நவராத்திரி
சுவாமி படங்களுக்கு சந்தனம், குங்குமம் வைக்கும் போது, கை விரலால் தொட்டு வைப்பதை விட, புதிய காட்டன் பட்ஸ் இரண்டு எடுத்து, அவற்றை சந்தனம் மற்றும் குங்குமத்தில் தோய்த்து, பின் பொட்டு வைத்தால், அழகாகவும், சிறியதாகவும் வைக்க முடியும். சந்தனமும், குங்குமமும் ஒன்றாக கலந்து விடாமலும் இருக்கும்!நவராத்திரி கொலு முடிந்ததும், இனி, அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்வோம் என நினைத்து, அலட்சியமாக பொம்மைகளை ஏறக்கட்டக் கூடாது. ஒவ்வொரு பொம்மையையும் பிரியத்துடன் எடுத்து, 'அடுத்த ஆண்டும் வாருங்கள்...' என்று மானசீகமாய் விடை கொடுத்து, நேர்த்தியாய் பேப்பரில் சுற்றி, வைக்க வேண்டும்.சாந்தசொரூபி, லட்சுமி தேவி, ஆயினும், ஒருமுறை அசுரனை வதம் செய்ததாக புராணம் கூறுகிறது. மஹாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் எனும் இடத்திலிருக்கும் லட்சுமி மிகவும் பழமையானவள். கோலாசுரனை வதம் செய்ததால், கோலசுர பயங்கரி என்றும் போற்றப்படுகிறாள். மும்பையில், கடற்கரையையொட்டி லட்சுமிக்கு தனி கோவில் உண்டு. இங்கு, மூன்று முகம் உள்ள தெய்வமாக, முகத்தை தவிர, மற்ற பாகங்களை மூடியபடி, காட்சி தருகிறாள், லட்சுமி. கி.பி.1761ல் கட்டப்பட்டது, இக்கோவில். சரஸ்வதி தேவி கையில் வீணையிருப்பது போல், குஜராத்தில் லட்சுமி கையில் வீணை இருப்பதை பார்க்கலாம். மஹாராஷ்டிராவில் தான்ய லட்சுமியாகவும், ராஜஸ்தானில், அன்னபூரணியாகவும் வழிபடப்படுகிறாள். வங்காளிகள் கோஜாக்ரபூர்ணிமா என்ற விரதம் இருந்து, லட்சுமியை வழிபடுகின்றனர். பில்லர்கள் எனும் பழங்குடியினரின் குலதெய்வம், லட்சுமி.துர்க்கை என்ற சொல்லுக்கு, ஆபத்துகளை நீக்குபவள் என்று பொருள். துர்க்கம் என்றால் கோட்டை என்று பொருள். எனவே, துர்க்கத்தை (கோட்டை) காப்பவள் துர்க்கையாவாள். துர்க்கம் என்பது மலையையும் குறிக்கும். எனவே, மலையில் உறைபவள் துர்க்கை. துன்பத்திலிருந்து தேவர்களை காத்தருளியதால், துர்க்கை என்றழைக்கப்பட்டாள். துர்கமன் என்ற அசுரனை அழித்ததாலும், துர்க்கை என்ற பெயர் உருவானது.