உள்ளூர் செய்திகள்

அம்மா என்றால் அன்பு!

ஆக., 25 -கிருஷ்ண ஜெயந்திதாயை மகிழ செய்வதில் தான், பிள்ளைகளின் வாழ்க்கையே அர்த்தமுள்ளதாகிறது. கண்ணன் ஒரு தாயை அல்ல, மூன்று தாய்களை மகிழ்வித்தான். அவன் பிறந்ததோ தேவகி வயிற்றில்... வளர்ந்தது யசோதையிடம்!இவர்களைத் தவிர, இன்னொருத்தியையும் தன் தாயாக ஏற்றான், கண்ணன். அவளை, 'பொய்யான தாய்' என்று வர்ணிப்பர். காரணம், கண்ணனை கொல்வதற்காக கம்சனால் அனுப்பப்பட்டவள், அவள்!மதுராபுரியின் அரசனான கம்சன், தன் தங்கை மகனான கண்ணனால், தனக்கு அழிவு ஏற்படும் என்று நினைத்து, அவனை அழிக்க, பல்வேறு உத்திகளைச் செய்தான். எதுவுமே பலிக்காததால், ஒரு பெண்ணை அனுப்பி, தன் காரியத்தை நிறைவேற்ற முடிவு செய்தான். அரக்கியான அவள் பெயர் பூதனை; நினைத்த வடிவம் எடுக்கக் கூடியவள். மார்பில் விஷம் தடவி, தாய்ப்பால் கொடுப்பது போல நடித்து, கண்ணனைக் கொல்ல திட்டம் வகுத்தாள். அனைத்து உயிர்களின் இயக்கமாக இருக்கும் அந்த பரந்தாமன் இவ்விஷயத்தை அறிய மாட்டானா என்ன... பூதனையை எதிர்பார்த்து காத்திருந்தான், கண்ணன்.யசோதை வெளியே சென்றிருந்த சமயம், வீட்டிற்குள் வந்த பூதனை, குழந்தை கண்ணனை அள்ளி அணைத்து, மார்போடு சேர்த்து பாலுாட்ட துவங்கினாள்; பூதனையின் நோக்கம் தவறு என்றாலும், தன் பாலை, நைவேத்யமாக அளிக்க முன் வந்த அவளை, கண்ணனுக்கு பிடித்து விட்டது. அதனால், அவளுக்கு மோட்சம் அளிக்க விரும்பினான். பூதனையின் பாலைப் பருகுகிற சாக்கில், அவளது உயிரையும் சேர்த்து உறிஞ்சி விட்டான்; சொர்க்கம் போய் சேர்ந்தாள், பூதனை.கெட்டவர்கள், நல்லவர்களுடன் சேரும் போது, அவர்களது கெட்ட குணங்கள் அழிகின்றன என்பதை உலகிற்கு உணர்த்த, இந்த லீலையைச் செய்தான், கண்ணன்.அவனைப் பெற்றதால் தேவகிக்கும், வளர்த்ததால் யசோதைக்கும், பாலுாட்டியதால் பூதனைக்கும் முக்தி அளித்த உயர்ந்த உள்ளம் கொண்டவன், கண்ணன்.ஆவணி மாதம், தேய்பிறை அஷ்டமி திதியில் அவதரித்த கண்ணனுக்கு சீடை, முறுக்கு, வெண்ணெய் மற்றும் சில பண்டங்களை நைவேத்யம் செய்வது வழக்கம்.பள்ளிப் பருவத்தில், தன் நண்பன் சுதாமா எனும் குசேலனுடன் காட்டுக்கு விறகு பொறுக்கச் செல்லும் கண்ணன், புளியமரத்தில் ஏறி, புளியம் பிஞ்சுகளைப் பறித்து சாப்பிடுவான். இதை மையப்படுத்தியே, காஞ்சி மகாபெரியவர், கண்ணனுக்கு புளியம் பிஞ்சை நைவேத்யம் செய்வது வழக்கம்.நமக்கு உடலையும், உயிரையும் தந்தவள் தாய்; அவளைக் காப்பது நம் கடமை. கண்ணனைப் போல நாமும், நம் தாயை மட்டுமல்ல; பிற தாய்களையும் நம்மைப் பெற்றவராகவே எண்ணி மரியாதை செலுத்த, கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் உறுதி எடுப்போம்! தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !