திண்ணை!
காது கேளாதவன், உலகத்தைப் பார்க்கிறான்; ஆனால், எதையும் கேட்க முடியவில்லை. திடீரென்று காது கேட்கிறது. 'இதுவரை, இத்தனை சத்தம் எங்கிருந்தது... நான் கேட்கவில்லையே...' என்று ஆச்சரியப்படுகிறான்.அதேபோல், உலகத்தில் உலவும் நல்ல எண்ணங்களையும், தீய எண்ணங்களையும் அறியக் கூடிய, சக்தியில்லாதபடி, ஆன்ம செவிட்டுத் தன்மை நமக்கு உள்ளது.இந்த ஆன்ம செவிட்டுத் தன்மையை, அகற்றி விட முடியுமானால், உலகமெங்கும் பரவி நிற்கும் எண்ணங்களை எல்லாம், அறியும் சக்தியை பெற்று விடுவோம். அப்போது, 'உலகில் இவ்வளவு தீமைகள் இருப்பதை அறியாமல் இருந்து விட்டோமே, இதை தடுக்க என்ன செய்யலாம்...' என்று யோசிப்போம்.பகல் முழுவதும், மனதில் துக்கம் நிறைந்திருந்தாலும், இரவில், அனைத்தையும் மறந்து தூங்குகிறோம். இதனால், உறக்கத்தை, ஒரு வரப்பிரசாதமாகவே எண்ணுகிறோம்.அதுபோல் தான், உலகில் தீய எண்ணங்கள் நிறைந்திருந் தாலும், அவற்றை அறியாமலிருந்து, மன சமாதானத்துடன் வாழ்வதற்காகவே, கடவுள், நமக்கு இந்த ஆன்ம செவிட்டுத் தன்மையை அருளியிருக்கிறார்.— 'ராஜாஜி சொன்ன உவமைகள்' நூலிலிருந்து...ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 12ம் தேதி, அமெரிக்கர்கள், கொலம்பஸ், தங்கள் நாட்டைக் கண்டுபிடித்த நிகழ்ச்சியைக் கொண்டாடுகின்றனர். இதில், ஒரு வேடிக்கை என்னவென்றால், கொலம்பஸ், அமெரிக்காவைக் கண்டுபிடித்தது அக்டோபர் 12ம் தேதி அல்ல; 23ம் தேதி.இப்போது, நாம் பின்பற்றி வரும் காலண்டர், போப்பாண்டவர் கிரகரி என்பவரால் வகுக்கப்பட்டது. கொலம்பஸ் இதைப் பற்றிக் கேள்விப்பட்டே இருக்க முடியாது. அவன் இறந்து, பல ஆண்டுகளுக்குப் பின் தான் இந்த காலண்டர் முறையே ஏற்பட்டது. அமெரிக்கக் குடியேற்றம், கிரகரி காலண்டரை, 1752ல் கடைபிடிக்கத் துவங்கியது. ஆனால், இதற்கும், பழைய முறைக்கும், பதினொரு நாட்கள் வித்தியாசம். எனவே, இப்போதுள்ள காலண்டர்படி பார்த்தால், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது, அக்டோபர் 23ம் தேதியேயாகும்.ராணி இசபெல்லா ஆதரவுடன், ஆகஸ்ட்3, 1492ல், 80 பேர்களுடன், மூன்று கப்பல்களில் புறப்பட்டான் கொலம்பஸ். புதிய உலகில், கொலம்பஸ் ஏற்படுத்திய குடியேற்றங்கள், ஏமாற்றமாகவே முடிந்தன. முதல் காலனியில் குடியேறியவர்களை எல்லாம், அங்கிருந்த பழங்குடியினர், கொன்று விட்டனர். இரண்டாவது குடியேற்றத்தின் போது, கவர்னருக்கு, கொலம்பசிடம் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக, பலவிதமான குற்றங்களைச் சாட்டி, கொலம்பசை கைது செய்து, ஸ்பெயினுக்கு அனுப்பி வைத்தான்.அறுபதாவது வயதில் கொலம்பஸ், புலம்புவோரும், போற்றுவோருமின்றி, இறந்து போனார். அவரால் கண்டுபிடிக்கப்பட்ட கண்டத்திற்கு, அவரின் பெயரை வைக்கவில்லை. அட்லஸ் தயாரித்தவரான, அமெரிக்கோ வெஸ்புகியின் பெயரைத்தான் வைத்தனர்.—'கண்டங்களும், நாடுகளும்' நூலிலிருந்து...இந்திராவின் மூத்த மருமகள் சோனியா; இளைய மருமகள் மேனகா. வீடு, சமையல் உள்ளிட்ட குடும்பப் பொறுப்புகளை, சோனியா கவனித்துக் கொள்வார். இந்திராவின் உரைகளுக்கு, மேற்கோள் தயாரித்துக் கொடுப்பது, மேனகாவின் வேலை. அதை, அவர் மகிழ்ச்சியோடு செய்து வந்தார்.கடந்த, 1977-ல், இந்திரா ஆட்சி அதிகாரத்தை இழந்தார். ஜனதா அரசு, அவர் மீது, தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இந்திராவின் குடும்பத்தில், எப்போதாவது, பெரிய சண்டை நடப்பது உண்டு. பெரும்பாலும், சஞ்சய் - மேனகா இடையே தான், சண்டை வரும். ஒருமுறை மேனகா, தன் திருமண மோதிரத்தைக் கழற்றி வீசியெறிந்து விட்டார். இந்திரா அதைக் கண்டு வேதனைப்பட்டார். அவருடைய தாய் கமலா நேருவின் மோதிரம் அது. இந்திரா, தன் தாயின் மீது கொண்டிருந்த அன்பின் அடையாளமாக, அந்த மோதிரத்தை பாதுகாத்திருந்தார். வீட்டுக்கு வந்த மருமகள், அதைக் கழற்றி எறிவதென்றால்...மாமியாரின் மனநிலையை உணர்ந்த சோனியா, அந்த மோதிரத்தை எடுத்து பத்திரப்படுத்தியதோடு, தாம், அதைப் பிரியங்காவிற்காக வைத்துக் கொண்டதாக, இந்திராவிடம் தெரிவித்தார். அந்த மோதிரம், இன்று பிரியங்காவின் கை விரலை, அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.— சி.எஸ்.தேவநாதன் எழுதிய, 'சோனியா காந்தி' நூலிலிருந்து.நடுத்தெரு நாராயணன்