கத்தி!
மர சட்டத்தில், ஒரு காலால், 'பெடல்' பண்ணக்கூடிய சாணை இயந்திரத்தை, தோளில் சுமந்தவாறு, யாராவது கூப்பிட மாட்டார்களா என்ற ஏக்கப் பார்வையுடன், ஒவ்வொரு வீட்டு வாசலையும், மாடியையும் அண்ணாந்து பார்த்தபடியே, 'அருவா, அருவாமன, கத்தி, கத்திரிகோல் சாண பிடிக்கிறதோய்...' என, கூவியபடி, மெல்ல நடந்தார், அன்வர்பாய்.அவரது நடையில் தொய்வில்லை என்றாலும், காலை வீசி நடக்கவும், அவரால் இயலவில்லை. வயதும், முதுமையும், கூடவே ஒட்டி உறவாடும் ஏழ்மையும், அவரது வாழ்க்கையில் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தன.அண்ணாந்து பார்த்து பார்த்து, கழுத்து வலி தான் அதிகமானது. சாணை இயந்திரம், ஒரு பக்க தோளை அழுத்தியது. யாராவது கூப்பிட்டால், தோளிலிருந்து இறக்கி வைத்து, ஏதாச்சும் காசு பார்க்கலாம்; யாரும் கூப்பிடவில்லை. இதெல்லாம் பழகியது தான், அன்வர்பாய்க்கு.முன்பெல்லாம், 100 - 200 ரூபாய்க்கு கூட, தொழில் நடக்காது. அதற்கப்புறம் தான், சிறியதும், பெரியதுமாய் கத்திகளை மொத்தமாக வாங்கி, சில்லரை விலையில் கத்தி வியாபாரத்தையும் ஆரம்பித்தார். சாணை பிடிக்கிற வேலையுடன், கத்தியும் விற்றால், பல நாட்களில், 200 - 300 ரூபாய் கிடைக்கும்; எப்பவாவது, 500 ரூபாய் கூட கிடைக்கும். அதற்காக, சந்தோஷப்பட்டு கொண்டாடும் ரகம் இல்லை, அவர். ஏற்ற, இறக்கங்களையும், வெற்றி, தோல்விகளையும் சமமாய் பார்க்கற மன நிலைக்கு வந்து, பல ஆண்டுகளாகிறது. ஒரே மகன், அப்துல்லா, 20 வயதில், சாலை விபத்தில் அகால மரணமடைந்த பின், வாழ்க்கையே மாறிப் போனது. அப்துல்லா தான் மூத்தவன். அடுத்தடுத்து, மூன்று பெண் பிள்ளைகள். மாப்பிள்ளைகள், யோக்கியமானவர்களாக இருந்தால் போதும். வசதி பார்த்தால், நம்மால் அவர்களுக்கு ஈடாக சீர் செய்ய முடியாது என, அதற்கேற்றார் போல் பார்த்து, எப்படியோ கரை சேர்த்து விட்டார். இன்று, காலையிலிருந்து யாருமே சாணை பிடிக்கவும் வரவில்லை; கத்தியும் வியாபாரம் ஆகவில்லை. ஏதாவது கிடைத்தால் தான், ராத்திரி ஒரு வேளைக்காவது வயிறார சாப்பிட முடியும். 'மனைவி, சல்மாவுக்கு, 60 வயதுக்கு மேல் ஆகி விட்டது. சோறு பொங்கவே சிரமப்படுறாளே...' என, யோசித்தபடியே நடந்து கொண்டிருந்தார்.தோள் பட்டை வலிக்கவே, சாணை இயந்திரத்தை இறக்கி வைத்து, தொப்பியை கழற்றி, வியர்வையை துடைத்தார். மர சட்டத்தில் தொங்கிய, பையிலிருந்த பாட்டிலை எடுத்து, ஒரு மொடக்கு தண்ணீர் குடித்தார்.''ஐயோ... என் செயினு... பிடிங்க, பிடிங்க,'' என, ஒரு பெண்ணின் அலறல் சத்தம்.திரும்பி பார்த்தார், அன்வர்பாய். இரு சக்கர வாகனத்தில், பின்னிருக்கையில், முகம் தெரியாமலிருக்க, 'ஹெல்மெட்' அணிந்திருந்தான், ஒருவன். அந்த பெண்ணை, கீழே தள்ளி, கையில் பிடித்த செயினை விடாமல் இழுத்துச் சென்று கொண்டிருந்தான்.விபரீதத்தை உணர்ந்தவர், மின்னல் வேகத்தில், பெரிய கத்தி ஒன்றை எடுத்து, அந்த வாலிபனை நோக்கி குறி பார்த்து வீசினார்; குறி தப்பவில்லை. அவன் இடது கையின் தோள் பட்டைக்கு கீழே கத்தி குத்தியது.எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த அவன், 'ஆ...' என்று அலறியபடியே, இரு சக்கர வாகனத்திலிருந்து சரிந்தான். பிடி தளர்ந்து, பெண்ணின் செயினை விட்டு விட்டான். அவன் மீது கத்தியை வீசியது யார், எப்படி அவ்வளவு துல்லியமாக, குறி பார்த்து வீசினார். யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஆனால், கும்பல் கூடி விட்டது.கத்தி ஆழமாக இறங்கி, அதிக ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. இருப்பினும், சுதாரித்து எழுந்து ஓட முயன்றான். ஆனால், கும்பல் அவனை விடவில்லை. ஆளாளுக்கு தர்ம அடி கொடுத்தனர். இதற்கிடையே, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவன், விர்ரென்று பறந்து விட்டான்.துரிதமாக செயல்பட்டு, போலீசுக்கும், ஆம்புலன்சுக்கும் போன் செய்தார், அன்வர்பாய். கூட்டத்தை விலக்கி, அப்பெண்மணியை நெருங்கி, பாட்டிலில் இருந்த தண்ணீரை அவர் முகத்தில் தெளித்தார். உடலெங்கும் சிராய்ப்புகள், அங்கங்கே ரத்தம் துளிர் விட்டிருந்தது.எரிச்சல் மற்றும் வலி தாங்க முடியாமல் முனகியபடி கண் திறந்தார், அப்பெண். பாட்டில் தண்ணீரை குடிக்க கொடுத்தார், அன்வர்பாய். ஒரு மிடறு தண்ணீரை விழுங்கி, நன்றி பெருக்குடன் அவரை பார்த்தார்.சைரன் ஒலியுடன், போலீஸ் ரோந்து வாகனமும், ஆம்புலன்சும் அடுத்தடுத்து வந்து சேர்ந்தன. கூட்டம் விலகி, வழி விட்டது. காவலர்களும், ஆம்புலன்ஸ் ஊழியர்களும் பரபரப்பாக இறங்கினர்.''என்ன பிரச்னை... யார் போன் பண்ணினது?'' என்றார், உதவி ஆய்வாளர் சண்முகம்.''நான் தான் போன் பண்ணினேன், சார்,'' என, முன் வந்தார், அன்வர்பாய்.''நீங்க யாரு?''''எம் பேரு, அன்வர்; திருவல்லிக்கேணியில, ரயில்வே ஸ்டேஷன் ரோட்ல, குடிசை வீட்டுல இருக்கேன்... சாண பிடிக்கிற தொழில் பண்றேன்... ரோட்ல நின்னு தண்ணி குடிச்சுகிட்டு இருந்தேன்... அப்பதான் இந்தம்மா அலறுற சத்தம் கேட்டு, திரும்பி பார்த்தேன். இந்த அயோக்கியன், அந்தம்மா செயினை பிடிச்சு தரதரன்னு, ரோட்ல இழுத்துகிட்டு போய்கிட்டிருந்தான்... ''சட்டுன்னு சுதாரித்து, விற்பனைக்கு வச்சிருந்த கத்தியை எடுத்து, அவன் மேல வீசினேன். அவன, கத்தியால குத்தணும்னெல்லாம் நெனைக்கல... அந்த சமயத்துல, அந்தம்மாவை காப்பாத்த வேற வழி தெரியல. நான் பண்ணினது தப்பா இருந்தா, சட்டப்படி என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன்,'' என, மளமளவென்று பேசினார். கூட்டம் விக்கித்து நின்றது.'இந்த கெழவனா கத்திய வீசுனது... எவ்வளவு நேர்த்தியா குறி பார்த்து வீசியிருக்காரு...' என, ஆளாளுக்கு பேசிக் கொண்டனர்.சிலர், அவரை பாராட்டி, கை குலுக்கினர்.''சரி... நீங்க கொஞ்சம், 'வெயிட்' பண்ணுங்க,'' என்று சொல்லி, அந்த பெண்மணியிடம், ''மேடம், நீங்க எப்படி இருக்கீங்க... ரொம்ப காயம் போலிருக்கே... ஸ்டேஷனுக்கு வந்து, புகார் எழுதி தர முடியுமா... மருத்துவமனைக்கு வந்து முதலுதவி செய்து கொள்கிறீர்களா?'' என்றார், உதவி ஆய்வாளர்.''சார்... என் பேரு பத்மா. இந்த தெருவில் தான் குடியிருக்கேன். ரயில்வேல வேலை; வேலைக்கு போயிட்டிருந்தேன், அப்பதான் இந்த படுபாவி, இப்படி பண்ணிட்டான்; உடம்பு முழுக்க எரியுது. முதல்ல மருத்துவமனைக்கு போய் முதலுதவி செய்துகிட்டு, அப்புறம் ஸ்டேஷன் போகலாம் சார்,'' என்றாள்.''சரி, மேடம்... முடியும்ன்னா ஆம்புலன்சுல ஏறி உட்காருங்க.''செயின் திருடன் பக்கம் திரும்பி, ''கான்ஸ்டபிள்... மொதல்ல அவன், 'ஹெல்மெட்'ட கழற்றுங்க... யாருன்னு பார்ப்போம்,'' என்றார்.'ஹெல்மெட்'டை கழற்றினார்.'யே... வார்றே வா... ரொம்ப நாளா, போலீசுக்கு தண்ணி காட்டினவன்... வசமா மாட்டிக்கிட்டான்யா...' என, மனசுக்குள் மகிழ்ந்தார், உதவி ஆய்வாளர் சண்முகம்.''ஏய்... உன் பேரு என்னடா... எந்த ஏரியா,'' என, கையை ஓங்கி அடிக்க போனார்; ஆனால், அடிக்கவில்லை. அவன் கையிலிருந்து வழிந்த ரத்தம், அவரை தடுத்து நிறுத்தியது.''கான்ஸ்டபிள், இவனையும் ஆம்புலன்சுல ஏத்துங்க. நிறைய ரத்தம் போய்கிட்டிருக்கு... பாதுகாப்புக்கு, ரெண்டு பேரு ஆம்புலன்சுல போங்க, ஜாக்கிரதை... அலட்சியமா இருக்காதீங்க; எல்லாரும் போங்கப்பா,'' என்று, கூட்டத்தை கலைத்தார்.''பெரியவரே... நீங்க ஸ்டேஷன் வரை, வரவேண்டி இருக்கும். போய், ஜீப்புல ஏறுங்க,'' என்றார்.கீழே கிடந்த, ஒரு சாண் நீளத்திற்கு கூர்மையாக, மரத்தாலான கைப்பிடி வைத்த கத்தியின் நுனியில், ஒரு அங்குலத்திற்கு ரத்த ஈரத்துடன் இருந்தது. கைகுட்டையை அதன் மேல் போட்டு சுற்றி பத்திரப்படுத்தி, எடுத்து கொண்டார், உதவி ஆய்வாளர். சாணை மிஷினை எடுத்து கொண்டு, ஜீப்பில் ஏறினார், அன்வர்பாய்.ஸ்டேஷன் சென்றதும், ''பெரியவரே... உட்காருங்க... ரொம்ப களைப்பா தெரியுறீங்க, டீ குடிக்கிறீங்களா... கான்ஸ்டபிள், எல்லாருக்கும் டீ சொல்லுங்க... இன்ஸ்பெக்டர் வரட்டும், அதுக்கப்புறம் விரிவா பேசிக்கலாம்,'' என்றவாறே, தன் இருக்கையில் அமர்ந்தார், உதவி ஆய்வாளர்.கொஞ்சம் நிம்மதியானார், அன்வர்பாய்.உதவி ஆய்வாளர், டீ அருந்திய பின், அரசு மருத்துவமனை நோக்கி விரைந்தது, ஜீப்.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றும், பத்மாவின் கணவரான, சபாபதி, உறவினர்கள் புடைசூழ அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். உதவி ஆய்வாளருக்கு அவரை தெரியும் என்பதால், 'சல்யூட்' அடித்து, வணக்கம் சொன்னார்.''சார்... மேடம், உங்க மனைவின்னு தெரியாது. சாரி சார்,'' என்றார்.''சரி... சரி... உங்க கடமையை செய்யுங்க... இதுபோன்ற குற்றவாளிகளை தப்பிக்க விடாதீங்க... அந்த பெரியவர் இப்ப எங்க இருக்கார்... நான், அவரை பார்க்கணுமே!''''ஸ்டேஷன்ல தான் இருக்கார். குற்றவாளிய அழைச்சுகிட்டு முன்ன போறேன்... மேடத்தை அழைச்சுகிட்டு நீங்க வந்துடுங்க சார்,'' என்று, மீண்டும் ஒரு, 'சல்யூட்' அடித்து விடைபெற்றார்.ஸ்டேஷன், களை கட்டியிருந்தது. பல செயின் பறிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, 'செயின் மோகன்' தான் என்பது, விசாரணையில் உறுதியானது. 'செயின் மோகன்' பிடிப்பட்ட விஷயம், கமிஷனர், டி.ஜி.பி., உள்ளிட்ட, அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. அன்வர்பாயை பாராட்ட, கமிஷனர் நேரில் வருவதாக, 'மீடியா'க்களுக்கு தகவல் பறந்தது. அன்வர்பாய் எனும், 72 வயது முதியவரின், சமயோஜித செயலால், நீண்ட காலமாக, 'டிமிக்கி' கொடுத்து வந்த குற்றவாளி, 'செயின் மோகன்' பிடிபட்டது பற்றி பத்திரிகை, 'டிவி' நிருபர்கள் முன்னிலையில் பேட்டியளித்தார், கமிஷனர்; அன்வர்பாயை பாராட்டி, அன்பளிப்பு ஒன்றை வழங்கினார். மேலும், முதல்வர் வழங்கும், வீர தீர செயல் புரிந்தோருக்கான விருது வழங்கவும், பரிந்துரை செய்வதாகவும் அறிவித்தார்.''சார்... பெரியவர், அன்வர்பாயிடம் சில கேள்விகள் கேட்கலாமா?'' என, ஒரு நிருபர் குறுக்கிட்டார்.''ம்... கேளுங்க, ஆனா, வில்லங்கமா ஏதும் கேட்டுடாதீங்க.''''பெரியவரே... எவ்வளவு துாரத்திலிருந்து கத்திய வீசினீங்க?''''சுமார், 20 அடி துாரத்திலிருந்து.''''ரொம்ப ஆச்சரியமா இருக்கே... ஏற்கனவே பயிற்சி பெற்றிருக்கீங்களா?''''பயிற்சியா, அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க... சின்ன வயசுல குளத்துல கல்ல விட்டெறிஞ்ச பழக்கம்... அப்புறம், மாங்கா, புளியம் பழம் அடிக்கன்னு, பழகினது அவ்வளவு தான்.''அப்போது அங்கே வந்தனர், பத்மாவும், கணவர் சபாபதியும்.''பெரியவரே... உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல... நீங்க மட்டும், சமயோசிதமாய் செயல்படலேன்னா, என்னோட, 10 சவரன் திருமாங்கல்ய செயினை இழந்திருப்பேன்... என் வாழ்நாள் முழுக்க, உங்களை மறக்க மாட்டேன்,'' என்று, அவரின் கைகளை பிடித்து கண்ணீர் மல்க நின்றாள், பத்மா.''கண்ணுக்கு எதிர ஒரு அநியாயம் நடக்கும்போது, அத பாத்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியல... அதான்மா,'' என்றார்.''உங்களுக்கு ஏதாவது செய்ய விரும்பறேன்... மறுக்காம அதை நீங்க ஏத்துக்கணும்,'' என்றாள்.''வேணாம்மா... நான் எதையும் எதிர்பார்த்து, இத செய்யல... ஒரே ஒரு வேண்டுகோள், 'ஐயா, கலெக்டர் ஆபீசுல இருக்காரு, நீங்களும் ரயில்வேல வேல பாக்குறீங்க... ஆனா, எங்கள மாதிரி ஏழைங்ககிட்ட, அஞ்சுக்கும், 10க்கும் பேரம் பேசுறீங்கம்மா...''போன மாசம் எங்கிட்ட, ஒரு பெரிய கத்தி வாங்கினீங்க; 100 ரூபாய் சொன்னேன். 80 ரூபாய்க்கு பேரம் பண்ணி, கடைசியில, 90 ரூபாய்க்கு வாங்கினீங்க... எனக்கு கிடைக்கிற லாபம், 20 ரூபாய்ல, 10 ரூபாயை இழந்துட்டு வித்துட்டு போனேன்... நீங்க, என்னை மறந்திருக்கலாம்... வர்றேம்மா,'' என்றார்.''ஐயா... என்னை மன்னிச்சிடுங்க. பெரிய பெரிய நகை கடைக்கும், ஜவுளி கடைக்கும் போய், சொன்ன விலையை கொடுத்து வாங்கறோம். பொழுதுக்கும் வெயில்ல அலைந்து திரியுற உங்ககிட்ட பேரம் பேசினது தப்பு தான். ஆனா, நீங்க எதையுமே மனசுல வச்சுக்காம, என், 10 சவரன் நகையை காப்பாத்தி கொடுத்துட்டீங்க... உங்களுக்கு ரொம்ப நன்றிங்க,'' கண்களில் நீர் திரையிட, அன்வர்பாயின் கைகளை இறுக பற்றிக் கொண்டாள், பத்மா.''ஐயா... இந்த, 100 ரூபாயை மட்டுமாவது வாங்கிங்க.''''எதுக்கும்மா?''''அந்த அயோக்கியன் மீது வீசினீங்களே ஒரு கத்தி, அதுக்கு ஒரு விலை உண்டுதானே!''''வேணாம்மா... அதுக்கு தான் போலீஸ்ல சன்மானம் குடுத்துட்டாங்களே... அது போதும் எனக்கு,'' என்று, சாணை மிஷினை துாக்கி, ரயில் நிலையத்தை நோக்கி நடந்தார், அன்வர்பாய்.ஆர். சேகர்