண்டுமானால், நாட்டை ஆள்வோர், தீய செயல்களை மக்கள் செய்யாதபடி அவர்களை திருத்தி நல்வழிப்படுத்திட வேண்டும்!கருத்து: ஆட்சியாளர், தவறு செய்யும் தன் நாட்டு மக்களை திருத்தியும், திருந்தாதவர்களுக்கு தண்டனை அளித்து நல்வழிப்படுத்துவதன் மூலம், நாடும், மக்களும் துன்பமின்றி, இன்பமாக வாழ்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !