அன்புடன் அந்தரங்கள்
அன்புள்ள அம்மா -நான், எம்.இ., படித்துள்ளேன். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயது நிரம்பிய ஆண் குழந்தை உள்ளது.நான் சென்சிடீவ் டைப்; எங்கள் வீட்டில் என்னை நல்ல பெண்ணாக தான் வளர்த்தனர். வெளியூரில் பணிபுரிகிறார், என் கணவர். பல்வேறு காரணங்களை காட்டி, எங்களை சேர்ந்து வாழ விடவில்லை, மாமியார். மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம்.என் மாமனாருக்கு என் மீது சந்தேகம். எல்லா விஷயத்திலும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தும், என்னை சிறை கைதி போல் நடத்துகிறார். சின்ன விஷயத்துக்கு கூட, கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார் மாமனார்.பத்தாம் வகுப்பு படித்த என் மாமியார், மகளிர் சுய உதவிக் குழுவில் பணிபுரிகிறார். ஆனால், என்னை வேலைக்கு அனுப்ப மறுக்கிறார். அத்துடன், வரதட்சணையும் அதிகம் எதிர்பார்க்கிறார்.என் கணவர் மிகவும் நல்லவர். ஆனால், பெற்றோர் மீது அவருக்கு பயம். இதுவரை எவ்வளவோ பிரச்னை நடந்தும், எனக்கு ஆதரவாக பேசியது இல்லை. என் மீது கொஞ்சம் கூட, அவருக்கு அன்பு இல்லை. எந்த விஷயத்தையும் என்னிடம் கூறுவது கிடையாது. தன் பெற்றோரிடம் மட்டும் தான் கூறுகிறார். விவாகரத்து வாங்கி, என் துறையில் சாதிக்க விரும்புகிறேன்.என் முடிவை என் பெற்றோர் ஏற்றுக் கொள்வரா, இந்த உலகம் தப்பா பேசுமோ என்று தயக்கமாக உள்ளது. என் டிகிரி சான்றிதழ்கள் மாமனார் கையில் உள்ளது. என் பிரச்னை தீர, நல்ல முடிவை சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.- இப்படிக்கு,அன்பு மகள்.அன்பு மகளுக்கு -தன் பெற்றோர் மற்றும் தாரத்துக்கு இடையே தராசு போல் சரிசமமாய் நடந்து கொள்ள வேண்டும், ஒரு கணவன். பெற்றோரால் மனைவி கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்றால், அதை கண்டிப்பது அவனது கடமை. மாறாக, நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்காமல் மவுனம் சாதிப்பவன், நல்ல கணவனே அல்ல! உன் பிரச்னைகளுக்கு முழுக் காரணம், உன் கணவன் தான். கொடுமைக்கார கணவன்களை விட, இம்மாதிரியான மவுனசாமியார்கள் ஆபத்தானவர்கள்.மருமகள் என்பவள் மகளைப் போன்றவள். அவளை ஆபாச வார்த்தைகளில் அர்ச்சிப்பவர் நாகரிகமானவர் அல்ல. முதுகலை பொறியியல் படித்த மருமகளை வேலைக்கு அனுப்ப மாட்டார், உன் மாமியார்; ஆனால், பத்தாம் வகுப்பு படித்த அவர், மகளிர் சுய உதவி குழுவில் பணிபுரிவாராம். எத்தனை சுயநலம்?பிள்ளைபூச்சி கணவனிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கு முன், சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள். உன் கணவனிடம், 'குற்றத்தை தடுக்காமல் கைகளை கட்டி, வேடிக்கை பார்ப்பவனும் குற்றவாளி தான். நீயும் அதே தவறை தான் செய்கிறாய். என்னை இழிவுப்படுத்தும் உன் பெற்றோரை தட்டிக் கேட்க மறுக்கிறாய். இனியாவது விழித்துக் கொள்; வேலைக்கு போக என்னை அனுமதி. இதற்கு நீ ஒத்துக் கொள்ளவில்லை என்றால், நாம் விவாகரத்து செய்து கொள்வோம்...' எனக் கூறு.புகுந்த வீட்டில் நடக்கும் அவலங்களை, உன் பெற்றோரிடம் பட்டியலிடு; கணவனை விவாகரத்து செய்து, சொந்த காலில் நிற்க போவதாக கூறி, பெற்றோரின் ஒப்புதலை பெறு.உன் சான்றிதழ்களை, உன் மாமனார் பதுக்கி வைத்துள்ளார் என கூறியிருக்கிறாய். மாமனார் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, ஒரிஜினல் சான்றிதழ்களை பெற முயற்சி செய். அப்படி இல்லையெனில், 'நேர்காணலுக்கு சென்ற போது, டென்த், பிளஸ் டு - பி.இ., - எம்.இ., சான்றிதழ்களை ஒட்டு மொத்தமாக தொலைத்து விட்டேன்; தேடித்தாருங்கள்...' என, காவல்நிலையத்தில் புகார் கொடு. 'தேடினோம் கிடைக்கவில்லை...' என, அவர்கள் எழுத்துப்பூர்வ பதில் கொடுப்பர்.அதை நகல்கள் எடுத்து, நீ படித்த பள்ளி, கல்லூரிகளில், அங்கு படித்ததற்கான சான்றுரைப்பை பெறு.பள்ளி சான்றிதழ்களை பெற, சென்னையிலுள்ள முதன்மை பள்ளி கல்வி இயக்ககத்துக்கு செல். குறிப்பிட்ட தொகை கட்டினால், ஒரு மாதத்தில், நகல் சான்றிதழ் பதிவு தபாலில் வீடு தேடி வரும். கல்லூரி சான்றிதழ்களை பெற, நீ படித்த கல்லூரி நிர்வாகத்தை அணுகு. பணம் கட்டச் சொல்வர். ஒரு மாதத்தில் நகல் சான்றிதழ் வீடு தேடி வரும். வீட்டின் முகவரியாக, உன் பெற்றோரின் முகவரியை கொடு.நல்ல சம்பளம் கிடைக்கும் பணியில் சேர்; குழந்தையுடன் பெற்றோரை தஞ்சமடை. பொருளாதார ரீதியாய் காலூன்றிய பின், குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு செய். பெற்றோர், உன் பிரச்னைகளை புரிந்து கொள்ள தவறினால், தனி வீடு எடுத்து, குழந்தையுடன் தங்கு. பெற்றோரை பகைத்து, கணவனிடம் விவாகரத்து கோரி, தனியாய் ஒரு பெண், குழந்தையுடன் வாழ்வது எளிதான காரியமல்ல. சொந்தக் காலில் நிற்க விரும்புபவள், இந்த சவால்களை எல்லாம் எதிர் கொள்ளத்தான் வேண்டும்.கணவனை விவாகரத்து செய்து, சுதந்திர பறவையாய் உலா வரும் போது, பல ஆண்கள் உன் வாழ்க்கையில் குறுக்கிடுவர். நீ தான் அவர்களை கவனமாக கையாள வேண்டும். திருமணமான ஆணுடன் தொடர்போ, திருமணமாகாத ஆணுடன் முறையற்ற உறவோ ஏற்பட்டால், உன் புகுந்த வீட்டினரை விட, கூடுதல் தவறுகள் செய்தவள் ஆகிவிடுவாய். ஆகவே, மிக கவனமாக உன் வாழ்க்கையை சீரமைக்க வேண்டும். விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு ஒரு உதை பந்து ஆட்டக்காரன் கோல் போடுவது போல, சமூக விதிகளுக்கு கட்டுப்பட்டு நடந்து, வாழ்க்கையில் வெற்றி பெறு.உன் பிரச்னைகள் தீர்ந்து ஒளிமயமான எதிர்காலம் பெற, மனதார வாழ்த்துகிறேன்.- என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்