ஏற்றுங்கள் தீபம்
நவ., 25 திருக்கார்த்திகைஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், இறைவனை ஜோதியாக வணங்கி, போற்றி யுள்ளனர் தமிழர்கள். இவ்வழிபாட்டை, சங்ககால இலக்கியங்கள், 'கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிட்டுள்ளன. விளக்கு வழிபாடு செய்த நிகழ்வுகள், அகநானூறு மற்றும் நற்றிணை போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளன. கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு.கார்த்திகை தீபத்தன்று மட்டுமல்ல, எல்லா நாட்களிலுமே விளக்கேற்றுவது தமிழர் மரபு. தினமும், காலை, மாலை விளக்கேற்ற உகந்த நேரங்களாகும். சூரியோதயத்திற்கு முன், பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை, 4:30 - 6:00 மணி) விளக்கேற்றினால், பெரும் புண்ணியம் உண்டாகும்; முன்வினைப் பாவம் விலகும்.மாலையில் தீபமேற்றினால், திருமணம் மற்றும் கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். பொதுவாக மாலை, 6:00 மணிக்கு தான் நாம் விளக்கேற்றுகிறோம். இதற்கு பதில், மாலை, 4:30 - 6:00 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேளையில் விளக்கேற்றினால், சிவபெருமானும், நரசிம்மரும் நமக்கு அருளுவர். காரணம், அவர்களை வணங்க ஏற்ற நேரம் இவை!கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவது பற்றி சம்பந்தர் பாடியுள்ளார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்... என்று அவர் பாடுவதில் இருந்து, இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.தீபஜோதி என்பது அக்னி தத்துவம்; அக்னியின் சொரூபமாக, ஈசனின் நெற்றிக் கண் அமைந்துள்ளது. அதில் எழுவது சாதாரண தீ அல்ல; அது, அநியாயக்காரர்களைக் கொல்லும்; மற்றவர்களுக்கு ஞான ஜோதியாய் தெரியும்.ஆசையைத் தூண்டும் மன்மதனை, சிவபெருமான் எரித்தது ஞானத்தீயால் தான்! ஆசைகள் அதிகரிக்க அதிகரிக்க, பிறவிகளும் அதிகரிக்கும். அந்த ஆசைத்தீ அடங்க, சிவனின் நெற்றிக்கண்ணை நாம் தரிசிக்க வேண்டும். இதன்மூலம் பிறப்பற்ற நிலையை அடைந்து, நித்ய ஆனந்தத்தை அடையலாம்.திருக்கார்த்திகை திருநாளில், திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலை தீபம், சிவாம்சம் கொண்டதே! யாராலும் அணுக முடியாத ஞான மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் சிவன். அவர், பூலோக மக்கள் மீது கொண்ட கருணையால், தன்னை எளிமைப்படுத்தி, அருள்புரிவதற்காக நெருப்பு வடிவில் காட்சி தருகிறார்.சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டபோது, அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அவை சரவணப் பொய்கையில் சிறுகுழந்தையாக உருவெடுத்தன. அதுபோல, பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே, நம் வீட்டு சிறு அகல் விளக்குகளில் குட்டிக் குழந்தை முருகனாக ஒளி வீசுகிறது. வாசலில் கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்த பட்சம் ஆறு தீபங்களை ஏற்ற வேண்டும்.விளக்கு இல்லாவிட்டால், குடியிருக்கும் வீடு இருண்டு விடுவதைப் போல, மனம் என்னும் வீட்டில் ஒளி இல்லாவிட்டால், அநியாயங்களே வெளிப்படும். கணவர் மற்றும் பிள்ளைகள் தீய பழக்கங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் திருந்தி, நற்குணங்கள் பெற, பெண்கள் கார்த்திகை விரதம் இருப்பர்.திருக்கார்த்திகை தொடங்கி, ஓர் ஆண்டு, மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.கார்த்திகை திருநாளன்று தீபமேற்றி, பிரகாசமான வாழ்வைப் பெறுவோம். தி.செல்லப்பா