கன்னிகளுக்கு மாங்கல்யம்!
திருமணமாகாத பெண்களுக்கும் மாங்கல்யம் அணிவிக்கும் வித்தியாசமான வழிபாடு, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகிலுள்ள கீழையூர் கடைமுடிநாதர் கோவிலின், அபிராமியம்மன் சன்னிதியில் நடக்கிறது.படைக்கும் தொழிலை செய்த பிரம்மா, எல்லாமே தன்னால் தான் நடக்கிறது என்று ஆணவம் கொண்டார். எனவே, அவரை, பூலோகத்திற்குச் செல்ல, சபித்து விட்டார், சிவன். பூலோகம் வந்து, பல இடங்களில் சிவ பூஜை செய்தார். இத்தலத்துக்கு பிரம்மா வந்த போது, பூஜை செய்ய, லிங்கம் கிடைக்கவில்லை. எனவே, சிவனை மானசீகமாக வழிபட்டார். மகிழ்ந்த சிவன், அவருக்கு இங்கிருந்த கிளுவை மரத்தடியில் காட்சி தந்தார். தன்னை வழிபடுவோரை இறுதி காலம் வரை காப்பாற்றுபவராக அருளுவதால், கடைமுடிநாதர் என்று பெயர் ஏற்பட்டது.மேற்கு பார்த்த சிவன் கோவில்கள், தமிழகத்தில் குறைவு. அதில் இது ஒன்று. மேற்கு நோக்கிய தலங்களில் சிவன் உக்கிரமாக இருப்பார் என்பது ஐதீகம். எனவே, நமக்கு யாராவது அநியாயம் இழைத்தால், நியாயம் கிடைக்க, இவரை வணங்கலாம். மன்னர்கள், மேற்கு நோக்கிய சிவனை வணங்கிய பின், போருக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. காவிரியும் இங்கு மேற்கு நோக்கி ஓடுவது விசேஷம்.இக்கோவிலில் எல்லாமே விசேஷம் தான். மூலஸ்தானத்தில், சுவாமி, 16 பட்டைகளுடன் கூடிய ஷோடச லிங்கமாக இருக்கிறார். 16 செல்வமும் பெற, இவரிடம் வேண்டலாம். நவக்கிரக மண்டபம், எண்கோண வடிவ ஆவுடையார் மீது அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மற்ற இடங்களில் இருப்பதில்லை. கோவிலில் அமைந்துள்ள, தட்சிணா மூர்த்தியும், பைரவரும் இடது காதில் வளையம் அணிந்துள்ளனர். பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோவிலின் ஆதிமூர்த்தி. கடைமுடி விநாயகர் மற்றும் சுப்பிரமணியருக்கு சன்னிதிகள் உள்ளன.அம்பிகை அபிராமி, தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். திருமண தடை உள்ள பெண்கள், மஞ்சள் கயிற்றில் மஞ்சளைக் கட்டி அர்ச்சகரிடம் கொடுக்க, அதை அம்பிகைக்கு அணிவித்து பூஜை செய்து, அப்பெண்ணிடம் தந்து விடுவார்.கன்னிப்பெண்கள் அந்த மாங்கல்யத்தை அணிந்து, தங்களுக்கு அம்பாள் அருளால் திருமணம் நடந்து விட்டதாக பாவனை செய்வர். பிறகு அதைக் கழற்றி, திருவிளக்கின் முன் வைத்து வணங்குவர். இவ்வாறு செய்தால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியத்திற்காகவும், இதே சடங்கை செய்கின்றனர். அட்சய திரிதியை, மே 7 அன்று, இந்த சடங்கை செய்வது சிறப்பு.மயிலாடுதுறையில் இருந்து, 12 கி.மீ., துாரத்தில், கீழையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.தி.செல்லப்பா