உள்ளூர் செய்திகள்

மங்கல மங்கை மீனாட்சி!

ஏப்., 23 - மீனாட்சி திருக்கல்யாணம்உலகத்தலைவியான பார்வதி, மதுரை மன்னனின் மகளாய் பிறந்தாள். அவளுக்கு தடாதகை, அங்கயற்கண்ணி, மீனாட்சி என்று பல பெயர்கள் உண்டு. சிவபெருமானும், சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் பூமிக்கு வந்தார். அவர் சொக்க வைக்கும் அழகைக் கொண்டவர் என்பதால், சொக்கநாதர் என்றும் பெயர் பெற்றார்.இந்த தெய்வங்களின் திருமணம், கயிலாயத்தில் நடந்ததாக புராணம் கூறுகிறது. அதை தேவர்களெல்லாம் பார்த்திருப்பர். பக்தியில் முழுமை பெறாத, ஏன்... பக்தியென்றால் என்னவென்றே அறியாத, சாதாரண ஜீவன்களான நம்மால் பார்க்க முடியுமா!முடியும் என்று காட்டத்தான், பூலோகம் வந்து திருமணம் செய்தனர். மலையத்துவஜ மன்னன், பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்தான். துவஜன் என்றால் கொடியை உடையவன் என்று அர்த்தம். பாண்டிய நாட்டில், மீன்கொடி அறிமுகமாவதற்கு முன், மலை தான் கொடியின் சின்னமாக இருந்தது. அதனால் தான் மலையத்துவஜன் என இவன் அழைக்கப்பட்டான். இவனது மனைவி காஞ்சனமாலை. காஞ்சனம் என்றால் தங்கம். தங்கமாலை போல் அழகுள்ளவள்.குழந்தை இல்லாத இவர்கள் யாகம் செய்த போது, யாகத்தீயில் இருந்து பார்வதிதேவி எழுந்தாள். அவளே இவர்களது குழந்தை யானாள். குழந்தை மீனாட்சி, தன் தோழியருடன், பூக்கள் நிறைந்த நந்தவனத்தில் விளையாடி மகிழ்ந்தாள். அவனியை (உலகம்) ஆளும் அரசி விளையாடிய, அந்த இடம், 'அவனியாபுரம்' என்று இப்போது அழைக்கப்படுகிறது. மீனாட்சி திருமணம் முடிந்ததும், சுந்தரேஸ்வரருடன், தாங்கள் விளையாடி மகிழ்ந்த இடத்திற்கு வர வேண்டும் என, தோழிகள் வேண்டிக் கொண்டனர். அவர்களும் வந்து தோழிகளை ஆசிர்வதித்தனர். அந்த இடத்தில் பிற்காலத்தில் கோவில் கட்டப்பட்டது. சுவாமியை, கல்யாண சுந்தரர் என்றும், அம்பாளை, பால மீனாம்பிகை என்றும் அழைக்கின்றனர்.மீனாட்சி கல்யாணத்துக்கு பொன்னை உருக்கி, திருமாங்கல்யம் செய்ய வேண்டுமே! அந்த மாங்கல்யம் செய்த இடம், 'திருமாங்கல்யபுரம்' என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில், 'திருமங்கலம்' என ஆனதாக, வரலாறு சொல்கிறது. மதுரை அருகே இந்த ஊர் இருக்கிறது. இந்த ஊரில், மீனாட்சிக்கு, மாங்கல்யம் செய்ததன் நினைவாக, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.மீனாட்சி பிறந்த போது, அவளுக்கு மூன்று தனங்கள் இருந்தன. இயற்கைக்கு மாறான இந்த நிகழ்வு குறித்து, பெற்றோர் வருந்திய போது, அசரீரி ஒலித்தது... 'மீனாட்சியை மணக்கும் கணவனை அவள் என்று சந்திக்கிறாளோ, அன்று அந்த மூன்றாவது தனம் மறையும்...' என்றது.ஏன் அம்பாள், மூன்றாவது மார்புடன் பிறந்தாள் என்ற கேள்வி, அனைவருக்குள்ளும் ஏற்படும். அவள் கருணைக்கடல். இந்த மண்ணிலுள்ள <<<உயிர்களையெல்லாம், தன் பிள்ளைகளாக அவள் கருதினாள். ஒரு பெண் கருவுற்றதுமே விம்முவது அவளது மார்பு தான். குழந்தை பிறந்ததும், அவள் அமுதத்திற்கு நிகராக பாலூட்டுகிறாள். அன்னை மீனாட்சியும், உலகப் பிள்ளைகளைக் காண வரும் போது, மகிழ்ச்சியால் விம்மினாள். மூன்றாவது மார்பு உருவானது. அவளது அருட்தன்மையை அது குறிக்கிறது.அதனால் தான் மதுரைக்கு பிழைப்புக்காக வந்தவர்கள், மீனாட்சியின் கருணையால், சிறப்பாக வாழ்வர் என்று கூறுவதுண்டு. சிறு வியாபாரம் செய்து, இன்பமாக வாழ்பவர்கள் மதுரையில் அதிகம். அதிலும், வியாபாரத்தில், பெண்களின் ஆதிக்கம் அதிகம். ஒரு சொலவடை கூட உண்டு... 'மதுரையை சுற்றிய கழுதை கூட எங்கேயும் போகாது' என்று. அந்தளவுக்கு வாயுள்ள, வாயற்ற ஜீவன்களுக்கெல்லாம், வாரித்தரும் வள்ளலாக, அன்னை மீனாட்சி அருள்கிறாள்.அவளை மரகதவல்லி என்பர். 'மரகதம்' பச்சை நிறமுடையது. மீனாட்சியும் கரும்பச்சை நிறமுடையவள். அவளது கணவர் சொக்கநாதரோ, சிவந்த நிறமுள்ளவர். நிறத்தைக் காரணம் காட்டி பெண்களை ஒதுக்கக் கூடாது என்று, உலகுக்கு முதன்முதலாக அறிவித்த உத்தமர். அதுமட்டுமா... அவர்கள், ஆண், பெண் பேதத்தை வேரறுத்து, சம உரிமையை நிலைநாட்டியவர்கள். ஆளுக்கு ஆறு மாதம் என, ஆட்சி செலுத்தியவர்கள்.மீனாட்சி திருமணத்தை, தரிசிக்கும் தம்பதிகள், விட்டுக்கொடுத்து செல்லும் மனப்போக்கை கைகொள்ள வேண்டும். எல்லாரும் மங்கல வாழ்வு பெற, அன்னை மீனாட்சி அருளட்டும்.***தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !